குஜராத்: காட்டுப்பன்றி கடித்த இளைஞர், சிகிச்சையை பாதியில் நிறுத்தியதால் மரணம்
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கரிப்புரா கிராமத்தில் வசிக்கும் சுனிலை இரண்டு மாதங்களுக்கு முன் காட்டுப்பன்றி கடித்தது.
ரேபிஸ் அறிகுறிகளை ஒத்த நிலையில் காணப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். காட்டுப்பன்றி சுனிலின் கையில் கடித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். சுனில் இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடையத் தொடங்கியதும் சிகிச்சையை பாதியிலேயே கைவிட்டுள்ளார். ஆனால், அது சுனிலின் உயிரையே பறித்திருக்கிறது.
கரிப்புரா கிராமத்தைச் சேர்ந்த மாகன் சோலங்கி, "ஒருநாள் மாலை நேரம் சுனில் வெளியே சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பன்றி தாக்கியது. சுனிலின் கையில் பன்றி கடித்தது. அரசு மருத்துவமனையில் சுனிலுக்கு 10 தையல்கள் போடப்பட்டு எல்லா மருந்துகளும் கொடுக்கப்பட்டன. எனினும், சுனில் சிகிச்சையை முடிக்கவில்லை, நாட்கள் செல்ல செல்ல, அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. சுனில் மனநலம் பாதிக்கப்பட்டது போல நடந்து கொள்ள ஆரம்பித்தார்." என்கிறார்.
தொடர்ந்து பேசிய மாகன் சோலங்கி, "டிசம்பர் 6ஆம் தேதி, உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுவரிலும் தரையிலும் தலையை முட்டிக் கொள்ளத் தொடங்கினார். நாங்கள் உடனடியாக மருத்துவர்களை அழைத்தோம், ஆனால் அவர்களால் சுனிலைக் காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து தலையை தரை மற்றும் சுவரில் மோதியது அவரது மரணத்திற்கு வழிவகுத்துவிட்டது." என்கிறார்.
டிசம்பர் 6-ஆம் தேதி சுனில் உயிரிழந்தார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் ரேபிஸ் அறிகுறிகளை சுனில் வெளிப்படுத்த தொடங்கியதாக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
யாராலும் கட்டுப்படுத்த முடியாதவராக சுனில் இருந்துள்ளார். சுனில் தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க, குடும்பத்தினர் அவரை கட்டி வைத்துள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



