'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்

எப்ஸ்டீன் கோப்புகள், மோதி, காங்கிரஸ், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார்.

அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல், "இதுவொரு தேசிய அவமானம். பிரதமர் மோதி தாமாக முன்வந்து எங்களது மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று பதிவிட்டார்.

இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது, ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, "மின்னஞ்சலின் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் பிரதமர் மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலின் பிற தகவல்கள் தண்டனை பெற்ற குற்றவாளியின் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை, அவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூறியது என்ன?

எப்ஸ்டீன் கோப்புகள், மோதி, காங்கிரஸ், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய கோப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் மோதியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சனிக்கிழமை, காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "நரேந்திர மோதியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, சிறார் பாலியல் வன்கொடுமையாளர் மற்றும் மனிதக் கடத்தல்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஜூலை 9, 2017 அன்று ஒரு மின்னஞ்சலில் அதை எழுதியுள்ளார்..." என்று கூறியது.

"இந்தியப் பிரதமர் மோதி ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு அவர் சந்தித்த அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார். அதற்கு பலன் அளித்தது."

"'மோதி என்னிடம் ஆலோசனை பெற்று இஸ்ரேலுக்குச் சென்று அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடினார். அது பலன் அளித்தது என்றும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறியுள்ளார்'." என காங்கிரஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளது.

"நினைவில் கொள்ளுங்கள். இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 முதல் 6, 2017 வரை இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு எப்ஸ்டீன் இந்த மின்னஞ்சலை எழுதியுள்ளார். இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாகவே, ஜூன் 25-26, 2017-இல் மோதி அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞ்சலில் உள்ள தொடர்புகளை நாம் இணைத்தால், மோதி ஜூன் 2017-இல் அமெரிக்கா சென்று அங்கு எப்ஸ்டீனிடம் ஆலோசனை கேட்டார் என்பது தெளிவாகிறது."

"ஒரு வாரம் கழித்து (ஜூலை 4-6, 2017), மோதி இஸ்ரேலுக்கு வந்து, அறிவுறுத்தப்பட்டபடி அங்கு ஆடிப் பாடினார், காரியமும் முடிந்தது. பிரதமர் மோதிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆழமான மற்றும் நீண்டகால உறவு இருப்பது இப்போது தெளிவாகிறது, இது இந்தியாவிற்கு அவமானகரமானது. இது நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நற்பெயர் தொடர்பான விஷயம், இதற்கு பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும்."

மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ள காங்கிரஸ், "நரேந்திர மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகளைப் பெற்றார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு பயன் பெற மோதி இஸ்ரேலில் ஆடினார்? 'இது பலன் அளித்தது' என்று எப்ஸ்டீன் எழுதியுள்ளார்... இதன் பொருள் என்ன?"

"நரேந்திர மோதி ஜி, நாடு பதில்களைக் கோருகிறது. தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன உறவு?" என பதிவில் தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான புதிய கோப்புகள் வெளியீடு

எப்ஸ்டீன் கோப்புகள், மோதி, காங்கிரஸ், இந்தியா

பட மூலாதாரம், US Department of Justice

படக்குறிப்பு, பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 இல் சிறையில் இறந்தார்.

தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான புதிய கோப்புகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பகிரங்கமாக வெளியிடப்பட்டன.

எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற சட்டப்பூர்வ காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறவிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு, கணிசமான எண்ணிக்கையிலான கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கோப்புகளில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சிறைவாசம் பற்றிய தகவல்கள், உளவியல் அறிக்கை மற்றும் அவர் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மரணம் குறித்த விவரங்கள் உள்ளன. இது தவிர, எப்ஸ்டீனுக்கும் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் இடையிலான மின்னஞ்சல்களும் இதில் அடங்கும்.

பல மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலானவை மற்றும் எப்ஸ்டீனின் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவை வெளிப்படுத்துகின்றன.

புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபர் பற்றி நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் எப்ஸ்டீனுக்கு நண்பராக இருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த உறவு கசந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மறுத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுக்கும் உலகின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களும் அடங்கும்.

இந்த வழக்கில் மஸ்க் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எப்ஸ்டீன் தன்னை அவரது தீவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் அவர் முன்னதாகவே கூறியிருந்தார்.

இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியாவது இத்துடன் முடிவடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"இது மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணல் மற்றும் மறுஆய்வு செயல்முறையின் முடிவு, அமெரிக்க நீதித் துறையைப் பொறுத்தவரை அவர்களது பணி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது" என்று துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறினார்.

இருப்பினும், சரியான காரணமின்றி சுமார் 25 லட்சம் வரையிலான ஏராளமான ஆவணங்களை நீதித் துறை தடுத்து வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு