You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிறந்து 2 நாளே ஆன குழந்தையைத் தூக்கிவீசிய 19 வயது இளம்பெண் தற்கொலை முயற்சி
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
திருச்சியிலுள்ள ராமகிருஷ்ண தபோவனத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் சாலையில் பிறந்து இரண்டு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று டிசம்பர் 5ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
அந்த ஆண் குழந்தைக்குத் தாயான 19 வயது இளம்பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். என்ன நடந்தது?
குழந்தை அங்கிருப்பதைக் கண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபுவும் பொதுமக்களும், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக உள்ளதாக சுரேஷ் பாபு தெரிவித்தார்.
மேலும் சம்பவம் குறித்துப் பேசிய சுரேஷ் பாபு, “ராமகிருஷ்ண தபோவனத்திற்கு அருகே ஒரு பாலம் உள்ளது. அந்தப் பாலத்திற்குக் கீழே குழந்தை இருந்தது.
அதன்பிறகு, அதுகுறித்த மன உளைச்சலில் இருந்த சம்பந்தப்பட்ட இளம் பெண்ணும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவரும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,” எனக் கூறினார்.
மேலும், “திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் அச்சத்தில் இப்படிச் செய்துவிட்டார்கள். ஆனால் இப்போது தாய், சேய் இருவரும் நன்றாக உள்ளனர். இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை,” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் திருப்பத்துறை காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்துப் பேசிய காவல் ஆய்வாளர் பாலாஜி, “குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை விசாரித்தபோது, 19 வயது இளம்பெண் தான் குழந்தையின் தாய் எனத் தெரிய வந்தது.
விஷயம் தெரியவந்த பிறகு, குழந்தையைக் கைவிட்டதற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இப்போது இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” எனக் கூறினார்.
இதேபோல், சில நாட்களுக்கு முன்பு மும்பையில் பொரிவாலி மேற்குப் பகுதியில் பிறந்து நான்கு நாளே ஆன பெண் குழந்தை ஒன்று நடைபாதையில் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் இப்படிக் கண்டெடுக்கப்படும் இரண்டாவது குழந்தை என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
குழந்தையை மீட்ட காவலர், “பெண் குழந்தையின் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அதைத் தவிர அதன் உடலில் எந்தக் காயங்களும் இருக்கவில்லை. குழந்தையை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு அவர் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது,” என்று தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி குறிப்பிட்டது.
காதல், காமம், வாழ்க்கை குறித்த புரிதல்...
இப்படியான சம்பவங்கள் நிகழப் பெரும்பான்மை காரணம் பதின்பருவத்தினர் மத்தியில் காதல், காமம், வாழ்க்கை ஆகியவை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்கிறார் மனநல மருத்துவர் திவ்யபிரபா.
“கல்விமுறையைப் பொறுத்தவரை எந்தப் பள்ளியிலும் பாலியல் கல்வியை முறையாக க் கற்றுத் தருவதில்லை. எனக்குத் தெரிந்து பல மாணவர்கள், அறிவியல் பாடத்தில் வரும் இனப்பெருக்க மண்டலம் குறித்த பாடத்தைக்கூட சரியாகக் கற்பிப்பதில்லை எனக் கூறுகிறார்கள்.
பாலியல் கல்வி என்பது இனப்பெருக்கம் குறித்தது மட்டுமில்லை. அதில் காதல், காமம், சுகாதாரம், பாதுகாப்பு என்று அனைத்துமே வரும். அதைப் பற்றிய விழிப்புணர்வு கிடைத்தால், அதற்குண்டான தவறுகளை அதிகம் செய்துவிடுவார்களோ என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலியல் கல்வியைத் தருவது இத்தகைய தவறுகளைத் தடுக்கவே செய்யும்,” எனக் கூறுகிறார் திவ்யபிரபா.
“பள்ளிகளில் இதுதொடர்பான கல்வியை இன்னும் மேம்படுத்த வேண்டும். அரசு இதற்காக நிறைய விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் இப்படியாக பாதிக்கப்படும் இளம்பெண்களுக்கு, குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை மையங்களை நிறுவ வேண்டும்,” எனக் கூறுகிறார் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா.
மேலும், “குழந்தைகள் இன்றைய சூழலில் வீட்டில் இருப்பதைவிட வெளியில் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே சமூக சூழல் தான் இதில் அதிகம் பங்கு வகிக்கிறது. அவர்கள் கவனிக்கிறார்கள் என்றாலும், இன்றுள்ள ஊடகங்கள், சமூக சூழல் அனைத்தும் இத்தகைய விஷயங்களுக்குக் காரணமாகின்றன,” எனக் கூறுகிறார் ராதிகா.
ஆனால் இதில், பெற்றோரும் பெரும்பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் திவ்யபிரபா. “என்ன நடந்தாலும், நேரடியாக வந்து பேசும் அளவுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான வாய்ப்பை குழந்தைகளுக்குப் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அது இல்லையென்றால் குழந்தைகளால் சரியான முடிவை எடுக்க முடியாமல் போகும். சரியான நபரிடம் பேச முடியாமல் போவது, சரியான தகவல் கிடைக்காமல் போவது என்ற நிலையில், தவறான நபர்களிடம் ஆலோசனை பெறுவது, தவறான முடிவுகளை எடுப்பது போன்றவை நிகழ்கின்றன.
குழந்தைகள் நிச்சயாக வெளிப்படையாகப் பேசுவார்கள். அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். சில நேரங்களில், தெரியாமல் சிக்கியிருப்பார்கள், எப்படி அதிலிருந்து வெளியேறுவது எனத் தெரியாமல் இருக்கலாம்.
‘நீ இல்லையென்றால் செத்துவிடுவேன்’ என மிரட்டியதால் ஒப்புக்கொண்டிருக்கலாம். அதிலிருந்து எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் உறவைத் தொடரலாம். இப்படியான சூழல்களை அவர்கள் வெளிப்படையாகப் பேசும் சூழலை உருவாக்க வேண்டும், சரியாக வழிநடத்த வேண்டும்,” எனக் கூறுகிறார் திவ்யபிரபா.
மேலும், “பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்கு முறையாகக் கொடுப்பது, அவர்களைப் பற்றிய சுயபுரிதலை ஏற்படுத்துவது, வெளிப்படையாகப் பேசுவதற்கான பாதுகாப்பான சூழலை பெற்றோர்கள் உருவாக்குவது என்று அனைத்துமே இத்தகைய பிரச்னைகளில் வளர் இளம்பருவத்தினர் சிக்குவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” எனக் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்