டைட்டன் நீர்மூழ்கி விபத்தை ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் விபத்துடன் ஒப்பிட்டது ஏன்? - முழு விவரம்

டைட்டன் நீர்மூழ்கி புறப்படுவதற்கு முன்பாகவே அதுகுறித்துத் தான் வெளிப்படையாக அதிகம் பேசியிருக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கேமரூன் கூறுகிறார்.

டைட்டன் நீர்மூழ்கியின் விபத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். அப்போது, டைட்டானிக் கப்பல் எச்சரிக்கைகளை புறக்கணித்து முன்னேறியதோ, அதேபோல் டைட்டன் நீர்மூழ்கியும் எச்சரிக்கையை புறக்கணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று அவர் பேசியுள்ளார்.

சுற்றுலா, தொழில், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம், “இதைச் செய்திருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார். ஆனால், “அவர்கள் அதற்கான அங்கீகார சான்றிதழைப் பெறவில்லை என்பது அவருக்குத் தெரியாது.”

கேமரூன் டைட்டன் நீர்மூழ்கியின் துயர சம்பவத்தை டைட்டானிக் விபத்துடன் ஒப்பிடுகிறார். “இது புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகளால் நிகழ்ந்த சோகம்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் ராய்ட்டர்ஸிடம், “அந்த(டைட்டானிக்) கப்பல் கடலின் அடிப்பகுதியில் கிடக்கிறது. அதற்குக் காரணம் அதிலுள்ள பொருட்களின் தன்மை இல்லை. மோசமான அந்தக் கடல்வழியின் காரணமாகவே அங்கு கிடக்கிறது,” என்று கூறினார்.

“கேப்டனுக்கு அந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாதையில் பனிப்பாறைகள் இருந்தன. அது ஒரு அமாவாசை இரவு. அவர் எந்தக் காரணத்திற்காகவோ முன்னேறிச் சென்றார்.”

இப்போது அதே இடத்தில், “அதே மோசமான காரணத்திற்காக, டைட்டானிக்கின் சிதைவுக்கு அருகிலேயே இன்னுமொரு சிதைவு உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையே கடலுக்கு அடியில் பல மீட்டர் ஆழத்தில் உள்ள இறந்தவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வந்து அவர்களது குடும்பத்திடம் ஒப்படைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டைட்டன் நீர்மூழ்கியில் உள்ள அபாயங்கள் பற்றி எச்சரித்த ‘அந்தக் கடிதம்’

உலகின் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி விபத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஓஷன்கேட் நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஓஷன்கேட்டின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கூறியிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த சுற்றுலா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துக் கவலை தெரிவித்த முதல் நபர் ஜேம்ஸ் கேமரூன் இல்லை.

கடல் தொழில்நுட்ப சமூகம்(Marine Technology Society, MTS) கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓஷன்கேட் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கடிதம், “இந்த நீர்மூழ்கியின் பரிசோதனைக்கு ஓஷன்கேட் நிறுவனம் கடைபிடித்த அணுகுமுறை, எதிர்மறையான விளைவுகளை, மிதமானது முதல் ஆபத்தான விளைவுகள் வரையிலுமே ஏற்படுத்தலாம்” என்று குறிப்பிட்டது.

இதுதவிர, அமெரிக்க நீதிமன்ற ஆவணத்திலும் பாதுகாப்பு குறித்த கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டில், ஓஷன்கேட்டின் முன்னாள் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து எச்சரித்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முன்னாள் மெரைன் ஆபரேஷன்ஸ் இயக்குநர் டேவிட் லோக்ரிட்ஜ் விசாரணை அறிக்கையில் கவலை தெரிவித்திருந்தார்.

ஓஷன்கேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், லோக்ரிட்ஜ் மற்றும் கடல் தொழில்நுட்ப சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் குறித்துக் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

டைட்டன் நீர்மூழ்கியின் விபத்து நடந்தது எப்படி? அந்த மர்மத்தை வல்லுநர்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்துச் சிதறியதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், நீர்மூழ்கி வெடித்ததற்கான காரணத்தை நிபுணர்கள் எப்படி கண்டறிவார்கள்?

நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதில் அது சுக்குநூறாக போயிருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அப்படிச் சிதறிய அதன் பாகங்களைச் சேகரித்து அவற்றை நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்துவது இதில் முக்கியமான ஒரு பணியாக இருக்கலாம்.

ஆனால் நீர்மூழ்கியின் சிதறிய பாகங்களைத் தேடிக் கண்டெடுப்பது நிச்சயம் அவர்களுக்கு சவால் நிறைந்த பணியாகத்தான் இருக்கும். இருள் சூழ்ந்த ஆழ்கடலில், ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவிகள் (ஆர்.வி.ஓ.) மூலமே உடைந்து சிதறிய பகுதிகளைத் தேடி எடுக்க வேண்டியிருக்கும்.

இந்த விபத்துக்கான ஆய்வு பணியில் மற்றொரு முக்கியமான அம்சத்தையும் நிபுணர்கள் கருத்தில் கொள்வார்கள் என்று தெரிகிறது.

அதாவது, டைட்டன் நீர்மூழ்கி ஒவ்வொரு முறை கடலின் ஆழமான பகுதிக்குச் செல்லும்போதும், அதன் மீது செலுத்தப்பட்ட அபரிமிதமான கடல்நீரின் அழுத்தம், நீர்மூழ்கியின் அளவை தொழில்நுட்பரீதியாகச் சற்று சுருக்கி இருக்கக்கூடும்.

நீரின் அழுத்தம் குறைந்து, நீர்மூழ்கி மேற்பரப்புக்கு வரும்போது அது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும். ஆனால், நீரின் இந்த அழுத்தம் தொடர்ந்து கொடுக்கப்படும்போது, அதன் விளைவாக நீர்மூழ்கி பலவீனமடைந்து அதில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.

எனவே ஒவ்வொரு முறை நீர்மூழ்கி கடலுக்குள் சென்று மேலெழும்பும்போதும், அதன் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து முறையாக மதிப்பிடப்பட்டதா என்பது குறித்தும் நிபுணர்கள் ஆராய வேண்டியிருக்கும்.

நீர்மூழ்கி வெடித்திருக்கும் என்பதை முன்னரே உணர்ந்தேன்: டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்

நீர்மூழ்கியை இழந்துவிடுவோம் என்பதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

டைட்டானிக் கப்பலைக் காண கேமரூன் இதுவரை 33 முறை சென்று வந்திருக்கிறார்.

நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் வழி ஆகியவற்றைக் கொண்டு பேரழிவு நடந்திருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

"என்ன நடந்தது என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன். நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது"

"ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் உள்ள எனது தொடர்புகள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் வழிதவறினர். அப்போது 3500 மீட்டர் ஆழத்தில் இருந்தனர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்"

"அவர்களின் தொடர்பு சாதனங்கள் தொலைந்துவிட்டன, வழிசெலுத்தும் அமைப்பு தொலைந்துவிட்டது. நான் உடனடியாக சொன்னேன், ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது. அப்போது எனது நினைவுக்கு வந்தது 'வெடிப்பு"

ஜேம்ஸ் கேமரூனின் விமர்சனத்திற்கு ஓஷன்கேட் இணை-நிறுவனர் பதிலடி

டைட்டன் நீர்மூழ்கியின் விபத்து குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள ஓஷன்கேட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் கில்லெர்மோ சோன்லின், அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

ஓஷன்கேட் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் அங்கீகார சான்றிதழ் தொடர்பான விசாரணையின்கீழ் உள்ள நிலையில், அவரது இந்த எதிர்வினை வந்துள்ளது.

சோன்லின், 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்றாலும், அந்த நிறுவனத்தின் பங்குகள் சில அவர் வசம் இன்னும் உள்ளது.

பிபிசி ரேடியோ 4இன் நிகழ்ச்சியில் அவர், டைட்டனின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் அது பற்றிய முழுமையான தகவல்கல் இல்லை என்று கூறினார்.

விமர்சித்தவர்களில் டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் ஒருவர்.

சோன்லின், “மக்கள் சான்றிதழை பாதுகாப்போடு தொடர்புபடுத்துகிறார்கள். அதோடு, டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்குவதற்கான 14 ஆண்டு செயல்முறையைப் புறக்கணிக்கிறார்கள்,” என்று கூறுகிறார்.

“ஜேம்ஸ் கேமரூன் உட்பட இதுகுறித்துப் பேசும் அனைத்து நிபுணர்களும் நீர்மூழ்கி உருவாக்கப்பட்டபோது அந்த இடத்தில் இருக்கவில்லை என்பதையும், பொறியியல் செயல்முறையின் ஒரு பகுதியாக அவர்கள் இருக்கவில்லை என்பதையும், அது நிர்மாணிக்கப்பட்டபோது அவர்கள் யாரும் நிச்சயமாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்வார்கள்,” என்று அவர் கூறினார். இந்த நீர்மூழ்கி கடுமையான தணிக்கை நடைமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

“கடலின் ஆழம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது.” ஆனால், ஆழ்கடல் உலகம் குறித்த ஆய்வில் ஈடுபடும் யாராக இருந்தாலும், “அவர்களுக்கு அங்கு என்ன மாதிரியான அழுத்தத்திற்கு நடுவே செயல்பட வேண்டும் என்பதும், எந்த நேரத்திலும் இத்தகைய அபாயம் இருக்கும் என்பதையும் அறிவார்கள்,” என்றும் சோன்லின் கூறுகிறார்.

தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செல்ல முடியும் என்று தான் நம்புவதாகவும் இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்கள், அபாயங்களைப் புரிந்துகொள்வது மற்றும் அதைக் குறைப்பதில் அதிக புரிதலைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

எப்படி விபத்து நடந்தது?

அமெரிக்க கடலோரப்படையின் ரியர் அட்மிரல் ஜான் மௌகரின் கூற்றுப்படி, அவர்கள் கண்டறிந்தது "நீர்மூழ்கியின் உள்லே இருந்து வெடிப்பு" நடந்திருப்பதைக் காட்டுகிறது.

ஏனென்றால், இரண்டு பாகங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று டைட்டனின் வால் கூம்பு மற்றும் மற்றொன்று அதன் தரையிறங்கும் சட்டகம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது கப்பல் சிதறியதாகக் தெரிய வருகிறது.

இது ஏன் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இதுவரை கிடைத்திருக்கும் பாகங்களைக் கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று மீட்புக் குழு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"கருப்புப் பெட்டி எதுவும் இல்லை, எனவே கப்பலின் கடைசி நகர்வுகளை உங்களால் கண்காணிக்க முடியாது," என்று அவர்கள் கூறுகிறார்கள். அதனால் விசாரணையின் செயல்முறை விமான விபத்து போன்றதாக இருக்காது.

புலனாய்வாளர்கள் கிடைத்திருக்கும் துண்டுகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்ததும், அந்த கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் அதை ஆய்வு செய்வார்கள்.

நீர்மூழ்கியின் பாகங்கள் நுண்ணோக்கின் கீழ் கவனமாக ஆராயப்படும். எந்த இடத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது, பிளவு எங்கே தொடங்கியது என்பது அதன் மூலம் கண்டுபிடிப்பார்கள்.

நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் யார் யார்?

காணாமல் போன நீர்மூழ்கியில் 3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஹாமிஷ் ஹார்டிங் - 58 வயதான இவர் பிரிட்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர். சாகசப் பிரியரான இவர் விண்வெளிப் பயணத்துடன், பல முறை புவியின் தென் முனைக்கும் சென்று திரும்பியுள்ளார்.

ஷாஸாதா தாவூத் - 48 வயதான இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் கோடீஸ்வரர்.

சுலேமான் தாவூத் - ஷாஸாதா தாவூத்தின் மகன், 19 வயதேயான இவர் ஒரு மாணவர்

பவுல் ஹென்றி நர்கோலெட் - 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் 'டைவர்' பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.

ஸ்டாக்டன் ரஷ் - 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி.

டைட்டானிக்கின் சிதைவுகளை காணச் சென்று இறந்த 5 பேரின் உடல்களை மீட்க முடியுமா?

கடலுக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் உள்ள உயிரிழந்தவர்களின் உடலை மீட்கப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்று அமெரிக்க கடலோரப் படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்கள், “கடலின் அடிமட்டத்தில் நம்ப முடியாத அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது” என்று தெரிவித்தனர். நிபுணர்களின் கருத்தும், கடலோரப் படையின் கருத்தை அமோதிப்பதாகவே உள்ளது.

பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தின் எடைக்கு சமமான நிறை நீர்மூழ்கியில் நிலவுகிறது என்று இதை விளக்குகிறார் கடல்சார் தன்னாட்சி அமைப்பின் பேராசிரியர் பிளேர் தோர்ன்டன்.

மேலும், நீர்மூழ்கியின் கட்டமைப்பு அதில் பயணித்தவர்களை காத்து வந்தது. ஆனால், கடல் நீரின் வேகமான ஓட்டத்தால் ஏற்படும் 10 ஆயிரம் டன் எடைக்கு இணையான சக்தி அந்தக் கட்டமைப்பை ஒரு நொடியில் என்ன செய்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

இறந்தவர்களின் உடலை மீட்கும் நோக்கில், அவர்களின் உடல்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உடனே செல்வது மிகவும் கடினம் என்கிறார் தடயவியல் மற்றும் மரபியல் பேராசிரியரான டெனிஸ் கோர்ட்.

எனவே சிறிய நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக, அதில் பயணித்து இறந்தவர்களின் உடல்களை அவர்களின் அன்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் மிக குறைவு என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: