காணொளி: 1990-களின் ஆஸ்திரேலியா போல் இந்தியாவும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துமா?
நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி மூன்றாவது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
உண்மையில் இந்தியாவின் வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை.
அமெரிக்காவுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் தடுமாறிய இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியிடம் தோல்வியைக் கண்டது. அப்போதிலிருந்து உள்ளூர் நிலைமைகளில் வெல்வதற்கான வாய்ப்புள்ள அணியாகவே அவர்கள் பார்க்கப்பட்டனர். டி20 கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய சிறந்த அணிகளில் ஒன்றாக தற்போதைய இந்திய அணி உள்ளது.
தென் ஆப்ரிக்கா அளித்த தோல்விக்குப் பிறகு இந்தியா விளையாடிய நான்கு போட்டிகளுமே நாக்-அவுட் போட்டிகள் தான்.
அந்தச் சூழலில் ஜிம்பாப்வே, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மூன்று முறை 250 ரன்களைக் கடந்திருந்தனர். முந்தைய 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளிலும் இது மாறுபட்ட இந்திய அணியாக உள்ளது.
இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளர் வடிவில் நவீன கால கிரிக்கெட்டின் அதிசயமான ஜஸ்ப்ரீத் பும்ரா இருக்கிறார்.
கடந்த கால சூப்பர்ஸ்டார்கள் இல்லாத அணி இது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரால் கூட்டுமுயற்சியில் கவனம் செலுத்த தூண்டப்படும் அணி இது.
சூர்யகுமாரும் இதற்கு முன்பு இருந்த கேப்டன்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கிறார். மிகவும் தாமதமாக அறிமுகமான சூர்யகுமார் தனது 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது தனது ஐபிஎல் அணியின் கேப்டனாகக் கூட இல்லை.
இதற்கு முன்னதாக கபில் தேவ், தோனி மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே இந்தியாவுக்கு உலக கோப்பை வெற்றியைப் பெற்றுத் தந்தனர். மூவருமே இந்திய விளையாட்டில் ஈர்ப்பின் மூலம் வழிநடத்திய கேப்டன்கள்.
டி20 போட்டிகளின் உச்சத்தில் இருக்கும் இந்திய அணி ஏற்படுத்தியிருக்கும் இடைவெளியை நிரப்புவதே மற்ற அணிகளின் பணியாக இருக்கும்.
மூன்று முறை சாம்பியன், டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணியாக உள்ள இந்திய அணிக்குச் சாதகமாகவே அனைத்தும் நடக்கின்றன.
இளம் அணி மற்றும் ஐபிஎல்-இல் வளர்க்கப்படும் திறமைசாலிகள் மற்றும் அந்தத் தொடர் வழங்கும் பணத்தின் பலன்கள் இந்திய அணிக்கு கிடைக்கின்றன. இதோடு சர்வதேச விளையாட்டு வருவாயில் மற்றவர்களைவிடவும் பெரும் பங்கு பிசிசிஐ-க்கு கிடைக்கிறது.
2024-இல் டி20 உலக கோப்பையை இந்தியா வென்றபோது ஐசிசி கோப்பைக்கான 13 வருட காத்திருப்பு முடிவுற்றது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது.
கடந்த நான்கு ஐசிசி தொடர்களில், 34 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. அவர்களை எட்டிப்பிடிப்பது எளிமையான பணியாக இருக்காது.
முழு விவரம் காணொளியில்....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



