பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?

    • எழுதியவர், அலெக்ஸ் ரைலி
    • பதவி, பிபிசி நியூஸ்

அதிகரித்து வரும் வறட்சிகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க, விஞ்ஞானிகள் ஒரு சிறிய குழுவை சேர்ந்த தாவரங்களின் மரபணுக்கள் உதவும் என்று எதிர்பார்க்கின்றனர். அவை பல மாதங்கள் வரை வறட்சியைத் தாக்குப்பிடித்து, பின்னர் சில மணி நேரங்களுக்குள் மீண்டும் பசுமையாகக் கூடும்.

1970 களில் தென்னாப்பிரிக்காவில் தனது குழந்தைப் பருவத்தில் ஜில் ஃபாரண்ட் முதன்முதலில் தன்னைச் சுற்றியுள்ள பல தாவரங்கள் இறந்த பின்னர் மீண்டும் உயிர் பெறுவதை கவனித்தார்.

இந்த தாவரங்கள், தண்ணீர் இல்லாமல் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல் வாழ முடியும் என்பதை அவர் பின்னர் கற்றுக்கொண்டார். அவற்றின் இலைகள் பழுப்பு நிறமாகவும், தொட்டால் நொறுங்கக் கூடியதாகவும் மாறும், ஆனால், தண்ணீர் கிடைத்தால், அவை சில மணி நேரங்களுக்குள் மீண்டும் பச்சை நிறமாக மாறும். ஒரே நாளில், அவை தங்கள் முந்தைய பசுமையான நிலைக்கு திரும்பிவிட்டன.

பாசிகள், பெரணிகள் மற்றும் பூக்காத பிற தாவரங்களிடையே இத்தகைய லாசரஸ் போன்ற திறன் பொதுவானதாக இருந்தாலும், இந்த "உயிர்த்தெழுதல் தாவரங்கள்" ஆஞ்சியோஸ்பெர்ம்கள் அல்லது பூக்கும் தாவர வகையை சேர்ந்தவை. அறியப்பட்ட 352,000 பூக்கும் தாவரங்களில் 240 மட்டுமே உயிர்த்தெழுதல் தாவரங்கள். இவை பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் பாறை சரிவுகள் அல்லது சரளை மண்ணில் வளர்வதைக் காணலாம். இவை பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன. ஒவ்வொன்றும் தண்ணீர் இல்லாமல் வாழும் திறனை சுயாதீனமாக பரிணமித்துள்ளன. ஆனால், இந்த ஜாம்பி போன்ற தந்திரத்திற்கு அவை பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியானதாக உள்ளன. வறட்சியை சமாளிக்க மூதாதையர்களின் கருவித்தொகுப்பு ஒன்றை அவற்றின் டி.என்.ஏவுக்குள் இருந்து மீட்டெடுக்க முடியும் என்பது போல.

இப்போது கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் வறட்சி சகிப்புத்தன்மை பேராசிரியராக இருக்கும் ஃபாரண்ட், இந்த அசாதாரண தாவரங்களை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறார். பல ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, அவர்களின் மரபணுக்களில் காணப்படும் வறட்சியை எதிர்க்கும் சக்திகள் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் விவசாயத்தை மாற்றியமைக்க முக்கியமாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

தாவரங்கள் தண்ணீர் இல்லாமல் பல மாதங்கள் உயிர்வாழ்வது அறிவியல் புனைகதை போல் தோன்றலாம். பெரும்பாலான தாவரங்கள் 10-30% நீர் இழப்பை அனுபவிக்கும் போது இறந்துவிடுகின்றன. ஆனால் உயிர்த்தெழுதல் தாவரங்கள் 95% க்கும் அதிகமான நீர் இழப்பைத் தாங்கும் திறன் கொண்டவை.

ஆனால் இந்த உயிரினங்களுக்கு வறட்சியைத் தாங்கும் திறன் மட்டும் முக்கியமல்ல என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் மக்காச்சோள விஞ்ஞானி கார்லஸ் மெஸ்ஸினா கூறுகிறார். வறட்சியைத் தொடர்ந்து உயிர்த்தெழும் தாவரங்கள் எவ்வாறு மீண்டும் வளர்கின்றன என்பதும் முக்கியம்.

மக்காச்சோள செடிகள் வறட்சிக்குப் பிறகும் உயிர் வாழக் கூடும், "ஆனால் அவை மீண்டும் உயிர்பெறும்போது, அவை முன்பு இருந்த அதே இலை கட்டமைப்பை பெறாது. கரியமிலவாயு மற்றும் நீரின் ஓட்டம் அனைத்தும் குழம்பிபோயிருக்கும்", என்று அவர் கூறுகிறார். எனவே மழை திரும்பிய பின்னரும் வறட்சி அவற்றின் வளர்ச்சியை பாதிக்கிறது.

ஆனால் உயிர்த்தெழுதல் தாவரங்கள் "வறட்சிக்கு முன்பு இருந்த வடிவத்திற்கு திரும்பி வருவதாகத் தெரிகிறது" என்று அவர் கூறுகிறார். "அதைச் செய்யும் மக்காச்சோளத்தை நம்மால் உருவாக்க முடிந்தால், அது அற்புதமானது, ஏனென்றால் அதன் உற்பத்தித் திறனை மீண்டும் பெற முடியும்." என்கிறார்.

உயிர்த்தெழும் தாவரங்கள் என்ன செய்கின்றன?

உயிர்த்தெழுதல் தாவரங்கள் குறைந்து வரும் தண்ணீருக்கு பதிலாக சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளை பயன்படுத்த தொடங்கும். இதன் மூலம், அவற்றின் உயிரணுக்களின் உட்புறத்தை பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, கண்ணாடி போன்ற பொருளாக மாற்றும். இது தாவரத்தின் உள்ளே நிகழும் வேதியியல் எதிர்வினைகளை குறைக்கிறது. விட்ரிஃபிகேஷன் என்று அழைக்கப்படும் அதே உத்தி டார்டிகிரேட்ஸ் (நீர் கரடிகள்) மற்றும் ஆர்டீமியா இறால் (கடல் குரங்குகள்) முட்டைகள் போன்ற வறட்சி-சகிப்புத்தன்மை கொண்ட விலங்குகளால் பயன்படுத்தப்படுகிறது.

அவை கண்ணாடி தன்மைக்கு மாறும்போது, இந்த தாவரங்கள் அவற்றின் ஒளிச்சேர்க்கை இயந்திரங்களையும் (பச்சையம்) சிதைக்கின்றன, அவை செயலற்ற நிலைக்கு திரும்பும் போது அவற்றின் முதன்மை உணவு ஆதாரத்தை நிறுத்திவிடுகின்றன. புரதங்கள் மற்றும் உயிரணு சவ்வுகளின் கூட்டத்தை ஒன்றாக வைத்திருக்க, அவை "சாப்பரோன்ஸ்" எனப்படும் பாதுகாப்பு புரதங்களின் தொகுப்பை சுரக்கின்றன, ஏனெனில் அவை ஆபத்தான காலங்களில் உயிரணுவை வழிநடத்துகின்றன.

"அவர்கள் தங்கள் திசுக்களை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பது ஒரு அதிசயம்" என்று ஃபாரண்ட் கூறுகிறார்.

ஒரு விதத்தில், உயிர்த்தெழுதல் தாவரங்களின் திறன்களும் பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைகளின் திறன்களும் மிகவும் வேறுபட்டவை அல்ல. உலர்த்தப்பட்டு இருண்ட மற்றும் குளிர்ந்த இடத்தில் சேமிக்கப்படும்போது, பல விதைகள் பல ஆண்டுகளாக, சில நேரங்களில் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு புதிய தாவரத்தை உருவாக்குவதற்கான செய்முறையைப் பாதுகாத்து உயிர்வாழக்கூடும், வெப்பமும் தண்ணீரும் திரும்பும்போது அது உயிர்பெறும்.

ஆனால் முதல் பச்சை தண்டு வெளிப்பட்டவுடன், இந்த "வறட்சி சகிப்புத்தன்மை" இழக்கப்பட்டு, விரைவான வளர்ச்சி, அதிக மகசூல் மற்றும் அதிக சத்தான பழம் அல்லது விதைகள் கொடுக்கும் திறனே அதில் உள்ளது. இந்த திறன், நீர், மண் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உகந்த நிலைமைகளில் வளர்க்கப்படும் அதிக விளைச்சல் தரும் பயிர்களை அறிமுகப்படுத்திய 20-ம் நூற்றாண்டின் பசுமைப் புரட்சியினால் தீவிரப்படுத்தப்பட்டது.

வறட்சி எப்போதுமே விவசாயிகளுக்கு ஒரு பிரச்னையாக இருந்தபோதிலும், தொடர்ந்து கரியமில வாயு உமிழ்வு காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை நிலைமையை மிகவும் மோசமாக்குகிறது, குறிப்பாக மத்திய தரைக்கடல் மற்றும் மேற்கு வட அமெரிக்காவில். வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்பம் ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 16.6 பில்லியன் டாலர் (£12.9 மில்லியன்) பயிர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.சில காலநிலை மாதிரிகளின்படி, 2100 -ம் ஆண்டு வாக்கில் சப்-சஹாரா ஆப்பிரிக்கா(சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள ஆப்ரிக்க பிராந்தியம்) மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதி உணவு உற்பத்திக்கு பொருத்தமற்றதாக இருக்கும், இதில் பெரும்பகுதி வறட்சியால் தரிசாக மாறும்.

"கனடா மற்றும் சைபீரியாவில் மட்டுமே விவசாயம் சாத்தியமாகும்" என்று நெதர்லாந்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விதை விஞ்ஞானி ஹென்க் ஹில்ஹார்ஸ்ட் கூறுகிறார். கிரகத்தின் இந்த வடக்குப் பகுதிகள்தான் உலகிற்கு உணவளிக்க வேண்டும், வெப்பமண்டலங்கள் அல்ல.

விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் தீவிரமான மாறுதல்களைக் கூட இப்போது பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று ஃபாரண்ட் வாதிடுகிறார். "நமக்கு போதுமான உணவு கிடைக்காது," என்கிறார் அவர். "எனவே நாம் நம்ப முடியாத அளவிற்கு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்." என்கிறார்.

கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற மிகவும் பொதுவான பயிர் தாவரங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் நீர் பற்றாக்குறையை மேலும் தாங்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அதிக ஆழத்திற்கு வேரூன்றும் தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது ஆழமான நீர் இருப்புகளைக் கண்டறிய உதவுகிறது, அல்லது வேகமாக பூக்கும் தாவரங்களைத் தேர்ந்தெடுப்பது குறுகிய காலத்தில் விதைகளை உற்பத்தி செய்ய உதவுகிறது.

தீவிர வானிலை நிகழ்வுகள் மிகவும் பொதுவானதாகி வருவது மட்டுமல்லாமல், அவை மிகவும் கணிக்க முடியாதவையாகியும் வருகின்றன. குழப்பம் என்பது காலநிலை மாற்றத்தின் அடையாளம் என்று ஸ்காட்லாந்தில் உள்ள ஜேம்ஸ் ஹட்டன் இன்ஸ்டிடியூட்டின் மண் விஞ்ஞானி திமோதி ஜார்ஜ் கூறுகிறார். "இன்னும் நிறைய மாறுபாடுகள் உள்ளன.

"திடீரென உருவாகும் நீர் இல்லாத காலங்கள் – 'திடீர் வறட்சி' என்று அழைக்கப்படுகின்றன.அவை மிகவும் பொதுவானதாகி வருகின்றன. அதேபோல் மழை உறுதியாக பெய்யும் என்ற உத்தரவாதம் கொண்ட காலங்களிலும் வறட்சி ஏற்படுகிறது." என்கிறார் அவர்.

இதன் பொருள் வறட்சியைத் தவிர்ப்பது சாத்தியமற்றது. அதனால்தான் ஃபாரண்ட் மற்றும் பிற விஞ்ஞானிகள் சாதாரண உணவுப் பயிர்களில் உயிர்த்தெழுதல் தாவரங்களின் குறிப்பிடத்தக்க வறட்சி சகிப்புத்தன்மையை செயற்கையாக உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

அரிசி, மக்காச்சோளம் மற்றும் கோதுமைக்கு இத்தகைய திறமைகளை அறிமுகப்படுத்த "டிரான்ஸ்ஜெனிக்" மரபணு மாற்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கருதப்பட்டது, அதாவது தாவர ராஜ்ஜியத்தில் தொலைதூர உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏவை அவற்றின் மரபணுவில் அறிமுகப்படுத்துவது. வறட்சி சகிப்புத்தன்மையில் ஈடுபட்டுள்ள மரபணுக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வறட்சி உணர்திறன் கொண்ட பயிர்களில் செருகப்படும், இது கிரிஸ்பர் மரபணு எடிட்டிங் தொழில்நுட்பங்களின் சமீபத்திய வளர்ச்சியுடன் எளிதாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஃபாரண்டின் சமீபத்திய ஆய்வுகள், வறட்சி காலத்தில் உயிர்வாழப் பயன்படுத்தப்படும் பல மரபணுக்கள் பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைகளில் காணப்படும் அதே மரபணுக்கள் என்று கூறுகின்றன. எனவே, வறட்சியைத் தாங்கும் பயிர்களை உருவாக்க, புதிய மரபணுக்கள் எதுவும் தேவையில்லை; அவற்றின் விதைகளில் காணப்படும் அதே மரபணுக்களை முடுக்கிவிட்டு செயல்படுத்துவதன் மூலம், ஒரு முதிர்ந்த தாவரம் வறட்சி சகிப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இது மற்ற தாவரங்களிலிருந்து மரபணுக்களை செருகுவதற்கு பதிலாக, முளைத்தவுடன் உள்ளுக்குள் அமைதியாக இருக்கும் மரபணுக்களை செயல்படுத்துவதை உள்ளடக்கியிருப்பதால், இது வேறு சில மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் போல சர்ச்சைக்குரியதாக இருக்காது.

பாரிஸில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனத்தின் விதை உயிரியலாளர் ஜூலியா புய்டிங்க், இது ஒரு சாத்தியமான அணுகுமுறை என்று ஒப்புக்கொள்கிறார். இளம் நாற்றுகள் ஒரு எளிதான இலக்காக இருக்கக்கூடும், ஏனென்றால், முளைவிட்ட பிறகு வரும் வளர்ச்சியின் முதல் நிலை இதுவே. இந்த நிலையிலேயே வறட்சி சகிப்புத்தன்மையை நீட்டிப்பது மிகவும் சரியானதாக இருக்கும். பெரும்பாலான வறட்சி-சகிப்புத்தன்மை கொண்ட உயிரினங்கள் சிறிதாக இருப்பதால், இந்த நாற்றுகள் ஏற்கனவே இயற்கையில் காணப்படும் தாவர வகைகளுடன் பொருந்தும்.

இந்த நுட்பங்கள் உலகின் எந்த ஆய்வகத்திலும் சாத்தியமானவை என்றாலும், இந்தத் தாவரங்கள் வறட்சியிலிருந்து தப்பிப் பிழைக்கிற விதம், குறிப்பாக ஒவ்வொரு தகவமைப்பும் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பவை குறித்து நமக்கு போதிய அறிவு இல்லை. "முக்கியமான மரபணுக்கள் எவை என்று நமக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன்" என்று புய்டிங்க் கூறுகிறார்.

"வறட்சி இருக்கும் போது அவற்றை எவ்வாறு செயல்பட தூண்டுவது என்பது பிரச்னை. நமக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது." என்பது அவரது கருத்து.

எதை செய்தால் அவை செயல்படும் என்று நாம் இதுவரை அடையாளம் கண்டுள்ள மரபணு சுவிட்சுகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டவை அல்ல: வறட்சி சகிப்புத்தன்மையை தூண்டிவிட்டால், அதனுடன் கூடவே நிச்சயமாக தாவரத்தின் பல பகுதிகளை நீங்கள் மாற்றுவீர்கள் - மிக முக்கியமாக, அதன் விளைச்சலைக் குறைக்கலாம். "இது, பயிர்களுக்கு ஏற்பட கண்டிப்பாக நீங்கள் விரும்பமாட்டீர்கள்."

ஆனால் ஒரு "மாஸ்டர் சுவிட்ச்" - வறட்சி சகிப்புத்தன்மையைத் தூண்டுவதற்கான ஒரு மரபணு - கண்டுபிடிக்கப்பட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஒரு பிரச்னையாக மாறும் போது மட்டுமே அதை இயக்க முடியும். ஒரு உயிர்த்தெழுதல் தாவரம் நீண்ட வறண்ட பருவத்தில் மட்டுமே பழுப்பு நிற இலைகளாக சுருங்குவதைப் போலவே, ஒரு பயிர் ஒரு திடீர் வறட்சி வரும்போது மட்டுமே வறட்சி சகிப்புத்தன்மையை முடுக்கிவிடும்.

கென்யா மற்றும் ஸ்வீடனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 2018 ஆம் ஆண்டில் இதை தான் செய்தார்கள். ஜெரோபைட்டா விஸ்கோசாவிலிருந்து (சிறிய கருப்பு-குச்சி லில்லி என்றும் அழைக்கப்படும்) எனும் உயிர்த்தெழுதல் தாவரத்திலிருந்து ஒரு மரபணுவை சர்க்கரைவள்ளி கிழங்கில் அறிமுகப்படுத்தினர்.

ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பில் முக்கியமானதாக அறியப்படும் XvAld1எனப்படும் மரபணு, இந்த கிழங்கு தாவரங்களை 12 நாள் நீரிழப்பு பரிசோதனைக்கு மிகவும் உகந்ததாக ஆக்கியது. இந்த கிழங்குகளின் காட்டு வகைகளுடன் ஒப்பிடும்போது, அவை நீண்ட காலத்துக்கு பசுமையாக இருந்தன, குறைவான இலைகளை இழந்தன, தண்ணீர் இல்லாதபோது கூட உயரமாக வளர்ந்தன. முக்கியமாக, நீரிழப்பு சோதனை தொடங்குவதற்கு முன்பு அவை வேறுபடுத்தி பார்க்க முடியாததாக இருந்தன. அதாவது அவற்றின் வளர்ச்சி அல்லது இலை கட்டமைப்பில் மரபணு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை குறிக்கிறது.

உயிர்த்தெழுதல் தாவரங்களின் மரபணுக்கள் அராபிடோப்சிஸ் தாலியானா மற்றும் புகையிலை தாவரங்கள் உட்பட பிற தாவரங்களிலும் வறட்சி சகிப்புத்தன்மையை மேம்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது. இன்னும், எந்தவொரு மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் கடுமையான சட்ட திட்டங்களுக்கு (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில்) பொருந்த வேண்டியிருப்பதால், இன்று வளர்க்கப்படும் பயிர்களில் உயிர்த்தெழுதல் தாவரங்களின் இந்த குறிப்பிடத்தக்க பண்புகளைத் தூண்டுவதற்கான பிற வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளார் ஃபாரண்ட்.

நுண்ணுயிர் மனித ஆரோக்கியத்தில் சூடாக விவாதிக்கப்படும் தலைப்பாக இருப்பதைப் போலவே, வேர் நுண்ணுயிர் (அல்லது ரைசோஸ்பியர்) விவசாய அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பாக உள்ளது. வறட்சியைத் தாங்கும் திறன் இலைகள் மற்றும் தண்டுகளில் மட்டுமல்ல, வேர்களிலும் இருக்கலாம். "உயிர்த்தெழுதல் தாவரங்கள் அல்லது பிற தீவிர இனங்கள் போன்ற குழுக்களுக்கு [சாத்தியக்கூறுகள்] இருக்கக்கூடும்" என்று ஜார்ஜ் கூறுகிறார். "தீவிர வறட்சியை சமாளிக்கும் திறனுக்கு ஒரு நுண்ணுயிர் உறுப்பு இருந்தால், அதை பிற பயிர்களுக்கு மரபணு கூறுகளை விட மிக எளிதாக மாற்ற முடியும்." என்கிறார்.

இதைத்தான் ஃபாரண்ட் செய்ய முயல்கிறார். அவரது நண்பர்கள் ஷேண்ட்ரி தெபெல் மற்றும் ரோஸ் மார்க்ஸ் உடன் சேர்ந்து, அவர் மைரோதம்னஸ் ஃபிளாபெலிஃபோலியாவின் நுண்ணுயிரி குறித்த தகவல்களை சேகரிக்கத் தொடங்கினார். இது உயிர்த்தெழும் தாவரங்களில் கூட தனித்துவமானது. தென்னாப்பிரிக்காவில் சரளை மண்ணில் வளரும், இது இடுப்பு உயரம் வரை வளரக்கூடியது, தனிமையான ஒரு புல் பகுதி போல் அல்லாமல் ஒரு புதர் போன்றது. இது தண்ணீர் இல்லாமல் ஒன்பது மாதங்கள் அல்லது அதற்கும் மேல் உயிர்வாழ முடியும்.

2024 -ல் வெளியிடப்பட்ட எம். ஃபிளாபெலிஃபோலியாவின் வேர் நுண்ணுயிரி குறித்த ஆராய்ச்சியாளர்களின் முதல் கணக்கெடுப்பு, 900 க்கும் மேற்பட்ட தனித்துவமான பாக்டீரியா மற்றும் பூஞ்சை குழுக்களை வெளிப்படுத்தியது. இது மற்ற தாவரங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வறட்சியைத் தாங்கும் புரோபயாடிக் ஆக மாறக்கூடும்.

இருப்பினும், டெஃப் என்ற பயிரைப் பற்றிய ஃபாரண்டின் வேலை மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். டெஃப் இயற்கையாகவே குளூடன் எனும் புரதம் இல்லாத பயிராகும், எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்படுகிறது. நீர் பற்றாக்குறை சகிப்புத்தன்மை கொண்டுள்ளதன் காரணமாக இது மிகவும் நிலையான மற்றும் காலநிலை-எதிர்கொள்ளும் திறன் கொண்ட பயிர் என்று நீண்ட காலமாக பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஃபாரண்ட் சற்று மாறுபட்ட காரணங்களுக்காக இந்த தாவரத்தில் ஆர்வமாக உள்ளார்.

நெருங்கிய உறவினராக உயிர்த்தெழுதல் தாவரத்தைக் கொண்ட ஒரே பயிர் டெஃப் ஆகும். எராக்ரோஸ்டிஸ் நின்டென்சி - தெற்கு ஆபிரிக்கா முழுவதும் பாறை சரிவுகளில் வளரும் இடுப்பு உயர புல். வறட்சிக்கான எதிர்வினைகளில் இந்த தாவரங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது, எந்த மரபணுக்கள் இழக்கப்பட்டுள்ளன அல்லது அணைக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தக்கூடும். மேலும் இவற்றை டெஃப்பில் மீண்டும் செருக முடியுமா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். உயிர்தெழுதல் தாவரம் டெஃப்பின் நெருங்கிய உறவாக இருப்பதால், இது வெற்றிகரமாக ஒரு மரபணு மாற்றமாக இருக்க வாய்ப்புள்ளது.

இது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள பணியாகும். எனினும், சூரிய ஒளிக்கு எதிரான பாதுகாப்பு இரண்டு தாவரங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாகும் என்று தெரிகிறது. ஈ. நிண்டென்சி அதன் இலைகளுக்குள் ஆக்ஸிஜனேற்றிகளையும், அந்தோசயினின்களின் பூச்சையும் அதன் வெளிப்புற மேற்பரப்புகளில் உருவாக்குகிறது – அதாவது ஒரு தாவரத்தின் சன் கிரீம் இதுவென்று கூறலாம். டெஃப்புக்கு இந்த திறன் இல்லை. ஈ. நிண்டென்சி இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். நீர் நிரப்பப்பட்ட தாவரத்தின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம். ஆனால் வறட்சியின் போது அதே சூரிய ஒளி ஆபத்தானது, அது கட்டுப்பாடற்ற ஒளிச்சேர்க்கை, எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் உற்பத்தி மற்றும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சேதத்திற்கு வழிவகுக்கும். டெஃப்பிடம் இந்த திறன் இருந்தால், கடுமையான வறட்சியைத் தப்பிப்பிழைத்து மற்றொரு நாள் வளரக் கூடும்.

எனவே ரொட்டி மாவு தயாரிக்க அரைக்கப்பட்ட டெஃப்பின் சிறிய விதைகள், மிகவும் நிலையான விவசாயத்திற்கான திறவுகோலைக் கொண்டிருக்கக் கூடும். 20-ம் நூற்றாண்டின் பசுமைப் புரட்சியில் மக்காச்சோளம், அரிசி மற்றும் கோதுமை ஆகியவை அதிக விளைச்சலுக்காக வளர்க்கப்பட்டதைப் போலவே, டெப்ஃ போன்ற பயிர்கள் சற்று குறைந்த விளைச்சல் கொடுத்தாலும் அவை வறட்சியை தாங்கக் கூடியவையாக இருக்கும். "அவை குறைந்த விளைச்சலைக் கொண்டிருக்கலாம், ஆனால் வாழ்வாதாரத்துக்காக பயிர் செய்யும் விவசாயிக்கு ஒரு பயிர் உள்ளது, இது 10 நாட்களில் மழை பெய்கிறதா அல்லது இரண்டு ஆண்டுகளில் மழை பெய்கிறதா என்பதைப் பொருட்படுத்தாது." என்கிறார் ஃபாரண்ட்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு