You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிதானம், அதிரடி என சுப்மான் கில் காட்டிய கிளாசிக் 'மாயாஜாலம்'
தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்!
இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் சதம் அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரணமாகிவிட்டது என்பதையே சுப்மான் கில்லின் அதிரடி காட்டியிருக்கிறது.
ரோகித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என பலரும் தடுமாறிய ஒரு போட்டியில் சுப்மன் கில்லின் நீடித்த ஆட்டம் வியந்து பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக 208 ரன்களை அடித்த கில் அதற்காக 149 பந்துகளைச் சந்தித்தார். 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் ஆகியவை அவரது ரன் குவிப்பில் அடங்கும். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட ஒருநாள் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட மிகக் குறைவான ஒட்டுமொத்த ஸ்கோர் இதுதான். அந்த அளவுக்கு மற்ற வீரர்களைவிட தனித்து நின்று ஆடியிருக்கிறார் சுப்மான் கில்.
சுப்மன் கில்லின் ஆட்டம் 360 டிகிரி ஆட்டம் என்று கூற முடியாது. ஆனால் எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் அவர் ஆடியதை ஆடுகளத்தில் பார்க்க முடிந்தது. புல் ஷாட்களும், கவர் டிரைவ்களும் ஒரு கிளாசிக் கிரிக்கெட் வீரரை நினைவூட்டக்கூடியவையாக இருந்தன.
இரண்டு ஃபீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் துல்லியமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் அவரது ஆட்டம் நுட்பமாக இருந்தது. அவரது 19 பவுண்டரிகளில் பலவும் இப்படித்தான் வந்தன. ஃபேக்புட் பஞ்ச், ஆன் டிரைவ் போன்றவையும் அவரது ரன்குவிப்பின் அங்கங்கள்.
ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் 150 ரன்களை அடித்தவரும், 200 ரன்களை அடித்தவர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. ஜாம்பவான்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை இது. அதே போல் ஒரு நாள் போட்டியில் அதி வேகமாக 1000 ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் கில் படைத்திருக்கிறார். இதில் 4 ஆயிரம் ரன் முதல் 12 ஆயிரம் ரன் வரையிலான சாதனை விராட் கோலியிடம் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட ஆயிரம் ரன்களின் சாதனை சச்சின் டெண்டுல்கருடையது.
அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்திருக்கும் சுப்மன் கில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
நிதானம், பிறகு அதிரடி
டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். சுப்மான் கில்லும் ரோகித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார். மிகவும் நிதானமாகவும் நீடித்தும் இருந்தது இந்தக் கூட்டணி.
ஒப்பீட்டளவில் சுப்மான் கில் ரோஹித்தை விட மிகவும் மெதுவாகவே ஆடினார். பத்தாவது ஓவர் முடிவில் 30 பந்துகளைச் சந்தித்த அவர் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
13-ஆவது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்த பிறகு கில்லின் ஆட்டம் மேலும் நிதானமானது. ஆனால் 14-ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள், 15-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் என படிப்படியாக வேகமெடுத்தார் கில். அடுத்த ஓவரில் கோலி ஆட்டமிழக்க, கில் மீண்டும் நிதானத்தை கடைப்பிடித்தார்.
19-ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியைத் தொடங்கிய கில், அதன் பிறகு பல ஆட்டக்காரர்கள் வந்து போனபோதும் தனது பிடியை தளர்த்தவில்லை. அவ்வப்போது பவுண்டரிகள், மோசமான பந்துகளை சிக்சர்கள் என விரட்டினார்.
30 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 99 ரன்களைத் தொட்ட அவர் அடுத்த பந்திலேயே சதம் அடித்தார். அதற்கு அவருக்கு மொத்தம் 87 பந்துகள் தேவைப்பட்டன.
43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார். 48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார். 208 ரன்கள் அடித்த பிறகுதான் அவரை நியூஸிலாந்து வீரர்களால் வெளியேற்ற முடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்