You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அடுத்தடுத்து 8 வழக்குகள் பதிவு - சவுக்கு சங்கர் மீது பெண் காவலர்கள் தாக்குதலா?
முன்னாள் அரசு ஊழியரும் யூட்யூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய நிலையில், அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. சுமார் எட்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்ட்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்தச் சூழலில் இன்று மே 15-ம் தேதி திருச்சி மாவட்ட, முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த வழக்கில் ஆஜர்படுத்த இன்று காலை கோயம்புத்தூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் திருச்சி போலீசார் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் ஆய்வாளர் சரவணன் தலைமையில் 11 பெண் காவலர்கள் பாதுகாப்போடு சவுக்கு சங்கர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கூறியதாகவும் அப்போது பெண் காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தினத்தந்தி மற்றும் இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது. சவுக்கு சங்கருக்கு காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுக்கு சங்கர் நீண்ட காலமாகவே தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், அடுத்தடுத்த வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாக கண்டனச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும்" என இந்தக் கைது நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்
அதிமுக நேரடியாக கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் "சவுக்கு சங்கர் தனிப்பட்ட முறையில் காவல்துறையினர் குறித்து பேசியது தவறு. எந்த ஒரு அதிகாரியையோ, பொத்தாம்பொதுவாக காவல்துறையையோ தனிப்பட்ட முறையில் மோசமாகப் பேசுவது ஏற்க முடியாதது. ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு அவர் சிறையில் தாக்கப்பட்டது, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இப்போது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வது, குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் உள்நோக்கம் உடையது.அவர் தொடர்ந்து ஆளுங்கட்சியை விமர்சித்து வந்தார். இப்போது அவரைக் கைது செய்யும் வாய்ப்புக் கிடைத்தவுடன், அவரை முழுமையாக முடக்குவதற்காக இதைச் செய்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்வரை அவரை முடக்கி வைக்க நினைக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல காட்டிக்கொள்கிறார்கள்" என்றார்.
ஆனால், இந்தக் கைது நடவடிக்கைக்கும் தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்."சவுக்கு இப்போதுதானா தி.மு.கவை விமர்சித்துப் பேசுகிறார். தி.மு.க. என்றைக்கு ஆட்சியில் அமர்ந்ததோ, அப்போதிலிருந்து படுமோசமாக, தரமற்றவகையில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், தி.மு.க. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய பேச்சுகள் வெறுப்புப் பேச்சுக்கு ஒப்பானவை. கைதுசெய்யக்கூடிய வகையிலேயே அவர் பேசியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார். ஆகவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கைதை நீதிமன்றமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இது தி.மு.கவுக்கு சம்பந்தமில்லாத வழக்கு. சவுக்கு சங்கர் போன்றவர்களை தி.மு.க. ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
"இங்கே கருத்து சுதந்திரத்தின் எல்லையை தமிழ்நாடு காவல்துறைதான் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு மோசடிக்கும் ஒரு சட்டம் இருக்கிறது. அவதூறாகப் பேசினால் சிவில் அவதூறு வழக்குகளோ, கிரிமினல் அவதூறு வழக்குகளோ தொடரலாம். இதற்காகவெல்லாம் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
ஆனால், இது மிகச் சரியான நடவடிக்கை என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான ஜி. திலகவதி. "ஒருவர் காவல் துறையில் இருக்கும் அனைத்து பெண்களின் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் பேசும்போது வேறு எப்படிச் செயல்படுவது? காவல் துறையில் வேலைக்கு வரும் பெண்கள் பல தடைகளைத் தாண்டி வேலைக்கு வருகிறார்கள். இது ஒரு வழக்கமான பணியில்லை. கணவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, மாமியாருக்கு பதில் சொல்லிவிட்டு பணிக்கு வர வேண்டும்.காவல் துறை பணியும் மிகக் கடுமையானது. அப்படியிருக்கும்போது இவர் எல்லோரையும் பொத்தாம்பொதுவாக பாலியல் ரீதியாக குற்றம்சாட்டுகிறார். டிஎஸ்பி பணிக்கு வருபவர்கள், 'க்ரூப் 1' தேர்ச்சி பெற்று பணிக்கு வருகிறார்கள். அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இதுபோல பேசும் நபர்களை வேறு என்ன செய்வது? யு டியூபில் வேறு சிலரும் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்" என்கிறார் ஓய்வுபெற்ற டிஜிபியான திலகவதி.
சவுக்கு சங்கரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்றாலும், அரசு வழக்குகள் மூலமே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
"சவுக்கு சங்கரைப் பொருத்தவரை அவர் யாருடைய குரலாகவும் ஒலிக்கத் தயங்காதவர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அவர் ஆதரிக்கும் வகையில் பேசினார். கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி செல்லும் பெண் இறந்துபோனதை கொச்சைப்படுத்திப் பேசினார். அவர் மற்றவர்களைப் பற்றிப் தொனியே மிக மோசமாகவும் மிகுந்த அகங்காரத்துடனும் ஒலிக்கும்.ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசும் போது அதில் முறைப்படி வழக்குப் பதிவுசெய்து, தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசு என்பது மிக வலிமையானது. தனி மனிதர்கள் சிறியவர்கள். அவர்களை எதிர்கொள்ளும்போது அரசு அதற்கேற்ற வகையில் செயல்படவேண்டும். ஆனால், அவரை எந்தக் காலத்திலும் ஆதரிக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை" என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)