மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது மாதத் தவணையில் வீடு - எது சிறந்தது?

    • எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா
    • பதவி, பிபிசி தெலுங்குக்காக

மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் சிப் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பதன் காரணமாக தங்களது கார் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையே ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீடு. கார் வைத்திருப்பது என்பது ஒரு செலவு. நடுத்தர வர்க்கத்தின் தபால் அலுவலக அல்லது வங்கி சிறு சேமிப்புகளின் இடத்தை தற்போது மியூச்சுவல் ஃபண்ட் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், வளர்ச்சியடைந்த நகரங்களில் கார்களை ஆடம்பர பொருளாகக் கருதும் போக்கு வலுவாக உள்ளது. சிலர் மாறிவரும் பொது ரசனையை இது பிரதிபலிப்பதாகக் கூறுகிறார்கள். இந்த வாதங்களைப் பொருட்படுத்தாமல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் கார் விற்பனைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று பார்ப்போம்.

கார் கடன்களுக்கு ரூ.50,000 மாதத்தவணை

தற்போது கார் கடன்களுக்கான வட்டி 7.5 சதவீதமாக உள்ளது. ஏழு வருட கடன் காலத்தை கருத்தில் கொண்டால் ஐம்பதாயிரம் மாதத் தவணை செலுத்துபவரின் மொத்த கடன் தொகை 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

இந்தத் தொகையுடன் 20 சதவீத முன்பணம் சேர்த்தால், இவர் வாங்க வேண்டிய காரின் விலை 40 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஒரு பென்ஸ் காரின் விலையும் ஏறக்குறைய இதேதான். இந்த கணக்கீட்டின்படி, பார்த்தால் பென்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கூறியது நியாயமானதாகவே தெரிகிறது.

காப்பீடு, பெட்ரோல் மற்றும் சாலை கட்டணம் ஆகியவை மேற்கூறிய விலையில் இருந்து கூடுதலாக இருக்கும்.

கடந்த கோடையில் நம் நாட்டில் கார் கடன்கள் 20 சதவீத வளர்ச்சியைக் கண்டாலும் சொகுசு கார்களுக்கு வாங்கிய கடன் என்பது மிகவும் குறைவு.

கார் கடன் காரணமாக உங்களின் சிபில் மதிப்பெண் வெகுவாகக் குறையும். அதாவது அவசரகால கடனுக்கு நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

இதே 50,000 ரூபாயை மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் என்ன நடக்கும்?

12 சதவீத ஆண்டு வளர்ச்சி இருக்கும் போது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரிடம் 65 லட்சத்திற்கும் அதிகமான தொகை இருக்கும். அதில் வரியைக் கழித்துவிட்டால் ரூ.62 லட்சம் அவர் கைகளில் இருக்கும்.

இந்த முதலீட்டுத் தொகை கடன் வாங்குபவரின் சிபில் மதிப்பெண்ணை அதிகரிக்க மிகவும் உதவும். மற்ற கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தாதது போன்ற பிரச்னைகள் இல்லை என்றால் உங்களின் சிபில் மதிப்பெண் 770க்கு மேல் இருக்கும்.

இதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு 80சி பிரிவு மூலம் வருமான வரியிலிருந்து விலக்குப் பெறலாம்.

இதேபோல கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் வீட்டுக் கடன்.

பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது சொந்த வீடு வாங்குவது சிறந்ததா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. வீட்டுக் கடன் வட்டி 8-9 சதவீதம். மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வட்டி 12-15 சதவீதம் ஆகும். இரண்டையும் எப்படி ஒப்பிடுவது என்ற சந்தேகமும் பல முதலீட்டாளர்களிடையே உள்ளது.

இதற்குத் தெளிவான பதில் இல்லை என்றாலும், முடிவெடுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.

வீட்டுக்கடனுக்கு ரூ.50,000 மாதத்தவணை செலுத்தினால் என்னவாகும்?

முதலில் வீட்டுக் கடன் வாங்குபவர் தனது சொந்த உபயோகத்திற்காக வீடு வாங்குகிறாரா அல்லது வாடகைக்கு விட வீடு வாங்குகிறாரா என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் கொரோனா காரணமாக ரியல் எஸ்டேட் துறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சூழல்களில், வீட்டின் வாடகை மாதத் தவணையை விட மிகவும் குறைவாக இருக்கும்.

வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ஆண்டு வருமான வரியில் இரண்டு லட்சம் வரை விலக்கு பெறலாம். 30 சதவீத வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக அறுபதாயிரம் வரை சேமிக்கலாம்.

சொந்த உபயோகத்திற்காக வீடு வாங்கினால் அது நம் வாடகைச் செலவைக் குறைக்கும் என்பதால், அது ஓரளவு பலன் தரும்.

அதேபோல வீட்டுக் கடனும் உங்கள் சிபில் மதிப்பெண்ணை வெகுவாகக் குறைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 முதலீடு செய்தால் என்ன நடக்கும்?

ஆண்டு வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 10 சதவீத வரியைக் கழித்தால், உங்களிடம் நான்கு கோடியே அறுபது லட்சத்திற்கு மேல் இருக்கும். 12 சதவீத வருடாந்திர வளர்ச்சி எனும் போது, அது ஆபத்துகள் நிறைந்ததா என்ற சந்தேகம் எழுவது இயற்கையானது. ஆனால், வரவிருக்கும் தசாப்தங்களில் நம்முடைய நாட்டின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால் 12 சதவீத ஆண்டு வளர்ச்சி என்பது நியாயமான மதிப்பீடே.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்வது முதலீட்டுக்கான மாற்று வழியை உங்களுக்கு வழங்குகிறது.

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பத்து வருட காலக்கெடுவைத் தாண்டி இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நம் பணத்தை இழக்கும் ஆபத்து மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முதலீட்டுடன் உங்களின் சிபில் மதிப்பெண்ணும் அதிகரிக்கும். பத்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்தால் உங்களின் சிபில் மதிப்பெண் 800க்கும் அதிகமாக இருக்கும். அதன் மூலம் உங்களுக்குக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: