You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இலங்கையை புரட்டிப் போட்ட திட்வா புயல் - பாதிப்பு நிலவரம் என்ன?
மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் அவசரநிலை என இலங்கையே கடும் பேரிடரை எதிர்கொண்டு வருகிறது. திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. மக்கள் தங்களின் குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் இந்திய அரசும் மீட்பு பணிக்கு உதவி வருகிறது.
சமீபத்திய தகவலின்படி இன்று (நவ.30) முதல் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சேதம் குறைய வாய்ப்புள்ளதா? இலங்கையின் தற்போதைய நிலவரம் என்ன? 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் இந்தியா வழங்கும் உதவிகள் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
தற்போதைய நிலவரப்படி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, 228 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
காண்டி, பதுல்ல பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 9 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாட்டின் முக்கால்வாசி பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தகவல் பரிமாற்றத்திலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவுக்கான அபாயம் மேலும் அதிகரித்திருக்கும் என பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.
"கடந்த 18-ஆம் தேதி முதலே அறிவுறுத்தல்கள் வழங்கினோம். ஆனால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும் மக்கள் யாரும் வெளியேறவில்லை" எனத் தெரிவித்துள்ளது.
மழை இல்லாவிட்டாலும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று (நவ. 29) இரவு ரெஹ்ந்த போல (Rendapola), வெலிமடை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ராணுவக் குழுவினர், 3 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், 10 பொதுமக்களையும் மீட்டனர். இதில் சுமார் 5 பேர் புதைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
நிலச்சரிவு காரணமாக நுவர எலியா செல்லும் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
களனி ஆற்றின் நீரின் அளவு வேகமாக உயர்ந்து வரும் நிலையில் சில பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையில் தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக நாட்டில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய ரத்த மாற்று நிலையத்தின் இயக்குநர் டாக்டர் லக்ஷ்மன் எடிரிசிங்க தெரிவித்துள்ளார்.
சராசரியாக, ஒரு நாளைக்கு சுமார் 1400-1500 யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், தற்போதைய சூழலில் நடமாடும் ரத்த முகாம்களை நடத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.
தற்போது பேரிடரில் சிக்கியவர்கள் மீட்பதே பிரதானமாக உள்ளது. ராணுவம், பேரிடர் மீட்புப்படை, விமானப்படை என அனைவரும் துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் சிலாபம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்திய அரசும் 'ஆபரேஷன் சாகர்பந்து' என்ற பெயரில் மீட்பு பணிக்கு உதவி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு