ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

இலங்கையில் 2019, ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (12/01/2023) வழங்கியுள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தவிர்ப்பதற்குத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உயர்நீதிமன்றம் வழங்கியது.

இதன்படி, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கேற்ப, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மிலலியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நஷ்ட ஈடு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேபோன்று, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தால் 5 லட்சம் ரூபா வீதம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக 6 மாத காலத்திற்குள் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, எல்.ரி.பீ.தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ், சிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 8 தற்கொலை குண்டுதாரிகள் அடங்களாக 277 பேர் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலில் 40 வெளிநாட்டு பிரஜைகளும் 45 குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையிலுள்ள முக்கிய மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு நடத்தியமை, விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியிருந்ததுடன், அவரும் இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.

முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கும் இதனூடாக சேதம் விளைவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: