கோழி இறைச்சியை சமைக்கும் முன் கழுவுவது அவசியமா? சமூக ஊடகங்களில் முரண்பாடு ஏன்?

- எழுதியவர், எஸ்தர் கஹம்பி
- பதவி, பிபிசி குளோபல் ஹெல்த்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமைப்பதற்கு முன்பு நீங்கள் கோழி இறைச்சியை கழுவுவீர்களா?
இக்கேள்வி சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் அதிகாரப்பூர்வ உணவுப் பாதுகாப்பு ஆலோசனைகள் மிகவும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.பச்சைக் கோழியை ஒருபோதும் கழுவ வேண்டாம். ஏனெனில் அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை பரப்புகின்றன என்பது தான் அந்த ஆலோசனை.
ஆனால் உலகின் பல பகுதிகளில், கோழி இறைச்சியை கழுவுவது நீண்ட காலமாக பின்பற்றப்படும் ஒரு பண்பாட்டு பழக்கம்.
அது சுத்தம் மற்றும் பராமரிப்பு தொடர்பான கருத்துகளுடன் நெருக்கமாக தொடர்புடையதாக உள்ளது.
ஜமைக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி சமையல் கலைஞரும் எழுத்தாளருமான ஏப்ரல் ஜாக்சன் போன்ற சிலர், இந்த சர்ச்சையை ஆன்லைனில் கிளப்புவதை ரசிக்கிறார்கள்.
"சில வீடியோக்களில் நான் கோழியை கழுவுவது போன்ற காட்சிகளை வேண்டுமென்றே சேர்க்கிறேன், ஏனென்றால் அது ஒரு காரசாரமான தலைப்பு என்பது எனக்குத் தெரியும், நான் அதை ஒரு பாத்திரத்திலோ அல்லது சிங்கிலோ கழுவக்கூடாது என்று மக்கள் சொல்வார்கள். சிலர் இது அருவருப்பானது என்றும், அசுத்தமான பழக்கம் என்றும் கூறுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் மற்றவர்களோ, கழுவாத கோழியை சாப்பிடுவது சுகாதாரமற்றது என்று நம்புகிறார்கள்.
கண்டென்ட் க்ரியேட்டரான ஃபத்வா ஹிலிலி, தனது அம்மா பின்பற்றும் கோழி இறைச்சியை கழுவும் 10 படி செயல்முறையை விளக்கும் டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
மேலும் , சமூக வலைதளப் பதிவுகளுக்குக் கீழே மக்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் படிப்பது தனக்குப் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "இதன் காரணமாகத் தான் மற்றவர்களின் வீடுகளிலோ அல்லது அலுவலக விருந்துகளிலோ நீங்கள் சாப்பிடக்கூடாது என்று மக்கள் கூறுவார்கள் " என்கிறார்.
கழுவாத கோழி மீதான இந்த அவநம்பிக்கை ஆசியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சில மத்திய தரைக்கடல் கலாச்சாரங்களில் உள்ள பல குடும்பங்களில் காணப்படுகிறது.
ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைக் கண்டறிய பிபிசி உலக சேவை ஒரு உணவு அறிவியல் ஆய்வகத்திற்குச் சென்றது.

பட மூலாதாரம், Fadwa Hilili
கோழியைக் கழுவுவது ஏன் மிகவும் ஆபத்தானது?
பச்சைக் கோழியில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உள்ளன, இவை உணவு கெட்டுப் போவதற்கு காரணமாகின்றன.
"உங்கள் சமையலறையில் நீங்கள் கோழியைக் கழுவும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் அடங்கிய துளிகள் உருவாகின்றன. இவை நோயை உண்டாக்கக்கூடும்," என்று பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் உணவு நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் முனைவர் கிமோன்-ஆண்ட்ரியாஸ் கராட்சாஸ் கூறுகிறார்.
இந்தத் துளிகள், பாத்திரம் கழுவும் சிங்க், சமையல் மேடை மற்றும் அருகில் உள்ள உணவுகளின் மீது அதிக எண்ணிக்கையிலான கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களைப் பரப்பக்கூடும்.
இதனை விளக்க, கராட்சாஸ் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். அதில் ஒரு பச்சைக் கோழியின் மீது ஒரு வேதிப்பொருளைப் பயன்படுத்தினார், இது பாக்டீரியாக்களை புற ஊதா ஒளியின் மூலம் பார்க்க உதவியது.பின்னர் அவர் அந்தக் கோழியை 10 வினாடிகளுக்கும் குறைவாகக் குழாய் நீரில் கழுவினார். கோழியின் மீது விழுந்த நீர், சிங்க்கைச் சுற்றித் தெறித்தது.
வெறும் கண்ணால் பார்க்கும்போது, அவை எளிதில் துடைக்கக்கூடிய சாதாரண நீர்த்துளிகள் போலத் தெரிந்தன. ஆனால் புற ஊதா ஒளி 'குறுக்கு-மாசுபாட்டை' (cross contamination) வெளிப்படுத்தியது.
பாக்டீரியாக்கள் அடங்கிய அந்தத் துளிகள் சமையல் மேடை, பேராசிரியரின் ஆய்வகக் கோட், கேமரா, மற்றும் மிக முக்கியமாக, பச்சையாகச் சாப்பிடக்கூடிய லெட்டியூஸ் மற்றும் கேரட் ஆகியவற்றின் மீது படிந்திருந்தன.
இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டாலும், பாதிக்கப்பட்ட அந்த மேற்பரப்பில் வேறு உணவுகளை வைத்தால் உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம் என்பது தான்.
"சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் மூலம் நாம் நோய்வாய்ப்பட இது தான் பொதுவான வழியாகக் கருதப்படுகிறது. அதாவது, சமைக்கப்பட வேண்டிய ஒன்றில் உள்ள கிருமிகளை, பச்சையாகச் சாப்பிடப்போகும் ஒன்றின் மீது பரவச் செய்வதன் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது," என்று கராட்சாஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கேம்பிலோபாக்டர் ஏன் மிகவும் ஆபத்தானது?
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வயிற்றுப்போக்கு நோய்களுக்கான உலகளாவிய நான்கு முக்கிய காரணங்களில் கேம்பிலோபாக்டர் ஒன்றாகும்.
இது இரைப்பை குடல் அழற்சிக்கு மிகவும் பொதுவான பாக்டீரியா காரணமாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சிறு குழந்தைகளிடம் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.
இது சால்மோனெல்லாவை விட அதிக ஆபத்தானது.
ஏனெனில், தடுப்பூசி திட்டங்கள் மூலம் கோழிகளிடம் சால்மோனெல்லாவின் அளவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் கேம்பிலோபாக்டருக்கு எந்த தடுப்பூசியும் இல்லை.
இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இயற்கையாகவே கோழிகளின் குடல் பகுதியில் வாழ்கின்றன. கோழிகளை வெட்டும்போதும் மற்றும் பதப்படுத்தும்போதும், குடலில் உள்ள கழிவுகள் இறைச்சியின் மேற்பரப்பில் படிந்து அதனை மாசுபடுத்தக்கூடும்.
"உங்கள் கோழியில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கருதியே நீங்கள் எப்போதும் அதனை கையாள வேண்டும். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான கோழிகள் சுதந்திரமாக வளர்க்கப்படுபவை. அவை மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் வளர்க்கப்படாததால், அவற்றில் அதிகப்படியான சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் இருக்கும்"என்று கராட்சாஸ் கூறுகிறார்.
தொற்றை உண்டாக்கத் தேவையான கேம்பிலோபாக்டரின் அளவு மிகவும் சிறியது. ஒரு சொட்டு நீரில் சுமார் 10 டிரில்லியன் கேம்பிலோபாக்டர் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது இந்த பூமியில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை விட ஆயிரம் மடங்கு அதிகமாகும்.
மேலும், "ஒரு சிறிய துளி கேம்பிலோபாக்டர் அல்லது கோழியின் இறைச்சியிலிருந்து வரும் சாறு ஏதேனும் ஒரு பொருளின் மீது பட்டால் போதும், அது உங்களை மிக எளிதாக நோய்வாய்ப்படுத்திவிடும்," என்றும் கராட்சாஸ் குறிப்பிட்டார்.

தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?
பிரிட்டனில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கத்தின் உணவுத் தர நிர்ணய முகமை தெரிவிக்கிறது.
பாதிப்பு ஏற்பட்ட இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வழக்கமாகத் தோன்றும். இதில் அடிக்கடி ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்குப் பாதிப்புகள் தீவிரமாகவோ அல்லது நீண்ட நாட்களுக்கோ நீடிக்கலாம், அவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படும்.
சில நேரங்களில் இந்தத் பாதிப்புகள் இரிடபுள் பவல் சிண்ட்ரோம் , மூட்டுவலி மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் 'கய்லன்-பார் சிண்ட்ரோம்' எனப்படும் ஒரு வகை பக்கவாதம் போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கலாம்.
ஆனால், மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும், கோழி இறைச்சி தயாரிக்கும் முறைக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுவதில்லை.
பல தொற்றுநோய்கள் முறையாகக் கண்டறியப்படுவதில்லை என்றும், யாராவது ஒருவர் மருத்துவ சிகிச்சைப் பெற்று, சோதனைக்காகத் தனது மாதிரிகளை வழங்கினால் மட்டுமே அந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கில் சேர்க்கப்படுகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"நாம் வெளியே தெரியும் சிறு பிரச்னையை மட்டுமே பார்க்கிறோம், உண்மையான பாதிப்புகள் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்," என்று கராட்சாஸ் கூறுகிறார்.
மக்கள் ஏன் இன்னும் கோழியைக் கழுவுகிறார்கள்?
2024-ஆம் ஆண்டு 'ஃபுட் கன்ட்ரோல்' அறிவியல் இதழில் வெளியான ஆய்வின்படி, தென்கிழக்கு ஆசியாவின் எட்டு நாடுகளில் பதிலளித்தவர்களில் 96% பேர் தங்கள் கோழி இறைச்சியை கழுவுவதாக கண்டறியப்பட்டது.
கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், 39% முதல் 70% வரையிலான நுகர்வோரும் தாங்கள் அவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளனர்.
மேற்கத்திய உலகின் பெரும்பகுதிகளில், கோழி இறைச்சியானது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட தொழில்முறை சூழலில் பதப்படுத்தப்பட்டு, ஏற்கனவே சுத்தமான நிலையில் விற்கப்படுகிறது.
இருப்பினும், பல பிராந்தியங்களில் கோழி இறைச்சியானது உள்ளூரிலேயே, சில சமயங்களில் திறந்தவெளிச் சந்தைகளில் வெட்டப்படுகிறது. அங்கு சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமான வசதிகள் மாறுபடலாம். அத்தகைய சூழ்நிலைகளில், கோழியைக் கழுவுவது அவசியமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது.
மற்ற சிலருக்கோ, இது வெறும் சுகாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. அது அவர்களின் அடையாளம், வளர்ப்பு மற்றும் வீட்டுடன் உள்ள தொடர்பையும் குறிக்கிறது.

பட மூலாதாரம், April Jackson
சமையல் கலைஞர் ஜாக்சன் முதன்முதலில் பிரிட்டனுக்குச் சென்றபோது, பச்சைக் கோழியைக் கழுவ வேண்டாம் என்று எச்சரிக்கும் பேக்கேஜிங்கைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.
அந்தப் புகைப்படத்தை ஜமைக்காவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பும் அளவிற்கு அவர் வியப்படைந்தார்.
அறிவியலைத் தான் புரிந்துகொள்வதாக அவர் கூறுகிறார்.
இருப்பினும், "நாங்கள் கோழியைக் கழுவும்போது, தண்ணீர் மிகவும் மங்கலாக மாறுவதைக் காணலாம். அது மிகவும் அசுத்தமாகிறது, கலாச்சார ரீதியாக நாங்கள் அதைச் சாப்பிட விரும்புவதில்லை," என்று அவர் விளக்குகிறார்.
கோழியை எப்படிக் கழுவுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று பலர் குறிப்பிட்டனர். பிபிசி பேசிய இரண்டு சமையல் கலைஞர்களும் கோழியை ஒரு பாத்திரத்தில் வைத்து, பெரும்பாலும் வினிகர் அல்லது எலுமிச்சை சேர்த்து கழுவுகிறார்கள். பின்னர் அந்தப் பகுதியை முழுமையாகச் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்கிறார்கள்.
"எனது அம்மா சிங்க் பகுதியை வெந்நீர் மற்றும் சோப்பு கொண்டு முழுமையாகச் சுத்தம் செய்வார், பின்னர் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு ஸ்ப்ரேயையும் பயன்படுத்துவார்," என்கிறார் ஹிலிலி.
கோழியைக் கழுவ வேண்டாம் என்ற பொதுவான ஆலோசனை, உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் உள்ள பெரிய முரண்பாட்டை காட்டுகிறது என்று கோழி இறைச்சியை கண்டிப்பாக கழுவ வேண்டும் என உறுதியாக நம்புபவர்கள் கூறுகின்றனர்.
"உதாரணமாக, கோழி இறைச்சி வைக்கப்பட்ட ஒரு பலகையை நீங்கள் கழுவும்போது, அதே அபாயம்தான் இங்கும் பொருந்தும்," என்கிறார் ஜாக்சன்.
மேலும், "பிரெஞ்சு சமையல் முறையில், நீங்கள் கோழியைச் சமைப்பதற்கு முன்பு 'ப்ரைன்' செய்கிறீர்கள், அதாவது உப்பு நீரில் கோழியை ஊறவைக்கிறீர்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று யாரும் அறிவுரை கூறி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அந்தச் செயல்பாடும் இதுவும் ஒன்றுதான்," என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு பாத்திரத்தில் வைத்துக் கழுவுவது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று கராட்சாஸ் ஒப்புக்கொண்டாலும், அதிலும் ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். மேலும் எலுமிச்சை மற்றும் வினிகர் கொண்டு கழுவுவது பாக்டீரியாக்களின் அதிகப்படியான அளவை பெரிதாகக் குறைக்காது என்றும் அவர் கூறுகிறார்.
"பாக்டீரியாவை அழிக்கும் ஒரே வழி அதை நன்றாக சமைப்பது தான். மேலும், நீங்கள் வாங்கும் இந்த கோழி இறைச்சி பெரும்பாலும் அதை விற்கும் நிறுவனத்தால் ஏற்கனவே கழுவப்பட்டிருக்கும். அதனால் மீண்டும் அதை கழுவுவதற்கு உண்மையான காரணம் ஏதும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












