"ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 7 நாட்களுக்குள் குடியிருப்புகளை நிரந்தரமாக காலி செய்ய வேண்டும் என தேயிலை நிறுவனம் சார்பில் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறி வருவதாக மாஞ்சோலையில் வாழ்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டு கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய மலைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தோட்ட நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில் அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.
இருப்பினும் தாங்கள் அங்கேயே வசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியில் தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மக்கள் மலையிலிருந்து கீழே இறங்க மறுத்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாஞ்சோலை பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் ஏழு நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்து வெளியேறும்படி பிபிடிசி (பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் - BBTCL) நிறுவனம் ஜனவரி 28-ஆம் தேதி மாஞ்சோலை மட்டுமல்லாமல் ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

அந்த நோட்டீஸில், 'மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தோட்டங்களை உள்ளடக்கிய நிலங்களை 08.05.2025 அன்று தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளது. அதே சமயம் அந்த நிலத்தில் உள்ள தொழிற்சாலைகள், பங்களாக்கள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு வரிசைகள் மற்றும் பிற கட்டிடங்கள் அடங்கிய நிலங்கள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. "
"இந்நிலம் 31.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக மேற்கண்ட நிலத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிர்வாகத்தால் ஒப்படைக்க முடியவில்லை."

"மேலும் அரசின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாக தற்போது நிலங்களை தகுதியான அதிகாரிகளின் உத்தரவுகளின்படி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் பணிகளை பிபிடிசி நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வருவதாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனிப்பட்ட உடமைகள் அல்லது பொருட்கள் வைத்திருப்பவர்கள் 7 நாட்களுக்குள் அவற்றை அகற்றி கொண்டு நிரந்தரமாக காலி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கனத்த இதயத்துடன் விடைபெற்றேன்"

தான் பிறந்து வளர்ந்த மாஞ்சோலையை விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறியதாகக் கூறுகிறார் சீலன்.
மாஞ்சோலை மலையை விட்டு இறங்கிய சீலன் பிபிசி தமிழிடம் விரிவாக பேசுகையில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வியாழக்கிழமை குடியிருப்பு கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மாஞ்சோலையில் வசித்த பலரும் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு இருந்து ஒவ்வொருவராக வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறி தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மற்றும் பாப்பான்குளம் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்." என்றார்.
மாஞ்சோலையை விட்டு வெளியேறிய தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொருநை அருங்காட்சியகத்தில் தூய்மை பணி, பராமரிப்பு பணி, தோட்டப்பணி உள்ளிட்ட பணிகள் 35 பேருக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் சீலன். "மற்றவர்கள் அவர்களுக்கு ஏற்ற வேலையில் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறார்கள்." என்றும் குறிப்பிட்டார்.
இருளில் மூழ்கிய மாஞ்சோலை மலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பில் மின் கட்டணம் செலுத்தாததால் மாஞ்சோலை முழுவதும் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது என்கிறார் சீலன்.
"மாஞ்சோலையில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் மூடப்பட்டு விட்டது. நாளொன்றுக்கு மூன்று முறை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மாஞ்சோலையை விட்டு பெரும்பாலான மக்கள் வெளியேறியதால் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு காணப்பட்டு வருகிறது." என்றார்.
மலையைவிட்டு இறங்கும் மனநிலைக்கு சிறு வயதிலிருந்தே வந்துவிட்டதாகக் கூறுகிறார் சீலன். "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகத்தின் ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும் அதன் பிறகு இங்கு வசிக்கும் மக்கள் மலையில் இருந்து அப்புறப்படுத்தபடுவார்கள் என சிறு வயதிலிருந்து எனது பெற்றோர் சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். கனத்த இதயத்துடன் நான் என் குடும்பத்துடன் மலையை விட்டு இறங்கி திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்." என்றார்.

மாஞ்சோலையில் ஒரு சிலர் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் விரைவில் மலையில் இருந்து கீழே இறங்கி வருவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். "புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது அதன் தீர்ப்பை எதிர்பார்த்து சிலர் மாஞ்சோலையில் வசித்து வருகின்றனர்." என்றார்.
மாஞ்சோலையில் உள்ள கோவில், தேவாலயம் மற்றும் உயிரிழந்தவரின் கல்லறைகள் உள்ளிட்ட இடங்களுக்கு ஆண்டுக்கு இரு முறை சென்று வழிபடும் உரிமையை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
"மாஞ்சோலையை விட்டுச் செல்ல மனமில்லை"

தொலைத்தொடர்பு சேவை, மின்சாரம் இல்லாவிட்டாலும் மாஞ்சோலையை விட்டு வெளியே வர மனமில்லாமல் இங்கேயே தங்கி இருப்பதாக கூறுகிறார் செல்வி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "குடியிருப்பை 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டாலும் நான் தொடர்ந்து மாஞ்சோலையில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வார காலமாக மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இங்கு வசிக்கும் சிலருடன் சேர்ந்து வீட்டுக்கு முன்பு விறகுகளை வைத்து தீ பற்றி அதன் வெளிச்சத்தில் வசித்து வருகிறோம்." என்றார்.
தொலைதொடர்பு சேவை தற்போது செயல்பாட்டில் இல்லை எனக் கூறும் அவர், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேயிலை எஸ்டேட்டுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை தீப்பற்றி எரிந்த போது கூட எங்களால் உரிய நேரத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்க முடியவில்லை." என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்வி, "மாஞ்சோலையில் வசித்த மக்கள் பலரும் குடியிருப்புகளை காலி செய்து விட்டு சென்றதால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களும் காட்டு மாடு, யானை, கரடி உள்ளிட்டவை குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. நான்கு தலைமுறையாக வசித்து வந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் தொடர்ந்து இங்கேயே வசித்து வருகிறேன்." என்றும் தெரிவித்தார்.
மாஞ்சோலையில் வாழ்ந்து வந்த அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து சமத்துவபுரம் போல் வீடுகள் கட்டிக் கொடுத்தால் மாஞ்சோலை மலையை விட்டு கீழே செல்வது குறித்து முடிவெடுக்க இருப்பதாகக் கூறுகிறார் செல்வி.
"நீதிமன்றத்தை நாட உள்ளோம்"

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வாசலில் ஒட்டியுள்ள நோட்டீசை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகக் கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.
இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாஞ்சோலையில் மக்கள் இருக்கும் வரை அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது."
"தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான மறுவாழ்வு அமைத்து கொடுக்க வேண்டும், சமத்துவபுரம் கட்டிக்கொடுக்க வேண்டும், ஆன்மீக தளம், கல்லறை உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு இருமுறை சென்று பார்த்துவிட்டு வர அனுமதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது." என்றார்.

ஆனால் அதற்கிடையில் தேயிலை தோட்ட நிர்வாகம் உடனடியாக மக்களை அப்புறப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது எனக் கூறும் அவர், "அரசு நேரடியாக மக்களை மலையை விட்டு வெளியேற்றம் செய்யாவிட்டாலும் எஸ்டேட் நிர்வாகம் மூலம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு ரூ.1110 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டிய எஸ்டேட் நிர்வாகத்திடம் இருந்த வரி வசூலிக்க முடியாத அரசு மக்களை வெளியேற்றுவதில் எஸ்டேட் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மாஞ்சோலை மக்களுக்கு நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வை பெற்று தர இருக்கிறோம்." என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் பெற தேயிலை தோட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அவர்களின் இணைப்பை பெற முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், "ஒப்பந்த காலம் முடிந்ததால் தேயிலை நிறுவனம் வெளியேற வேண்டும் என்று தான் நாங்கள் கூறியுள்ளோம். இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை." என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












