You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியோரை கைது செய்ய தனிப்படை: தமிழ்நாடு போலீஸ்
“வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாகச் சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது,” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், “புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல் இணையதளத்தில், சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படிப் பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்,” என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் இது பரவியது, அரசின் பல மட்டங்களிலும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் அந்தச் செய்திகள் போலியானவை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
“எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்”
இந்நிலையில், இன்று தமிழ்நாடு காவல்துறை, “புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவலை பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதை நம்மைவிட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்கிறாகள்.
வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக, வேலைக்காக எனப் பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தியுள்ளார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது,” என்று கூறியுள்ளார்.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
அதோடு, வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், “அப்படி யாராவது அச்சுறுத்தினால், அறிவிக்கப்பட்டுள்ள காவல் துறை உதவி எண்கள் வாயிலாக தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
“வதந்தி பரப்பியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்”
புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம்பாக பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
“இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தைய்னிக் பாஸ்கர் இணைய இதழ் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களைக் கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருடைய உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,” என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி அமைதியாக வசித்து வருகிறார்கள்.
அந்த அமைதியைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்,” என்றும் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்