You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுகவில் ‘இரட்டை இலை’ சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்கீடா?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளரை நிறுத்த, அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி, முடிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தனது ஆதரவு வேட்பாளரான தென்னரசுவின் பெயருடன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பத்தை விநியோகித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலையை ஒதுக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹ்ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இடைத்தேர்தலில் போட்டியிட இரு தரப்பும் விரும்புவதால், கட்சியின் அவைத் தலைவர் மூலம் பொதுக்குழுவைக் கூட்டி பொதுவான வேட்பாளரை முடிவு செய்யட்டும்.
அந்தத் தீர்மானத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினால், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பு யாருக்கு சாதகம்?
இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பையுமே தர்மசங்கடமான சூழலில் தள்ளக்கூடும். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதி அதாவது வரும் செவ்வாய்க்கிழமையன்று முடிவுக்கு வருகிறது.
இந்தத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில், செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பிறகு பிப்ரவரி 7ஆம் தேதிதான் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகுமென நம்பி, வேட்புமனு தாக்கலைத் தள்ளி வைத்தது எடப்பாடி தரப்பு.
ஆனால், நீதிமன்றம் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை முடிவு செய்யும்படி கூறிவிட்டது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பிரிவு பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியிருந்தது. ஆனால், இந்தத் தேர்தல் விவகாரத்தில் முடிவெடுக்க, அவர்கள் கட்சியில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் இதுவொரு இடைக்கால ஏற்பாடு என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
"பொதுக்குழுவை மூன்று நாட்களுக்குள் கூட்டுவது இயலாத காரியம், பொதுக்குழுவைக் கூட்ட குறைந்தது 21 நாட்கள் தேவைப்படும். ஆகவே என்ன செய்வது என ஆலோசனை நடந்து வருகிறது. அல்லது, பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அதைச் சமர்ப்பிக்கலாமா என்றும் யோசித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்போம்," என பிபிசியிடம் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கூச்சல் எழுப்பப்பட்டு, அவர்கள் வெளியேறினர். ஆகவே, பொதுக்குழு நடந்தாலும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என்ன செய்யப் போகிறது என அவரது தரப்பைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகரிடம் கேட்டபோது, "நாங்கள் தீர்ப்பை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. தீர்ப்பை முழுமையாகப் பார்த்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டப்பட்டால் அதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பங்கேற்பார்களா எனக் கேட்டபோது, "இப்போது எதுவும் சொல்ல முடியாது. தீர்ப்பை முழுமையாக வாசித்துவிட்டு, சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுவோம்," என்று மட்டும் தெரிவித்தார் ஜேசிடி பிரபாகர்.
முந்திய எடப்பாடி அணி
அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்கக் கோரி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களிடமும் இதில் கையொப்பம் பெறத் தொடங்கி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக.
இதற்காக அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் எடப்பாடி பழனிசாமி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களிடமும் இதில் கையொப்பம் பெற்று, திங்கள் கிழமை காலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
தற்போதைய சூழலில், தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து கடிதங்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம் என எடப்பாடி தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என்ன செய்யப்போகிறது என்பதை இன்னும் தெளிவுப்படுத்தாமல் இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கூட்டணிக் கட்சிகளின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு இன்று மாலைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். தேர்தலில் இரட்டை இல்லை சின்னத்தில் ஒரே வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்," என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்