You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவக் காப்பீடு: வயது, நோய்கள் பற்றிய புதிய விதிகள் என்ன? யாரெல்லாம் பயனடையலாம்?
- எழுதியவர், தனிஷா சௌகான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இப்போது நீங்கள் எந்த வயதிலும் மருத்துவ காப்பீடு பெறலாம், வயது 70 அல்லது 90 என்பது முக்கியமல்ல. புதிய விதிகளின்படி, ஒருவருக்கு ஏற்கனவே நோய் இருந்தாலும், அவர் இப்போது மருத்துவ காப்பீட்டைப் பெற தகுதியுடையவராக இருப்பார்.
எந்தெந்த விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, அது உங்கள் பிரீமியத்தில் என்ன மாற்றத்தை உண்டாக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை உணர்கிறார்கள். குறிப்பாக வீட்டில் வயதான ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது யாராவது தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்.
இதுபோன்ற சூழ்நிலையில், அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை குடும்பத்திற்கு இருக்கும். அந்த சமயத்தில் காப்பீடு வழங்க நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை.
ஆனால் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான 'இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்' (இஆர்டிஏ- ERDA) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், மருத்துவ காப்பீட்டிற்கான வயது வரம்பு 65 என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இப்போது எந்த வயதினரும் மருத்துவ காப்பீட்டைப் பெறலாம், அவர் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட. இந்த மாற்றங்கள் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஆர்டிஏ தனது அறிவிப்பில் கூறியுள்ளது என்ன?
2047ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் காப்பீட்டை வழங்குவதற்காக, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் பெறுவதற்கான வயது வரம்புகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இஆர்டிஏ.
அனைத்து வயதினருக்கும் மட்டுமின்றி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் தாய்மார்களையும் மனதில் வைத்து காப்பீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று இஆர்டிஏ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் காப்பீட்டுக் கொள்கையைக் கொண்டு வர வேண்டும் என்றும் இஆர்டிஏ கூறியுள்ளது.
புற்றுநோய், இதயம், சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டை மறுக்க முடியாது என்று இஆர்டிஏ தெளிவாகக் கூறியுள்ளது.
மூத்த குடிமக்கள் நலனுக்காக சிறப்புக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இஆர்டிஏ கூறியுள்ளது. இதனுடன், புகார்களைத் தீர்ப்பதற்கு சிறப்பு சேனலைத் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. உண்மையில் காப்பீட்டுத் துறையில் போட்டியை ஏற்படுத்துவதற்காக 2000ஆம் ஆண்டில் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான 'இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்' (இஆர்டிஏ) நிறுவப்பட்டது.
காப்பீட்டு வணிகத்தை எளிதாக்குவது மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.
பழைய வழிகாட்டுதல்களில் என்ன இருந்தது?
முந்தைய இஆர்டிஏ விதிகளின்படி, மருத்துவக் காப்பீட்டிற்கான அதிகபட்ச வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வயதிற்குப் பிறகான காப்பீட்டில், காப்பீட்டுக்கு முந்தைய உடல்நலப் பரிசோதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது மற்றும் ஒருவருக்கு ஏற்கனவே இருக்கும் நோய்க்கும் காப்பீடு வழங்கப்படாது என்பது போன்ற கடுமையான நிபந்தனைகள் இருந்தன.
இதனுடன், 50 வயதுக்கு பிறகு பெறும் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் மிக அதிகமாக இருக்கும்.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் வழி என்ன?
யுனிவர்சல் சோம்போ இன்சூரன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரத் மாத்தூர், பிபிசி நியூஸ் பஞ்சாபியிடம் பேசுகையில், “இந்த புதிய வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
"பலன் எவ்வளவு அதிகமாக இருக்குமோ, அதற்கு ஏற்றார் போல பிரீமியமும் அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த அறிவுறுத்தல்களை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்" என்று ஷரத் மாத்தூர் கூறுகிறார்.
அதன்படி, முழுமையான காப்பீட்டு திட்டத்திற்கு பதிலாக, 'உடல் உறுப்பு சார்ந்த காப்பீடு’ அதாவது நோய்க்கு ஏற்ப காப்பீட்டு பெறுவது அவசியம். சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதயத்திற்கு என தனித்தனியாக காப்பீடு வாங்குவது போல.
காப்பீடுகளின் பிரீமியம் அதிகரிக்குமா?
டர்டில்மின்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் நீலம் ஜாதவ் கூறுகையில், “காப்பீட்டு நிறுவனங்கள் பல வகையான திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இந்த திட்டங்களின் பிரீமியம் மிகவும் விலை உயர்ந்ததாக மாறும், ஏனெனில் வயது அதிகரிக்கும் போது நோய் அபாயமும் அதிகரிக்கும் என்பதால்.
அதேபோல ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு செயல்முறை மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கக் கூடிய பல நோய்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்திற்குள் வராது” என்கிறார் நீலம்.
எனவே அரசின் புதிய கொள்கையால் மக்கள் பயனடைவார்கள் என்று நீலம் நம்புகிறார், ஆனால் காப்பீடுகளுக்கான குறைவான பிரீமியம் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)