குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல் - இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய மேஜிக் வீரர்கள்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி குல்தீப் யாதவுக்கு மறக்க முடியாத போட்டி என்று கூடச் சொல்லலாம்.

அவர், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் மிடில் ஆர்டர் ஆட்டத்தைச் செயலிழக்க வைத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சரியான நேரத்தில் யஸ்வேந்திர சாஹல் குணமடையாத காரணத்தால் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். அப்படிச் சேர்க்கப்பட்டதற்கு சரியான ஆட்டத்தை நேற்று அவர் வழங்கினார்.

இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 102 ரன்களை எடுத்திருந்தபோது, 17வது ஓவரில் ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவை களமிறக்கினார். குல்தீப், குசல் மெண்டிஸை எல்பிடபிள்யூ விக்கெட் மூலம் வெளியேற்றினார்.

இலங்கை அணியின் கேப்டனான 28 வயது நிரம்பிய தசுன் ஷனகாவை இரண்டே ரன்களில் ஆட்டமிழக்கச் செய்த பெருமையும் குல்தீப்பையே சேரும். தசுன் ஷனகா குல்தீப்பின் முழு நீள பந்துவீச்சை தட்டிவிட முயன்றார். ஆனால் அந்த முயற்சியால் அவருடைய கால் பகுதியில் பந்து ஊடுருவி அவரை அந்தப் பந்து போல்ட் ஆக்கியது.

200வது சர்வதேச விக்கெட்

குல்தீப் யாதவ், இலங்கை அணியின் கேப்டனை வீழ்த்தியதோடு நிற்கவில்லை. அவர் வீசிய ஐந்தாவது ஓவரில் சரித் அசலங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி வெளியேற்றினார்.

இடது கை பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேலுடன் சேர்ந்துகொண்ட குல்தீப் யாதவ், இலங்கை பேட்டிங்கின்போது பந்துவீச்சை மிகவும் இறுக்கமான பாணியில் வைத்திருந்தனர். இலங்கையால் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை வழங்க அவர்கள் மறுத்தனர். இதன்மூலம், தனது 107வது சர்வதேச போட்டியில் 200வது சர்வதேச விக்கெட்டை எடுத்தார்.

இது உலகக் கோப்பை ஆண்டாக இருக்கும் நிலையில், அதிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டம் யாராலும் தவிர்த்துவிட முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.

சவாலான ஈடன் கார்டன் மைதானம்

“முதலில் பேட்டிங் செய்வதா வேண்டாமா என்று இரண்டு மனநிலையில் நான் இருந்தேன். கடந்த முறை நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதைக் கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் தேர்வு செய்ய விரும்பினேன். ஆனால், இந்த மைதானத்தைப் பார்த்த பிறகு, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய விரும்பினேன்,” என்று டாஸ் போடும்போது ரோஹித் ஷர்மா கூறினார்

ஆனால், இலங்கை அணி டாஸ் வென்றது. தசுன் ஷனக பேட்டிங்கை தேர்வு செய்தார். சொல்லப்போனால், இந்தியாவுக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் ரோஹித் ஷர்மா கூறியதைப் போல் ஃபீல்டிங் கிடைத்தது நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தைப் பொறுத்தவரை, ஒருநாள் போட்டியில், பகல் நேரத்தில் பந்து வீசுவது எளிதல்ல. அங்கு நிலவும் பருவநிலை காரணமாக இரவில் பந்தைப் பிடிப்பதைக் கடினமாக்கும். அதனால்தான், சில கேப்டன்கள் முதலில் ஃபீல்டிங் வேண்டுமெனக் கேட்க நினைப்பார்கள்.

இலங்கையின் வலுவான பேட்டிங்

ஆனால் பேட்டிங்கை பொறுத்தவரை, அந்த மைதானத்தில் 300க்கும் மேல் ஸ்கோர் செய்வது அரிதாகவே நிகழ்கின்றன, அங்கு 250 ரன்களை பெறுவதே கடினம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிக ரன்களை ஸ்கோர் செய்து, இரண்டாவதாக பேட்டிங் வரும் அணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேப்டன்கள் நினைப்பதுண்டு. தசுன் ஷனகாவும் அதையே செய்துள்ளார்.

இலங்கைக்கு அதுவொரு வலுவான தொடக்கமாக இருந்தது. ஆனால், அவிஷ்க ஃபெர்னாண்டோ, 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, குசல் மெண்டிஸ், நுவனிடு ஃபெர்னாண்டோ ஆகியோர் இரண்டாவது விக்கெட் வீழ்வதற்கு முன்பாக 73 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் 17வது ஓவரில் இலங்கையின் ரன் கணக்கை 100க்கும் மேல் கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் இலங்கை அணி, அவர்களுடைய ரன் கணக்கை 300 ரன்களுக்கும் மேல் கொண்டு செல்லப் போகிறது எனத் தோன்றியது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் மேஜிக்கில் சிக்கியதால், அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.

வெற்றியைத் தேடித் தரும் பவுலர்

17வது ஓவரின் கடைசி பந்தில் குல்தீப், மெண்டிஸை எல்பிடபிள்யூ அவுட்டாக்கினார். இந்த விக்கெட்டில் தொடங்கியது இலங்கை அணியின் பின்னடைவு. அவர்களுடைய அடுத்த 6 விக்கெட்டுகளும் அடுத்த 50 ரன்களுக்குள் விழுந்தன. இதில் மெண்டிஸை தவிர அஸ்லங்க, கேப்டன் தசுன் ஷனக ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை குல்தீப் யாதவையே சேரும்.

அதற்காக அவருக்கு ஆட்டநாயகன் பட்டமும் கிடைத்தது. உலகக் கோப்பை நடக்கவுள்ள இந்த ஆண்டில், வெற்றியைத் தேடித் தரும் ஒரு பவுலர் என்பதை குல்தீப் யாதவ் நிரூபித்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா கூட்டணி

இந்தியா 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய கே.எல்.ராகுலின் பேட்டிங், இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகவும் சோர்வடையச் செய்யும் அளவுக்கு இருந்தது. மிகவும் கடினமான சூழ்நிலையிலும் 5வதாக அவர் களமிறங்கினார். ஹர்திக் பாண்ட்யாவுடன் விவேகமான கூட்டணியை அவர் உருவாக்கினார்.

இருவரும் இணைந்து 75 ரன்களை எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், ராகுல் கடைசி வரை நின்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அவர் 103 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் விரைவாக ரன் எடுத்தாக வேண்டுமென்ற அவசரம் இருக்கவில்லை. ஆனால், விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டியது அவசியம். அதை நன்கு உணர்ந்து விவேகமான ஆட்டத்தை ஆடினார் கே.எல்.ராகுல்.

அவருடைய கூர்மையான அணுகுமுறை இலங்கையை வீழ்த்துவதில் இந்தியாவுக்குப் பெரும் உதவியாக இருந்தது.

இறுதியாக 44வது ஓவரில் இந்தியா இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: