You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாட்டுப்புற பாடல்களுடன் டீ விற்கும் 70 வயது மூதாட்டி – பஞ்சாபை கலக்கும் ‘பெபி டீ ஸ்டால்’
பஞ்சாப்பைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிருஷ்ணா. இவர் இந்த வயதிலும் தன்னுடைய வாழ்க்கையை சுயமாகவும், சுதந்திரமாகவும் அமைத்துகொண்டிருக்கிறார்.
அவர் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. தன்னுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்காக, அவர் கடினமாக உழைத்து வருகிறார். ஆம் இவர் சுயமாக தேநீர் கடை நடத்துகிறார். தன்னுடைய கடைக்கு வருபவர்களுக்கு தேநீர் வழங்குவதோடு, பாடல்களை பாடியும் அசத்துகிறார்.
இந்த மூதாட்டி பாடும் பாடல்கள் அவர் தயாரிக்கும் தேநீரின் சுவையை மேலும் அதிகரிக்கின்றன. இசையின் மேல் தனக்கு இருக்கும் ஆர்வத்தினால் அவர் இந்த பாடல்களை பாடுகிறார்.
”என்னுடைய மகன் ஒரு கூலி தொழிலாளி. அவனால் என்னை பார்த்துகொள்ள முடியாது. அதனால் நான் வேலை செய்கிறேன். இந்த வயதிலும் வேலை செய்யும் அளவிற்கு எனக்கு வலிமை கொடுத்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று கிருஷ்ணா தெரிவிக்கிறார்.
இவர் நடத்தி வரும் தேநீர் கடையின் பெயர் ‘பெபெ டீ ஸ்டால்’. பாட்டி வயதில் இருக்கும் வயது முதிர்ந்த பெண்களை பஞ்சாபியில் ‘பெபெ’ என்று அழைப்பார்கள். இவரின் கடை பஞ்சாப்பின் சங்க்ரூர் நகரத்துக்கு அருகிலுள்ள பவானிகர் கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு இவர் நாட்டுப்புற பாடல்களையும், மதம் தொடர்பான பாடல்களையும் பாடி வருகிறார்.
”பொதுவாக நாட்டுப்புற பாடல்கள் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை அறிவுறுத்தியே நான் பாடல்களை பாடுகிறேன். போதை பொருட்கள் இல்லாமல் இருந்தால் நம்முடைய தேசம் இன்னும் சிறப்பாக இருக்கும்.நான் பாடுவதால் சிலர் உத்வேகமடைவதாக கூறுகிறார்கள். சிலர் என்னை சந்திப்பதற்காக வருகிறார்கள்” என்று பிபிசியிடம் கூறுகிறார் கிருஷ்ணா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்