You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பதிண்டா ராணுவ முகாம் மீது தாக்குதல்: இறந்த இரண்டு படையினர் தமிழ்நாட்டை சேர்ந்தோர்
பஞ்சாப் மாநில ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ராணுவத்தினர் மீது திடீர் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. பீரங்கி பிரிவைச் சேர்ந்த கமலேஷ், சாகர் பன்னே, யோகேஷ்குமார், சந்தோஷ் நகரல் ஆகியோர் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த நான்கு வீரர்களில் கமலேஷ் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தையும், யோகேஷ் குமார் தேனி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
24 வயதான யோகேஷ்குமார் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன். தனது 19 வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த யோகேஷ்குமார் மூன்று ஆண்டுகள் பயிற்சி முடித்து பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
யோகேஷ்குமார் உயிரிழந்துள்ளதை மூத்த ராணுவ அதிகாரிகள் உறுதி செய்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு இன்று கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அரசு சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ் குமாருக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
கடந்த மாதம்தான் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பவர் பலியாகியிருந்தார். அதற்குள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு ராணுவ வீரர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் தேனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
24 வயதான மறைந்த ராணுவ வீரர் கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வனவாசியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் தறி தொழிலைச் சார்ந்தது. 52 வயதான தறி தொழிலாளி ரவி, செல்வமணி தம்பதியின் இரண்டாவது மகன் கமலேஷ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கமலேஷ் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
கமலேஷ் உயிரிழந்த தகவல் ராணுவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராணுவ வீரர் கமலேஷின் உடல் பஞ்சாபில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின் கமலேஷின் உடல் விமானம் மூலம் தமிழகத்தை வந்தடைகிறது. அதன் பின்னர் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ராணுவம் கூறுவது என்ன?
இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை அதேநேரத்தில், சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ராணுவ நிலையத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கி குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' அல்ல என்று பஞ்சாப் காவல்துறை பிபிசியிடம் கூறியுள்ளது. இதேவேளை நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
ராணுவ மேஜர் அசுதோஷ் சுக்லாவின் புகாரின் அடிப்படையில், பதிண்டா கான்ட் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், அடையாளம் தெரியாத இருவர் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், கூட்டு விசாரணை குறித்து ராணுவமும் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் அல்ல- பஞ்சாப் காவல்துறை
பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாத சம்பவம் அல்ல என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
பதிண்டா காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குல்னீத் சிங் குராணா, பிபிசி செய்தியாளர் அரவிந்த் சாப்ராவிடம் பேசுகையில், "இது தீவிரவாத தாக்குதல் அல்ல. சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் தெரியவில்லை" என்கிறார்.
அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் கூடுதல் எஸ்.பி குராணா தெரிவித்தார்.
பஞ்சாப் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் எஸ்.பி.எஸ். பர்மர், "இது தீவிரவாத தாக்குதல் அல்ல. இந்த தாக்குதல் வெளியில் இருந்து நடக்கவில்லை. ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
பதிண்டா ராணுவ நிலையத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பே 28 தோட்டாக்கள் உடன் துப்பாக்கி ஒன்று காணாமல் போனது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காணாமல் போன துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என ராணுவம், போலீஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்