இந்தோனீசியா: ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

    • எழுதியவர், டெஸ்ஸா வாங், சைமன் ஃப்ரேசர்
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 என்றவாறு நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் உணர முடிந்தது. இதன் காரணமாக அங்கு உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நிலநடுக்கம் மேலும் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நில நடுக்கத்தில் பலரது வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததை சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மூலம் காண முடிகிறது.

சியாஞ்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குறைந்தது 300 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அங்குள்ள அரசு அதிகாரி ஹெர்மன் சுஹர்மன் மெட்ரோ டிவியிடம் தெரிவித்தார்.

அதில் பெரும்பாலானவர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கியதால் எலும்பு முறிவுகளை எதிர்கொண்டவர்கள்.

இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற மீட்புக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர். சமீபத்திய தகவலாக அங்கிருந்து மேலும் ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் காப்பாற்ற முடிந்திருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​​சிவில் மற்றும் தொழிலக கட்டுமானங்கள் நிறைந்த ஜகார்த்தாவில், சுமார் ஒரு நிமிடம் நீடித்த நில அதிர்வைத் தொடர்ந்து கட்டடங்களில் இருந்த அலுவலக ஊழியர்கள் வெளியேறினர்.

"நான் வேலையில் ஈடுபட்டிருந்தபோது தளம் குலுங்கியது. நில அதிர்வை என்னால் தெளிவாக உணர முடிந்தது. ஆனால், அது வலுவடைந்து சில நிமிடம் நீடித்தபோது எதையும் செய்யாமல் அப்படியே இருந்தேன்," என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் வழக்கறிஞர் மாயாதிதா என்பவர் கூறினார்.

அஹ்மத் ரிட்வான் என்ற அலுவலக ஊழியர் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், "நாங்கள் ஜகார்த்தாவில் இதுபோன்றவற்றுக்குப் [பூகம்பங்கள்] பழகிவிட்டோம். ஆனால் இம்முறை மக்கள் மிகவும் பதற்றமாக இருந்தனர். அதனால் நாங்களும் சற்று பீதியடைந்தோம்," என்று தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் நிலநடுக்கம் வழக்கமாக ஏற்படும். இந்த நாடு பசிஃபிக் பகுதியில் உள்ள டெக்டோனிக் செயல்பாட்டின் "நெருப்பு வளையம்" என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: