You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீணான கே.எல். ராகுல் சதம் – நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சறுக்கியது எங்கே?
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது.
285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குறிப்பாக நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 131 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இப்போது இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
டாஸ் வென்ற நியூசிலாந்து
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தை தொடங்கினர். முதல் 5 ஓவர்களில், இந்த ஜோடி 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து சற்றே நம்பிக்கை அளித்தனர்.
12வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் வில் யங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித் சர்மா. அவர் 38 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார்.
மறுமுனையில் பொறுமையாக ஆடி, அரைசதம் கடந்த கேப்டன் சுப்மன் கில், 16வது ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, விராட் கோலி- ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் ஆடியது. இந்திய அணி 17 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஆனால், 21வது ஓவரில் கிறிஸ்டின் கிளார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் ஷ்ரேயாஸ். அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
22 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, 117 ரன்களுடன் இந்திய அணி தடுமாறியபோது கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
விராட் கோலி 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள், நிதிஷ் ரெட்டி 20 ரன்கள், ஹர்ஷித் ராணா 2 ரன்கள் என இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதும், அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மிக விரைவாக ஆட்டமிழந்த நேரத்தில் அவரது இந்த சதம் அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 112 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி வெற்றிபெற 285 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணியின் கிறிஸ்டின் கிளார்க் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டேரில் மிட்செலின் அதிரடி சதம்
285 ரன்கள் என்ற இலக்குடன், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்த கான்வே, 5வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் பின்னர் வில் யங் களமிறங்கினார். நிதானமாக ஆடி, ரன்களை உயர்த்திய நிக்கோல்ஸ்- வில் யங் ஜோடி 12வது ஓவரில் பிரிந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில், நிக்கோல்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த டேரில் மிட்செல்- வில் யங் ஜோடி, சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணி 200 ரன்களைக் கடக்க உதவியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை உடைக்க பெரிதும் போராடினர்.
சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வில் யங், 37வது ஓவரில் நிதிஷ் ரெட்டி வீசிய பந்தில், குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 98 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் 88 ரன்களுடன் மிட்செல் களத்தில் இருந்தார்.
அதன் பின்னர், க்ளென் பிலிப்ஸ் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் 96 பந்துகளில் சதமடித்தார்.
இறுதியாக 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணியின் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு