You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறியாடு ஓராண்டுக்குப் பின் எப்படி உள்ளது?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் முதல் மரபணு திருத்தம் செய்யப்பட்ட செம்மறியாடு சமீபத்தில் ஒரு வயதை நிறைவு செய்தது. அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் அது நன்றாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி காஷ்மீரில் பிறந்த இந்த செம்மறியாட்டிற்கு 'தர்மீம்' (Tarmeem) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மாற்றம் அல்லது திருத்துதல் என்பதைக் குறிக்கும் அரபு வார்த்தை.
அந்தப் பிராந்தியத்தின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழகத்தில், தர்மீம் தனது மரபணு-திருத்தப்படாத இரட்டைச் சகோதரியுடன் ஒரு தனிப்பட்ட கூண்டில் வைக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏவை மாற்றுவதற்கான ஒரு உயிரியல் அமைப்பான சிஆர்ஐஎஸ்பிஆர் (CRISPR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை உருவாக்கியதாக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அடிப்படையில், விஞ்ஞானிகள் பலவீனங்கள் அல்லது நோய்களை ஏற்படுத்தும் ஒரு மரபணுவின் பகுதிகளை வெட்டி அகற்ற, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
"நாங்கள் கர்ப்பமாக இருக்கும் செம்மறியாடுகளிடமிருந்து பல கருக்களைப் பிரித்தெடுத்து, மரபணு தசை வளர்ச்சியை எதிர்மறையாகப் பாதிக்கும் மயோஸ்டாடின் (myostatin) மரபணு என்று அறியப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணுவைத் திருத்தினோம்" என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் சுஹைல் மாக்ரே பிபிசியிடம் தெரிவித்தார்.
கருக்கள் அல்லது கருவுற்ற முட்டைகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் வைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு பெண் செம்மறியாட்டிற்கு மாற்றப்பட்டன.
"அதன் பிறகு இயற்கை தன் வேலையைச் செய்தது - 150 நாட்களுக்குப் பிறகு, ஆட்டுக்குட்டிகள் பிறந்தன," என்று அவர் கூறினார்.
"எங்கள் நோக்கம் செம்மறியாடுகளில் தசை நிறையை (muscle mass) அதிகரிப்பதாகும். மயோஸ்டாடின் மரபணுவை அகற்றுவதன் மூலம், நாங்கள் அதை வெற்றிகரமாகச் செய்தோம்," என்றும் கூறினார்.
இந்த மாதத்தில் தர்மீம் ஒரு வயதை நிறைவு செய்த பிறகு, கால்நடை அறிவியல் துறைத் தலைவரும், திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான பேராசிரியர் ரியாஸ் ஷா, பிபிசிக்கு அதன் நிலை குறித்த தகவலை அளித்தார்.
"அது நன்றாக வளர்ந்து வருகிறது, இயல்பான உடலியல், உயிர்வேதியியல் மற்றும் உடல் அளவுருக்களைக் காட்டுகிறது. தர்மீமின் தசை வளர்ச்சி, எதிர்பார்த்தபடி, அதன் மரபணு-திருத்தப்படாத இரட்டையுடன் ஒப்பிடும்போது சுமார் 10% குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. வயதுக்கு ஏற்ப இது மேலும் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று ரியாஸ் ஷா தெரிவித்தார்.
அதன் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்தலை (survival) மதிப்பிடுவதற்குச் சோதனைகள் நடந்து வருகின்றன. அதோடு, அந்த செம்மறியாடு கடுமையான கண்காணிப்பின் கீழ் ஒரு பாதுகாப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஷா கூறினார். மேலும், நிதி ஆதரவு கேட்டு அரசாங்கத்திடம் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக, செம்மறியாடுகள் பல தசாப்தங்களாக மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்டும், மரபணு-திருத்தம் செய்யப்பட்டும் வருகின்றன. 1990களில் பிரிட்டனில் 'ட்ரேசி' என்ற செம்மறியாட்டில் நடந்தது போன்ற ஆரம்பகால சோதனைகள், பாலில் சில புரதங்களை (therapeutic proteins) உருவாக்கின. இன்று, சிஆர்ஐஎஸ்பிஆர் ஆனது தசை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கருவுறுதல் போன்ற பண்புகளை ஆய்வு செய்ய பயன்படுகிறது.
இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறியாட்டை உருவாக்கும் பணியில் எட்டு பேர் கொண்ட குழு ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டது.
"சில தவறான தொடக்கங்கள் இருந்தன. நாங்கள் பல உத்திகளை முயற்சி செய்து பார்த்தோம். இறுதியாக டிசம்பர் 2024-இல் திருப்புமுனை ஏற்பட்டது. நாங்கள் ஏழு ஐவிஎஃப் (IVF) நடைமுறைகளைச் செய்தோம். ஐந்து உயிருள்ள பிறப்புகள் மற்றும் இரண்டு கருக்கலைப்புகள் இருந்தன. ஒன்றில் மட்டுமே மரபணு திருத்தம் வெற்றிகரமாக இருந்தது," என்று பேராசிரியர் ஷா கூறினார்.
"நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்தோம். ஆனால் இப்போது நாங்கள் இந்த நடைமுறையைத் தரப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
இந்த சோதனையின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலையான ஆட்டிறைச்சி உற்பத்திக்கு உதவக்கூடும் என்று கூறுகின்றனர். அங்கே ஆண்டுதோறும் சுமார் 60,000 டன் இறைச்சி பயன்படுத்தப்படும் அதேநேரத்தில், பாதி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
"நிலம் சுருங்கி வருகிறது, நீர் குறைந்து வருகிறது, மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, ஆனால் உணவு ஆதார உற்பத்திக்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது" என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நசீர் அஹ்மத் கனாய் கூறுகிறார்.
"எங்கள் மாநிலத்தில் ஆட்டிறைச்சி பற்றாக்குறை உள்ளது, ஆனால் மரபணு திருத்தம் மூலம் ஒரு செம்மறியாட்டின் உடல் எடையை 30% அதிகரிக்க முடியும். இது நிலையான உணவு உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், எண்ணிக்கையில் குறைந்த விலங்குகள் அதிக இறைச்சியை வழங்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.
பெரிய மந்தைகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்கினால், அவர்கள் அதைச் செம்மறியாடுகளையும், பின்னர் பிற விலங்குகளையும் வளர்க்கப் பயன்படுத்தலாம் என்று பேராசிரியர் கனாய் கூறுகிறார்.
2012-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மரபணு திருத்தும் தொழில்நுட்பம், அதைக் கண்டுபிடித்த இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிஃபர் டௌட்னா ஆகியோருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்ததுடன் மருத்துவ ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. ஏனெனில் இது மரபணு மாற்றியமைத்தலுடன் (ஜிஎம் - Genetic Modification) ஒத்திருப்பதால், பல நெறிமுறை விவாதங்கள் எழுகின்றன.
மரபணு திருத்தம் மற்றும் மரபணு மாற்றம் ஆகிய இரண்டும் அடிப்படையில் வேறுபட்டவை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்: மரபணு திருத்தம் ஒரு தாவரம், விலங்கு அல்லது மனிதனுக்குள் இருக்கும் மரபணுக்களைச் சீராக்குகிறது, அதேசமயம் மரபணு மாற்றம் என்பது வெளியிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சில மரபணு-திருத்தப்பட்ட மீன்கள், கால்நடைகள் மற்றும் பன்றிகளை இயற்கையானவையாகக் கருதுகின்றன, அவற்றை நுகர்வுக்கு அனுமதிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக உற்பத்தித் திறன் கொண்ட, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குகின்றன. அமெரிக்க எஃப்டிஏ (US FDA) சமீபத்தில் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு பன்றியை அங்கீகரித்தது. அடுத்த ஆண்டு பிரிட்டன் மரபணு-திருத்தப்பட்ட உணவுகளை அனுமதிக்கும்.
மனித நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிஆர்ஐஎஸ்பிஆர் கொண்டுள்ள பயன்பாடுகளைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள் ஏற்கனவே மரபணு-திருத்தத்தைப் பயன்படுத்தித் தலசீமியா மற்றும் சிக்கிள் செல் அனீமியா போன்ற அரிய ரத்தக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த ஆண்டு, அமெரிக்காவில் ஒரு அரிய மரபணுக் கோளாறுடன் பிறந்த ஒரு குழந்தைக்குச் சிகிச்சையளிப்பதற்கும், பிரிட்டனில் ஹண்டர் நோய்க்குறியுடன் (Hunter syndrome) கூடிய ஒரு சிறு குழந்தைக்குச் சிகிச்சையளிப்பதற்கும் இது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு, ஐரோப்பிய நாடாளுமன்றம் மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட பயிர்களின் ஒழுங்குமுறை மேற்பார்வையைக் குறைக்க வாக்களித்தது.
இந்த ஆண்டு, இந்திய விவசாய அமைச்சகம் மகசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு மரபணு-திருத்தப்பட்ட நெல் வகைகளுக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் தர்மீம் செம்மறியாடு இந்தியாவில் ஒரு இயற்கையான மரபணு மாறுபாடாகக் கருதப்படுமா என்று சொல்ல இன்னும் அவகாசம் தேவைப்படும்.
நம்பிக்கையுடன் இருக்கும் பேராசிரியர் கனாய், "அறிவியல் மூலமாக... குறிப்பாக 1960களில் உருவாக்கப்பட்ட அதிக மகசூல் தரும் பயிர்கள் மூலம் இந்தியா உணவு உபரி நாடாக மாறியது. மரபணு-திருத்தப்பட்ட செம்மறியாடுகள் மற்றும் பிற விலங்குகள் மூலம், இந்தியா இறைச்சித் தொழிலிலும் அதையே செய்ய முடியும்." என்று கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு