மு.க. ஸ்டாலின் அரசில் அமைச்சராகிறார் உதயநிதி - டிசம்பர் 14இல் பதவியேற்பு - அடுத்த திட்டம் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவை டிசம்பர் 14ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையொட்டி பதவியேற்பு விழாவுக்கான பணிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்பார் என்றும் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை சேர்ப்பதற்கான முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டதாகவும் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்பு விழா டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் நடைபெறவுள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு என்ன துறை கிடைக்கலாம்?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், அமைச்சரவையில் இதுவரை பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், சில சர்ச்சைகளில் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்த துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான சிவசங்கரிடம் தரப்பட்டது.

சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ராஜ கண்ணப்பனுக்கு அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படுகிறார்.

அவருக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கவனித்துவரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் முதலமைச்சர் வசம் உள்ள சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தத் துறைகள் அவருக்கு அளிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்குமென ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலம் தழுவிய அளவில் அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும், சிறப்புத் திட்ட அமலாக்கம் என்பது பல்வேறு அமைச்சகங்களில் உள்ள சிறப்புத் திட்டங்களை கண்காணிக்கும் அமைச்சகம் என்பதால், இந்தத் துறையின் அமைச்சர் எல்லா அமைச்சகங்களில் இருந்தும் அவை அமல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற முடியும்.

இது தவிர, ஐ. பெரியசாமியின் துறையும் கே.ஆர். பெரிய கருப்பனின் துறையும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் ஐ. பெரியசாமி. ஆனால், கூட்டுறவுத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டதில் திருப்தியில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

ஆகவே, ஐ. பெரியசாமி வகித்துவந்த கூட்டுறவுத் துறை கே.ஆர். பெரிய கருப்பனுக்கும் கே.ஆர். பெரியகருப்பன் வகித்துவந்த ஊரக வளர்ச்சித் துறை ஐ. பெரியசாமிக்கும் மாற்றியளிக்கப்படலாம்.

இந்த அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, முதலமைச்சரே இது குறித்து அறிவிப்பார் என்பதைத் தாண்டி எதையும் சொல்லவில்லை.

'வாரிசு அரசியல்' சர்ச்சை

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், 'திமுக' வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக ஏற்கெனவே அக்கட்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது அந்த விமர்சனத்திற்கு கூடுதல் வலு சேர்க்கக்கூடும்," என்கிறார்.

"கண்டிப்பாக அந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்படும். மக்களிடம் நிச்சயம் இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும். மிகக் கடினமான போராட்டத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகியிருக்கிறார்.

உதயநிதி அமைச்சரான பிறகு, எல்லா அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள விழாக்களுக்கு உதயநிதியை அழைப்பார்கள். திறப்பு விழாக்களை ஏற்பாடு செய்வார்கள்.

இதற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் எல்லா அமைச்சர்களையும் விட உதயநிதி ஸ்டாலின்தான் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று மற்ற அமைச்சர்களே சொல்வார்கள்.

அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக உதயநிதியை 'துணை முதல்வர்' ஆக்குவார்கள். அதுதான் திட்டம் போலத் தெரிகிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில், அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவை முன்னிறுத்தியபோது இதுதான் நடந்தது என்கிறார் குபேந்திரன்.

"பிற மாவட்டங்களில் நடந்த விழாக்களில் ஜெயலலிதா முன்னிறுத்தப்பட்டார். கட்சிக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதாவையே அழைத்தார்கள். தி.மு.கவில் மு. கருணாநிதியால் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டபோதும் அதுதான் நடந்தது.

இப்போது உதயநிதியை வைத்து இதைச் செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கும் உதயநிதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர், சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அதனை நடத்தி, திரைப்படங்களையும் தயாரித்துக் கொண்டு அமைச்சர் பதவியையும் ஏற்பது பல கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆட்சிக்குக் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும்" என்கிறார் குபேந்திரன்.

உதயநிதி - சிறுகுறிப்பு

மு.க. ஸ்டாலினின் மூத்த மகனான உதயநிதி ஸ்டாலின், 2008ஆம் ஆண்டில் குருவி திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இதற்குப் பிறகு 2009இல் வெளிவந்த ஆதவன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

இதுவரை சுமார் 15 படங்களில் நடித்துள்ள உதயநிதி, 2018இல் தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்தார்.

2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராகத் நியமிக்கப்பட்டார்.

2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: