You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை அருகே என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட 2 பேரின் பின்னணி என்ன? மேலும் இருவர் எங்கே?
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் 2 பேர் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை கூறுகிறது.
காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கியவர்கள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.
காவல்துறையினர் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஷ் காயமடைந்ததாகவும் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறை குறிப்பிடுகிறது.
என்ன நடந்தது?
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல், உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீஸாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.” என்று காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுப்பட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.” என்று காவல்துறையின் அறிக்கை மேலும் கூறுகிறது.
யார் இந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள்?
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்தவர் சர்க்கரை என்ற சக்கரபாணி. அப்பகுதி தி.மு.க அவை தலைவராக உள்ள சக்கரபாணி மணல், ஜல்லி விற்பனை செய்து வருவதோடு கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்த ரவுடி கும்பல் ஒன்று ஜூலை மாதம் 12 ஆம் தேதி சக்கரபாணியை ஓடஓட விரட்டி வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இந்த வழக்குத் தொடர்பாக 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மேலும் 3 பேரை மணிமங்கலம் போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்கிற சோட்டா வினோத், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வினோத் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.
கொல்லப்பட்ட மற்றொரு நபரான ரமேஷ் மீது மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
தடயவியல் சோதனை
என்கவுன்ட்டர் சம்பவத்தில், கொல்லப்பட்டவர்கள் பயன்படுத்திய காரில் தடவியல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். தடயவியல் துறை நிபுணர் பஷீர் தலைமையிலான குழு ஆதாரங்களை சேகரித்தனர்.
காரில் இருந்து, அவர்கள் பயன்படுத்திய முக்கிய பொருட்களை தடயவியல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். காரை தடயவியல் துறையினர் சோதனை செய்ததில், ஐ-போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காரில் வந்த நான்கு பேரில் இருவர் கொல்லப்பட்டனர். மீதி இரண்டு பேரும் தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
காயமடைந்த காவலரை நேரில் சந்தித்த டிஜிபி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே இன்று காலை ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த உதவியாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரவுடிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் அவரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று வெட்டு காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், "கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வாகனம் தணிக்கையின் போது கார் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர். அப்போது நிற்காமல் வேகமாக சென்ற அவர்கள், காவல்துறை வாகனம் மீது மோதியதுடன், காரில் இருந்து இறங்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர்களை தாக்கவும் செய்துள்ளனர்.
இதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு கையில் வெட்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சாதுரியமாக செயல்பட்டு ஏ ப்ளஸ் கேட்டகிரியில் உள்ள இரண்டு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுள்ளனர்.
தற்போது காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பிச்சென்ற மற்ற இருவரை தனிப்படைகள் அமைத்து தேடும் பணி நடைபெற்று வருகிறது பொதுவாக தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்."
இவ்வாறு கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்