You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவுடனான உறவு பற்றி நேபாளத்தின் புதிய பிரதமர் சுஷிலா கார்க்கி கூறுவது என்ன?
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்த சுஷிலா கார்க்கி, தற்போது அந்நாட்டின் முதல் இடைக்கால பெண் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். யார் இந்த சுஷிலா கார்க்கி?
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தடைக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகிய கே.பி. ஷர்மா ஓலிக்குப் பதிலாக சுஷிலா கார்க்கி பொறுப்பேற்கிறார்.
நேபாளத்தின் பிரட் நகரில் பிறந்த சுஷிலா கார்க்கி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் M.A Political Science படித்தார். பின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். பிராட்நகரில் தனது சட்டப்பணியைத் தொடங்கிய அவர் 2009ஆம் ஆண்டு நேபாள உச்சநீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். பின்னர் 2016ஆம் ஆண்டு பொறுப்பு தலைமை நீதிபதியானார்.
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அவருக்கு ஆதரவு அளித்தனர்.
'ஜென் Z' இயக்கத்தில் இளைஞர்களிடையே பிரபலமான ராப் பாடகரும், காத்மாண்டு மேயருமான பாலேன் ஷா-வும் சுஷிலா கார்க்கியின் பெயரை ஆதரித்திருந்தார்.
"இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நீங்கள் (இளைஞர்கள்) கொடுத்த முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி என்ற பெயரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்" என்று அவர் தனது 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இந்திய செய்தி சேனலான சிஎன்என்-நியூஸ் 18-க்கு சுஷிலா கார்க்கி அளித்த பேட்டியில், "அவர்கள் (இளைஞர்கள்) என்னிடம் கோரிக்கை வைத்தார்கள், நான் ஏற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேர்தல் நடத்தப்பட்டு, நாட்டை குழப்பத்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் கார்க்கி கூறினார்.
சிஎன்என்-நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுஷிலா கார்க்கி பல விஷயங்களைக் கூறினார். நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்த அவரது பார்வை குறித்துப் பேட்டியின் தொடக்கத்தில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "ஜென் Z குழு நேபாளத்தில் போராட்டத்தைத் தொடங்கியது. அவர்கள் என் மீது நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்கள், மேலும், தேர்தல்கள் நடத்தப்படும் வகையில் ஒரு குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை நான் நடத்த முடியும் என்றும் கூறினர். அவர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள், நான் அதை ஏற்றுக்கொண்டேன்," என்றார்.
"போராட்டத்தில் உயிரிழந்த அந்த இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுவதே எனது முதல் கவனமாக இருக்கும். ஆழ்ந்த துயரத்தில் உள்ள அவர்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்," என்று கார்க்கி கூறினார்.
போராட்டத்தின் முதல் கோரிக்கை பிரதமரின் ராஜினாமா என்றும், அது நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். "மீதி கோரிக்கைகள் ஒரு அரசாங்கம் அமைந்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்" என்று அவர் கூறினார்.
இந்தியாவுடனான அவரது தொடர்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, "ஆம், நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தேன். அதைப்பற்றி எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. என் ஆசிரியர்கள், நண்பர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். கங்கை நதி, அதன் கரையில் உள்ள விடுதி, மற்றும் கோடை இரவுகளில் மாடியில் அமர்ந்து பாயும் கங்கையைப் பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது," என்று அவர் கூறினார்
அவர் பிராட்நகரைச் சேர்ந்தவர் என்றும், அது இந்திய எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறினார். "என் வீட்டிலிருந்து எல்லை சுமார் 25 மைல் தொலைவில்தான் உள்ளது. நான் அடிக்கடி எல்லையோர சந்தைக்குச் செல்வேன். என்னால் இந்தி பேச முடியும், அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் பேச முடியும்."
"இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மிகப் பழமையானவை. அரசாங்கங்கள் வேறுபட்டவையாக இருக்கலாம், ஆனால் மக்களின் உறவு மிகவும் ஆழமானது. எனது பல உறவினர்களும் தெரிந்தவர்களும் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது நடந்தால், நாங்களும் கண்ணீர் விடுவோம். எங்களுக்கு இடையே ஆழ்ந்த அன்பு மற்றும் பாசம் உள்ளது. இந்தியா எப்போதும் நேபாளத்திற்கு உதவியுள்ளது. நாங்கள் மிக நெருக்கமானவர்கள். சமையலறையில் பாத்திரங்கள் ஒன்றாக இருக்கும்போது சில சமயங்களில் சத்தம் வருவதுபோல, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் உறவு வலிமையானது" என்று கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு