You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வீட்டில் இருந்தபடியே அறியும் எளிய வழி
தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
மாவட்ட வாரியாக வரைவுப் பட்டியலை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டார்கள்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, மாநிலத்தில் மொத்தம் ஆறு கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்.
ஆனால், எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள வரைவுப் பட்டியலில் ஐந்து கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர்.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள்/குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
அதாவது தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
- இவர்கள் பிற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களாக இருப்பது
- காணப்படாதது
- டிசம்பர் 14க்குள் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்காதது
- ஏதேனும் காரணங்களுக்காக வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பாதது
இந்த நிலையில், வரைவுப் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து இங்குப் பார்ப்போம்.
பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?
வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் பிரதிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒருவர் தமது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள https://voters.eci.gov.in/download-eroll என்ற இணையதளத்தில் மாவட்டம் மற்றும் தொகுதியை உள்ளிட்டு, உங்களது வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலைத் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அந்தப் பட்டியலை வைத்து உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
பல பேருக்கு வாக்குச்சாவடி மாறியுள்ளதால், தங்களது வாக்குச்சாவடி எது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேடுவது வசதியாக இருக்கும்.
வாக்குச்சாவடி விவரங்களைத் தெரிந்துகொள்ள, தேர்தல் ஆணையத்தின் voter helpline செயலியில் உங்கள் எபிக் எண்ணை உள்ளிட்டு, "வாக்குச்சாவடி எண், வரிசை எண்", அதாவது எந்த வாக்குச்சாவடியில் எந்த வரிசையில் உங்கள் பெயர் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
அதன் பிறகு, அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து பெயர் மற்றும் இதர விவரங்களை உறுதி செய்துகொள்ளலாம்.
ஒருவேளை இணையத்தில் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் வாக்குசாவடி நிலை அலுவலரைத் தொடர்புகொண்டு பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நீக்கப்பட்டவர்களின் பட்டியலும், அதற்கான காரணமும் பொதுமக்கள் பார்வைக்கு பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த வரைவுப் பட்டியலில் இடம்பெறாத, குறித்த காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காத வாக்காளர்கள், தங்களை வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பித்து தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், வரைவுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் இணையதளம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் பார்க்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம்.
படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல, வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவதைச் (Claims and objection period) செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒருவேளை பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை அதைத் தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு