You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புகை பிடிப்பதை நிறுத்தினால் சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் மீதான ஆர்வம் அதிகரிப்பது ஏன்?
புகைப் பிடித்தலை நிறுத்துவது சுலபமான விஷயம் அல்ல. அப்போது ஏற்படும் தாகம் கடுமையானதாக இருக்கும். புகைப் பிடித்தலை கைவிட்டவுடன் பலர் அதிக பசியை உணர்வதுடன் ஆரோக்கியமற்ற உணவுகளையும் உட்கொள்கின்றனர்.
நிக்கோட்டினை கைவிடுவதால் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் மீதான தாகம் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப் பிடிப்பதை நிறுத்தும்போது இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது? இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமாக உணவு முறையை கடைபிடிப்பது எப்படி என உணவியல் நிபுணர் லாரா டில்ட் பிபிசியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருந்த விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்!
******* IF NEEDED WE CAN ADD THE FOLLOWING POINTS**********
நீங்கள் புகைப் பிடித்தலை நிறுத்தியுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்த்துகள்! பெரும்பாலான புகைப் பிடிப்போர் அந்தப் பழக்கத்தைக் கைவிட விரும்புகின்றனர். ஆனால் ஏற்கெனவே அதைச் செய்து காட்டியுள்ளீர்ர்கள்.
புகைப் பிடித்தலைக் கைவிட்ட 20வது நிமிடத்தில் இருந்தே ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்துக்கு சிறந்த ஒரு முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள் எனக் கூறலாம். அடுத்த 48 மணிநேரத்திலேயே உங்கள் ரத்தத்தில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடின் அளவு புகைப் பிடிக்காதவரின் உடலிலுள்ள அளவுக்கு நிகராகக் குறைந்து, உங்களுக்குக் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்.
அப்படியே கூடுதல் காலம் செல்லச் செல்ல புகைப் பிடித்தலைக் கைவிடுவது, 50 வகையான நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும், உங்கள் சுவாசம் இலகுவாகும், உணவின் சுவை கூடத் தொடங்கும்.
இருப்பினும், புகைப் பழக்கத்தைக் கைவிடுவதால் கிடைக்கும் பலன்களைப் பெறுவது கடினமானது என்பதை மறுப்பதற்கில்லை.
நிக்கோட்டின் அடிமைப்படுத்தும் திறனை மிக அதிகமாகக் கொண்டது என்பதுடன், அதைக் கைவிடுவதால் ஏற்படும் எரிச்சல், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் மகிழ்ச்சியானவை அல்ல. புகைப் பிடித்தலைக் கைவிடுவதால் அதிக பசியும் அதன் விளைவாக சிலருக்கு எடை கூடுவது போன்றவையும் ஏற்படலாம்.
இந்த இடத்தில் நீங்கள் நினைவு கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. சிறிது எடை கூடுவதால் ஏற்படுவதைவிட புகைப் பிடிப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயம் அதிகம். புகைப் பிடிப்பதைக் கைவிட்ட பின்னர் கூடும் எடை, புகைப் பிடிப்பதைக் கைவிட்டதால் கிடைக்கும் பலன்களைப் பறித்துக் கொள்வதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதேபோல எடை கூடக்கூடும் எனத் தெரிந்துகொள்வதும், அதைச் சமாளிக்க சில எளிய வழிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பதும், இதைக் கையாள்வதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்
புகைப்பிடித்தலைக் கைவிட்டதும் அதிக உணவை உட்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட சில காரணங்கள் உண்டு. நிக்கோட்டின் பசியையும், உட்கொள்ளப்படும் உணவின் அளவையும் குறைப்பது ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
உதாரணத்திற்கு எலிகளுக்கு நிக்கோட்டின் அளிக்கும்போது அவை குறைவாக உண்பதுடன், இருவேளை உணவுகளுக்கு இடையில் அதிக நேரம் எடுத்துக்கொள்வதும் ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால் அதுவே நிக்கோட்டினை நிறுத்தியவுடன் நேரெதிரான விளைவுகள் ஏற்படுகின்றன. எலிகள் கூடுதலாக உணவு உட்கொண்டு எடை அதிகரிக்கத் தொடங்கியது.
மனிதர்களிடமும் இதேபோன்ற விளைவுகள் காணப்பட்டுள்ளன. புகைப் பிடிப்பவர்கள் மற்றும் புகைப் பிடிக்காதவர்களின் உணவுப் பழக்கங்கள் குறித்து லஃபர்ரோ பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்றில் புகைப் பிடிக்காதவர்களைவிட புகைப் பிடிப்பவர்கள் உணவைத் தவிர்க்க இருமடங்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்தது.
அதோடு, புகைப் பிடிப்போர் சாப்பிடாமல் மூன்று மணிநேரத்திற்கு மேல் இருப்பதற்கான வாய்ப்பும் 50% அதிகம் என்பதுடன் அவர்கள் இருவேளை உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி உண்பதற்கான வாய்ப்பு 35% குறைவு.
நிக்கோட்டினை கைவிடுவது கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதற்கான தாகத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. இது எதனால் என்பது இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை.
ஆனால் நிக்கோட்டினை பயன்படுத்தும்போதும், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளும்போதும் கிடைக்கும் இன்ப உணர்வுகள் மூளையின் பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் உள்ளன.
எனவே புகைப் பிடித்தலைக் கைவிடும்போது நிக்கோட்டினுக்காக ஏற்படும் தாகத்தைச் சமாளிக்க உணவை ஒரு வழியாக மக்கள் பயன்படுத்தக்கூடும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள சிலர், சூயிங்கம், சிகரெட், இ-சிகரெட் போன்ற ஏதாவது ஒன்றை வாயில் வைத்திருக்க வேண்டும் என்ற உந்துதலுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். நொறுக்குத் தீனி உண்பது அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யலாம். இதனாலேயே நிக்கோட்டினுக்கு பதிலாக நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகலாம்.
சரி, புகைப் பிடித்தலைக் கைவிட்டதால் ஏற்படும் உந்துதல்களையும், பசியையும் நீங்கள் எப்படி சமாளிக்க முடியும்?
இந்தப் பசி நிக்கோட்டினை கைவிட்டதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று என்பதையும் அது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாறாக ஆரோக்கியமான வழிகள் மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.
சமச்சீரான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நிக்கோட்டினை தவிர்க்கும்போது, சமச்சீரான உணவு உங்கள் உடலுக்கு அதிக ஊட்டத்தைத் தருவதுடன் உங்களது பசி மற்றும் உடல் திறனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
உந்துதல்கள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க ஒரு திட்டத்தை முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் உங்கள் நோக்கத்தை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பசி வரும் என்பதை எதிர்பார்த்து உண்பதற்குத் தயாரான ஆரோக்கியமான தின்பண்டங்களை உங்களது ஃபிரிட்ஜ் அல்லது லஞ்ச் பேகில் தயாராக வைத்திருங்கள்.
அதிக புரதச் சத்துள்ள அல்லது நார்ச் சத்துள்ள அல்லது இரண்டும் கலந்த உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.
இவை உங்களை அதிக நேரம் நிறைந்த வயிற்றுடன் வைத்திருக்கும். உதாரணமாக வறுத்த கொண்டைக்கடலை சிறந்த தீனியாக இருக்கும். பலர் தங்களது தினசரி புரதத் தேவையை இரவு உணவின்போது எடுத்துக் கொள்கிறார்கள், ஆனால் அதிக புரதச் சத்துள்ள காலை உணவை எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் நீங்கள் பசியைக் குறைவாகவே உணர்வீர்கள்.
காலை உணவில் 20-30 கிராம் புரதம் எடுத்துக்கொண்டால் பயன் கிடைப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
சாக்லேட், இனிப்புகள் அல்லது பிஸ்கட் போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தாமல் சமச்சீரான சத்தான உணவுடன் கடைசியாக அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இது அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்க உதவுவதுடன் சீரான சக்தியையும் தரும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)