You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட மூதாட்டி ஐந்து மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
- எழுதியவர், லாரா கோட்சி & வனேசா புஷ்ளட்டர்
- பதவி, பிபிசி உலக செய்திகள்
உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டிக்குள் அடைத்தபின்னர் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், அது அவருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஒரு திகில் திரைப்படத்தில் வருவதைப்போன்ற அனுபவமாகதானே இருக்கும்.
இப்படியொரு அனுபவம் தான் ஈக்குவடார் நாட்டைச் சேர்ந்த ஒரு மூதாட்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேர்ந்துள்ளது. மத்திய ஈக்குவடாரில் அமைந்துள்ள பபாஹோயோ பகுதியைச் சேர்ந்தவர் 76 வயதான பெல்லா மொன்டோயா. இந்த மூதாட்டி பக்கவாதம் காரணமாக இறந்துவிட்டதாக அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அண்மையில் அறிவித்தனர்.
சவப்பெட்டிக்குள் உயிருடன் இருந்த மூதாட்டி
அதையடுத்து அவர் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் மொன்டோயா அங்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து மணி நேரத்திற்கு பின், அவர் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அசையத் தொடங்கியது. அதை கண்டு அங்கு கூடியிருந்த மொன்டோயாவின் உறவினர்களும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் இருந்த மொன்டோயா மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் மருத்துவமனையில் அணிந்திருந்த உடையை (Gown) தான் உடுத்தி இருந்தார்.
“என் அம்மா அவரின் இடது கையை மெல்ல அசைக்கத் தொடங்கினார்; வாய் மற்றும் கண்களை அவரால் திறக்க முடிந்தது; அவர் சுவாசிக்க சிரமப்பட்டார்” என்று அனைவரும் இறந்ததாக நினைத்து கொண்டிருந்த மொன்டோயா உயிருடன் இருந்ததை உணர்ந்த தருணத்தை உணர்ச்சி பொங்க விவரிக்கிறார் அவரது மகன் கில்பர்ட் பால்பெரான்.
இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில், திறந்த சவப்பெட்டியில் மொன்டோயா வைக்கப்பட்டிருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவை அவரின் பக்கத்து வீட்டுக்காரர் எடுத்திருந்தார்.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
மூதாட்டி மொன்டோயா உயிருடன் இருப்பது தெரிந்த உடனே அவர் சவப்பெட்டியில் இருந்து மீட்கப்பட்டு நோயாளிகளுக்கான ஸ்டெச்சரில் ஏற்றப்பட்டு, அவர் இறந்ததாக அறிவித்த அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பெல்லா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது மகன் ஈக்குவடார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
"எனது அம்மாவிற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் இதயத் துடிப்பு சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரது கையில் கிள்ளியபோது, அதற்கு அவர் எதிர்வினை ஆற்றினார். இது நல்ல அறிகுறி என்று என்னிடம் கூறிய மருத்துவர்கள், எனது தாயின் உடல் நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் நம்பிக்கை வார்த்தைகளை கூறினர்,” என்று பிரபல நாளிதழான EI Universo வுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் மொன்டோயாவின் மகனான கில்பர்ட் பால்பெரன்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைந்துள்ளது ஈக்குவடார் நாட்டின் சுகாதார அமைச்சகம்.
"ஒரு நாள் காலை எனது அம்மாவின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவர் பபாஹோயோ நகரில் உள்ள ஓரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று அன்று நிகழ்ந்த சம்பவத்தை விவரிக்கிறார் கில்பர்ட்.
பக்கவாதத்தின் விளைவால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் கில்பர்ட் கூறினார்.
தேசிய அளவில் கவனம் பெற்ற சம்பவம்
பெல்லா மொன்டோயா விவகாரம் ஈக்குவடார் நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல்நிலை இன்னும் பலவீனமாகவே இருப்பதால், மேற்கொண்டு அவருக்கு என்ன நேரும் என்பதை ஒட்டுமொத்த தேசமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது என்று பிபிசியிடம் கூறினார் பத்திரிகையாளர் முனோஸ்.
"மருத்துவர்களின் கவனக் குறைவு மற்றும் தவறான முடிவால் தனது தாய்க்கு நேர்ந்த கொடுமை மற்றும் அதன் விளைவாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணம் கோரி கில்பர்ட் நீதிமன்றத்தை அணுகலாம்," என்றும் கூறுகிறார் முனோஸ்.
ஈக்குவடாரைச் சேர்ந்த மூதாட்டி பெல்லா மொன்டோயாவுக்கு நேர்ந்ததை போன்றதொரு துயரச் சம்பவம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்தது. அங்கு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 82 வயது மூதாட்டி, மூன்று மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் இருப்பதாக, இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் தெரிய வந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்