You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு 184 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி நிர்ணயித்த நிலையில், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள், அணியாக சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜான்ஸ் எனும் ரசிகர் கடந்த 4 போட்டிகளில் சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்களில் மிகக்குறைவான ரன்களே எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலுமே பவர் பிளே ஓவர்களில் 50 ரன்களை சிஎஸ்கே எட்டவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
போராட்ட குணத்திற்காகவே சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களாக இருப்பவர்கள், நடப்பு சீசனில் தங்களின் விருப்பத்திற்குரிய அணியில் இதனை பார்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி இப்போது இருப்பது போல மோசமான நிலையில் முன்னெப்போதும் இருந்ததில்லை என சித்தார் ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் எக்ஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் செல்வது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அவர் எழுதியுள்ளார்.
சவுரப் சோமானி என்ற ரசிகரின் பதிவில், ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே என அனைவரும் ஒரு சேர ஃபார்மை இழந்திருப்பது சிஎஸ்கே அணிக்கு விழுந்த அடி என கருத்து கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தமது எக்ஸ் தள பதிவில்,"சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஆர்டரில் ஷிவம் துபேவையே பெரிதும் நம்பியிருக்கிறது. இதுவரை அவர் சிறந்த ஆட்டத்தை கொடுக்க தடுமாறுகிறார். இது தான் முடிவிலும் எதிரொலிக்கிறது" என்று கூறியுள்ளார்.
18 4 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து தடுமாறியது.
10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் விஜய் ஷங்கர் தவிர்த்து வேறு யாருமே 20 ரன்களைத் தாண்டவில்லை. இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ஷிவம் துபே இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். 15 பந்துகளை சந்தித்த அவர் 18 ரன்களை எடுத்து நிகம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டிகளில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி வந்த ரவீந்திர ஜடேஜாவும் இந்த போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூத்த வீரர் தோனி களமிறங்கி விளையாடினார்.
விஜய் ஷங்கருடன் தோனி இணைந்து போராடிய நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்த சென்னை அணி, 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இறுதி வரை களத்திலிருந்த தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். விஜய் ஷங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜேக் ஃப்ரேசரின் விக்கெட் வீழ்ந்தது. இரண்டாவது ஓவரை முகேஷ் சவுத்ரி வீசிய நிலையில் அபிஷேக் பொரல் இந்த ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சரை விளாசினார். பவர் பிளே முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது.
7வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்திருந்த அபிஷேக் பொரல் விக்கெட்டை வீழ்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்திருந்தது.
இதன் பின்னர் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்தாலும் கேஎல் ராகுல் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். 51 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்களைக்கு குவித்தார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற அவர் பதிரானா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் அக்சர் படேல் 21 ரன்களிலும் , சமீர் ரிஸ்வி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து 200 ஸ்ரைக் ரேட்டுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனான அசுதோஷ் ஷர்மா கடைசி ஓவரில் களமிறங்கிய நிலையில், அதே வேகத்தில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இரண்டாவது ரன் ஓட முயற்சித்த போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை தோனி லாவகமாக பிடித்து மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது.
சென்னை தரப்பில் கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோ தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. இதனால் சென்னை அணிக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கிபேட்டிங் செய்து வருகிறது.
நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி இரண்டிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
மறுபுறம் சென்னை அணி தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடனான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது. அணியின் பேட்டிங் லைன் அப் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இவற்றில், பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அணியின் மிகப்பெரிய தோல்வியும், சென்னை ரசிகர்களை சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் தலைமையேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜ் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
களத்தில் விளையாடியது யார்?
சென்னை அணியின் பிளேயிங் லெவன்
ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, மதீஷா பதிரானா.
டெல்லி அணியின் பிளேயிங் லெவன்
ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேஎல் ராகுல், அபிஷேக் போரல், அக்சர் படேல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் , சமீர் ரிஸ்வி, அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மொகித் ஷர்மா,
சுழற்பந்திலும் பலம் வாய்ந்த டெல்லி அணி
அக்சர் படேல் தலைமையில் களம் காணும் டெல்லி அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உற்சாகமாக களமிறங்கியது. அணியில் ஃபாஃப் டூப்ளசிஸ், மிட்செல் ஸ்டார்க் போன்ற அனுபவம் மிக்க வீரர்களையும் விப்ராஜ நிகம், அசுதோஷ் ஷர்மா போன்ற அதிரடியான இளம் வீரர்களையும் கொண்ட கலவையாக உள்ளது. இவர்கள் கடந்த போட்டிகளில் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதை மறக்க முடியாது. இன்றைய போட்டியில் டூப்ளசிஸ் களம் காணவில்லை.
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டாலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் என சுழற்பந்து வரிசையும் டெல்லி அணிக்கு சாதகமாக இருந்தது.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் டெல்லி அணி , சிஎஸ்கே-வை வென்றதில்லை. இந்த வரலாறு மாறியுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு