அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடன் ஆதரித்தாலும் கமலா ஹாரிஸ் முன் நிற்கும் 3 சவால்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பின்வாங்குமாறு கடந்த சில வாரங்களாக வந்த அழுத்தங்களுக்கு மத்தியில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அதிபர் ஜோ பைடன்.

ஜனவரி மாதம் வரையுள்ள தற்போதைய பதவி காலத்தை அதிபர் பைடன் நிறைவு செய்வார். வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அவர் ஆதரித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பைடனின் இந்த முடிவு, கட்சியை ஒரு தெளிவற்ற சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்போது என்ன நடக்கும்?

கடைசியாக, அதிபர் பதவியிலிருந்த ஒருவர் மறுதேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகிய நிகழ்வு 1968-ல் நடந்தது. அப்போது அதிபராக இருந்த லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் போட்டியிலிருந்து பின்வாங்கினார்.

அதிபர் தேர்தலில் மீண்டும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவைக் காட்டிலும் அதிகமான ஆதரவைப் பெற்றிருந்தார் பைடன். அவருக்கு ஏற்கனவே 3896 பிரதிநிதிகள் தங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.

தற்போது போட்டியில் இருந்து விலகிய பைடன் கமலா ஹாரிஸுக்கு ஆதரவை வழங்கினாலும், பைடனுக்கு ஆதரவு அளித்த பிரதிநிதிகள் யாருக்கு வாக்கு அளிக்கின்றார்களோ அவர் தான் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

தேசிய மாநாட்டில் புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்படுவாரா?

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் 19ம் தேதி அன்று துவங்க உள்ளது.

புதிய வேட்பாளருக்கு ஜனநாயகக் கட்சி ஒன்று திரண்டு ஆதரவை வழங்கவில்லை என்றால், 1968ம் ஆண்டுக்கு பிறகு அக்கட்சியினர் தங்களுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் திறந்த மாநாடாக வரவிருக்கும் மாநாடு மாறலாம்.

அதிபர் பதவிக்கு பலர் தங்களை வேட்பாளராக முன்னிறுத்தும் பட்சத்தில் பிரதிநிதிகள் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

குறைந்தபட்சம் 300 பிரதிநிதிகள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவர் இடம் பெறவே முடியும். ஒரு மாகாணத்தில் அதிகபட்சமாக 50 பிரதிநிதிகளின் ஆதரவை மட்டுமே ஒரு வேட்பாளரால் பெற முடியும்

ஜனநாயகக் கட்சியின் விசுவாசிகள் உட்பட 3900 பிரதிநிதிகள் முதல் சுற்று சுற்றில் வாக்களிப்பார்கள்.

இந்த முதல் சுற்றில் வேட்பாளர்கள் யாரும் பெரும்பான்மை வாக்குகளை பெறவில்லை என்றால் அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். அதில் சிறப்பு பிரதிநிதிகளான கட்சித் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் வாக்களிப்பார்கள். அவர்கள் இறுதியாக வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.

கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்றால் ஒருவர் 1976 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்.

கமலா ஹாரிசுக்கு போட்டியாக யார் இருப்பார்?

பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக கோரிக்கை வலுத்து வந்த நிலையில், புது வேட்பாளராக இவர் வரலாம் என்று பலரின் பெயர்கள் அடிபட துவங்கின.

மிச்சிகனின் ஜனநாயகக் கட்சி ஆளுநரான க்ரெட்சன் விட்மர் பெயரும் அதில் ஒன்று. ஆனால், பைடன் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டால் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.

பைடன் தான் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவது குறித்து அறிவித்த சில நிமிடங்களிலேயே, டிரம்ப் தோற்பதற்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கும் தான் எதையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

கலிஃபோர்னியாவின் ஆளுநர் காவின் நியூசம், போக்குவரத்து துறை செயலாளர் புட்டிகீக், பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ போன்றோர் பெயரும் அந்த பட்டியலில் அடிபட்டது.

அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளராக கமலா ஹாரின் பெயர் உறுதி செய்யப்பட்டால், இவர்களில் சிலர் துணை அதிபர் போட்டியில் பங்கேற்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)