இந்தியா விஸ்வரூபம்: இலங்கைக்கு எதிராக அசாத்திய வெற்றி சாத்தியமானது எப்படி?

நடப்பு உலகக் கோப்பையில், இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடர்ந்து ஏழாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை இன்னிங்ஸின் தொடக்கத்தில், ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் பந்திலேயே பாத்தும் நிஷாங்காவை எல்.பி.டபிள்யூ அவுட் ஆக்கினார், மேலும் முகமது சிராஜ் தனது முதல் பந்திலேயே கருணாரத்னேவையும் எல்.பி.டபிள்யூ. செய்தார்.

அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமவையும் சிராஜ் ஆட்டமிழக்கச் செய்தார். மூன்று பேருமே ரன் கணக்கை தொடங்கவில்லை. சிராஜ் தனது அடுத்த ஓவரிலேயே கேப்டன் குசல் மெண்டிஸை பந்துவீசி இலங்கையின் நான்காவது விக்கெட்டை வீழ்த்தினார்.

நான்கு பேட்ஸ்மேன்களும் பெவிலியன் திரும்பும் போது இலங்கை அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

ஆட்டத்தின் 10வது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா பந்தை முகமது ஷமியிடம் கொடுத்தார். ஷமி கேப்டனை ஏமாற்றாமல் தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஷமி தனது முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சரித் அசலங்காவை பலியாக்கினார். பின்னர் துஷான் ஹேமந்தா அடுத்த பந்தில் பெவிலியன் அனுப்பப்பட்டார். ஷமி தனது இரண்டாவது ஓவரில் துஷ்மந்த சமீரவையும் வெளியேற்றினார்.

மூன்றாவது ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக அதிக ரன் சேர்த்தவர் ஏஞ்சலோ மேத்யூஸ். அவர் 12 ரன்கள் எடுத்தார்.

இதன் பின்னர், கசுன் ராஜிதவை சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க முகமது ஷமி தனது ஐந்தாவது விக்கெட்டை ஆட்டமிழந்தார். இலங்கையின் கடைசி விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார். இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பேட்டிங்கில் ஸ்ரேயாஸ், கோலி, கில் அசத்தல்

முன்னதாக, ஸ்ரேயாஸ் ஐயரின் புயல் இன்னிங்ஸ் மற்றும் விராத் கோலி மற்றும் கில் ஆகியோரின் 189 ரன் பார்ட்னர்ஷிப் காரணமாக, இந்தியா இலங்கைக்கு 358 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

டாஸ் வென்ற இலங்கை, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. கேப்டன் ரோகித் ஷர்மா பவுண்டரியுடன் இந்திய பேட்டிங்கைத் தொடங்கினார், ஆனால் அடுத்த பந்திலேயே தில்ஷன் மதுஷங்க தனது இன்ஸ்விங் பந்தில் அவரை பெவிலியன் அனுப்பினார்.

இதையடுத்து, சுப்மான் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்தியாவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.

பவர் பிளேயின் முதல் பத்து ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. 16வது ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 100ஐ கடந்தது. விராட் கோலி தனது 70வது ஒருநாள் அரை சதத்தை அடித்தார், அதே சமயம் சுப்மான் கில் தனது 11வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் இருவரும் தத்தமது சதங்களை நோக்கி நகர்ந்த போது போட்டியின் 30வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தனர்.

முதலில், சுப்மான் கில் 92 ரன்களில் அவுட் ஆனார். இதனால், உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை வெறும் 8 ரன்களில் அவர் தவறவிட்டார், அடுத்த நான்கு பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் கோலி அவுட் ஆனார். இதனை அவர் சதமாக மாற்றியிருந்தால், ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை அவர் சமன் செய்திருப்பார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான இன்னிங்ஸ்

இந்த ஓவரில் முதலில் ஸ்ரேயாஸ் ஐயரும், பின்னர் கே.எல்.ராகுலும் ஆடுகளத்திற்கு வந்தனர். ஸ்ரேயாஸ் ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு தனது மட்டையால் அற்புதங்களைக் காட்டத் தொடங்கினார். 34, 35 மற்றும் 36வது ஓவர்களில் சிக்ஸர் அடித்து தனது மனப்பாங்கை அவர் வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் இருந்து கே.எல்.ராகுலும் ரன் குவித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவரது இன்னிங்ஸ் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் ஆடுகளத்திற்கு வந்து வேகமாக விளையாடினார் ஆனால் 41வது ஓவரில் அவரை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பினார் மதுஷங்கா. சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் இருந்து ஸ்ரேயாஸின் பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வந்த வண்ணம் இருந்தன. ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பான இன்னிங்ஸ் ஆடிய போதிலும், ஸ்ரேயாஸ் சதத்தை தவறவிட்டுவிட்டார். இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்த மதுஷங்கா வீசிய 47வது ஓவரில், இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்த அவர், அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் 56 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உதவியுடன் 82 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.

ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்த பிறகு, ஷமி ஆடுகளத்திற்கு வந்தார், ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு முக்கியமான 22 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் இருவரும் ரன் அவுட் ஆனார்கள். ஷமி 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஜடேஜா 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.

புதிய வரலாறு படைத்த ஷமி

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மீண்டும் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 5 ஓவர் வீசிய அவர், 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம்.

நடப்பு உலகக்கோப்பையில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஷமி இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக அவர் திகழ்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு முறை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரையும் விட அதிகம் அதேபோல், உலகக்கோப்பையில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை அவர் சமன் செய்துள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் முக்கியமான விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள மதுஷங்க அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடி, தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளினார். இந்த மூன்று பந்துவீச்சாளர்களும் இதுவரை 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)