முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கூடலூர் வனச்சரகத்துக்கு பரவியதா ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்?

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில வாரங்களாக காட்டுப் பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. அவற்றின் உடல் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தெப்பக்காடு எனப்படும் பகுதிக்குள்ளேயே நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக முதுமலை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனர் வித்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கூடலூர் வனச்சரகத்தில் கலைவாணி பள்ளி அருகில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலும், யானைசெத்தகொல்லி பகுதி நீரோடை அருகிலும் ஆண் காட்டுப்பன்றிகள் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் உடல்களை மீட்டனர். உடற்கூராய்வு மேற்கொண்ட பிறகு உடல்களையும் அவர்கள் எரித்துவிட்டனர். இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல் தான் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பரிசோதனை முடிவில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்தான் இந்தப் பன்றிகளின் இறப்புக்குக் காரணம் என்பது உறுதியானால், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து கூடலூர் வனப்பகுதிக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி இருப்பதாகப் பொருள்.

முதலில் எப்படி பரவியது?

முதலில், முதுமலையில் எப்படி இந்த நோய் பரவியது என்பது குறித்தும், அதனால், மனிதர்களுக்கு என்ன பாதிப்பு என்றும் பார்ப்போம்.

கேரளாவில் கால்நடைகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக செய்தி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லையோர மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள படந்தாலுமூடு சோதனைசாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் கேரள எல்லையோரங்களில் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கால்நடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சிக்காக எடுத்துவரப்படும் கோழி உள்ளிட்டவை கிருமி நாசினிகள் தெளித்த பிறகே குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது வரை 25 காட்டுப்பன்றிகள் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வெளியே பன்றிகளை எடுத்துச் செல்வதற்கும் உள்ளே கொண்டு வருவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கபட்டுள்ளது. 

முதுமலையில் காட்டுப்பன்றிகளுக்கு பாதிப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது இது தான் முதல் முறை என்கிறார் முதுமலை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் வித்யா.

பிபிசி தமிழ் அவரிடம் பேசியபோது, “கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தான் முதலில் காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு பதிவானது. அங்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்திலும் காட்டுப் பன்றிகள் உயிரிழப்பது தொடர்ந்து பதிவாகி வந்தது. தற்போது வரை 25 காட்டுப் பன்றிகள் உயிரிழந்துள்ளன. 

இந்த மாதிரிகளை உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தோம். இறந்த காட்டுப் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கென பிரத்யேகமான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் கிடையாது.

ஆனால் இது காட்டுப் பன்றிகள் மற்றும் நாட்டு பன்றிகள் இடையேதான் பரவும் என்பது உறுதியாக தெரியும். பிற கால்நடைகள் மற்றும் வன விலங்குகளை இது பாதிக்காது. பன்றிகள் மூலம்தான் இந்த நோய் பரவுவதாக நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமலையில் தெப்பக்காடு முகாமைச் சுற்றித்தான் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளன,” என்றார் வித்யா. 

 மேலும் இது குறித்துப் பேசிய அவர், நோய் பரப்பும் உயிரிகளை கட்டுப்படுத்த தரையில் உள்ள புற்கள் தினமும் கொளுத்தப்படுகின்றன. பொதுவாக பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு விலங்குகளின் சடலம் அடக்கம் செய்யப்படும். ஆனால் நிலத்தின் வழியாக நீரில் நோய் பரப்பும் உயிரிகளைப் பரவ விடக்கூடாது என்பதால் சடலங்களை எரித்துவிடுகிறோம். கடந்த நான்கு நாட்களாக காட்டுப்பன்றி உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

தமிழ்நாட்டிற்குள் எவ்வாறு பரவியது?

இந்த நோய் தமிழ்நாட்டுக்குள் வந்தது எப்படி என்று பேசிய வித்யா, “பந்திப்பூர் புலிகள் காப்பகம் 15 கி.மீ தொலைவில்தான் உள்ளது. அங்குள்ள காட்டுப் பன்றிகள் இங்கு வந்திருக்கலாம்.

காட்டுப் பன்றிகள் மூலம் மட்டுமே இது பரவும் என்றும் சொல்ல முடியாது. பந்திப்பூரிலிருந்து முதுமலைக்கு வந்து செல்லும் காட்டு மாடுகள் மற்றும் யானைகள் மூலமாககூட நோய் பரப்பிகள் முதுமலைக்கு வந்திருக்கலாம். இவையெல்லாம் சாத்தியமான வழிகள்.

சரியான காரணம் இதுதான் என சொல்லிவிட முடியாது. முதுமலையிலிருந்துதான் பந்திப்பூருக்கு தண்ணீர் செல்வதால் தண்ணீர் மூலம் பரவியிருப்பதற்கான சாத்தியம் இல்லை. வனத்துறையினர் தொடர் ரோந்து பணி செய்து கண்காணித்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலே பாதிப்பை கண்டறிந்ததால் பரவாமல் தடுத்துவிட்டோம்” என்றார்.

பன்றிகளை எடுத்துச் செல்ல தடை

நீலகிரி மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் எஸ்.பகவத் சிங் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இறைச்சி உண்பதற்கு தடையில்லை. நோய் பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை பன்றிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் 10 பன்றிப் பண்ணைகள் உள்ளன. அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டு அவற்றை நடத்துபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எட்டு சோதனை சாவடிகளிலும் முறையான கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்டை மாநிலங்களில் பண்ணைகளுக்கு சென்று வரும் வண்டிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. 

நீலகிரி மாவட்டத்தில் நாட்டுப் பன்றிகளில் எந்த பாதிப்பும் தற்போது வரை பதிவாகவில்லை. காட்டுப் பன்றிகள் நாட்டுப் பன்றிகளுடன் தொடர்பில் வந்தால் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பண்ணைகளின் வேலிகளை பலப்படுத்தி, பன்றிகளை வெளியில் செல்லாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார். 

பன்றி இறைச்சி உண்ணலாமா?

பன்றி இறைச்சியை உண்ணலாமா என்று கேட்டபோது “பன்றி இறைச்சி உண்பதற்கு எந்த தடையும்இல்லை. 70 டிகிரி வெப்பத்தில் வைரஸ் அழிந்துவிடும். இறைச்சி சமைக்கும்போது 100 டிகிரிக்கு மேல் வெப்பம் இருப்பதால் உண்பதன் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லை. 

பன்றிகளுக்கு உள்ளே பரவக்கூடிய நோய் என்பதால் இதனால் பதற்றமடைய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாவது இதுதான் முதல் முறை. கடந்த சில நாட்களாக எந்த பன்றிகள் இறப்பும் பதிவாகவில்லை. நோய் பரவல் இல்லை என்று திட்டவட்டமாக நிரூபணமாகிவிட்டால் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்” என்று கூறினார் பகவத் சிங்.

பன்றிக் காய்ச்சல் மனிதர்களை பாதிக்குமா?

பன்றிக் காய்ச்சல் நேரடியாக மனிதர்களை பாதிக்குமா என கால்நடை மருத்துவர் அசோகனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "பன்றிகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுவதால் ஆறு மாதங்களில் 60, 70 கிலோ எடை வந்தால் இறைச்சிக்கு எடுத்து சென்றுவிடுவார்கள். பன்றி இறைச்சி உண்பதால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது.

ஆனால் பாதிக்கப்பட்ட பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் பண்ணைகளில் வேலை செய்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்," என்றார்.

மேலும் இது குறித்துப் பேசிய பகவத் சிங், "கோவையில் மாடுகளை தாக்கும் அம்மை நோயைப் போல விலங்குகளில் ஏற்படும் நோய் பரவல் சிறிய அளவோடு நிற்காது. தற்போது நீலகிரியில் தெப்பக்காடு தவிர வேறு எங்கும் நோய் பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை. அந்த பகுதிக்குள்ளே கட்டுப்படுத்தப்படும் வரை கண்காணிப்புகள் தீவிரமாக இருக்க வேண்டும்" என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: