You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் பயங்கரம்: கார் மோதி இழுத்து செல்லப்பட்ட பெண் - காவல்துறை கூறுவது என்ன?
டெல்லியில் புத்தாண்டு பிறந்த அடுத்த சில மணி நேரத்திலேயே பயங்கர சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். கார் மோதியதும், பெண்ணில் உடல் காரில் சிக்கிக் கொண்டதால் சில கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணை மீட்டு மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
"பெண் உடலின் பின்புறமும், தலையின் பின்புறமும் மிக மோசமாக சேதடைந்திருந்தது," என்று டெல்லி காவல் உதவி ஆணையர் ஹரேந்திரா சிங் தெரிவித்தார். அந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அவர் மறுத்தார். "இது ஒரு விபத்துதான். அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். பெண் உயிரிழக்கக் காரணமான சாலை விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உதவி ஆணையர் ஹரேந்திரா சிங் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கார் பதிவெண்ணை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்தது எப்போது?
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.24 மணிக்கு, காரில் சிக்கிய இளம்பெண் சாலையில் இழுத்துச் செல்லப்படுவதாக காஞ்சவாலா காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததாக காவல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறுகிறது. "பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாக காலை 4.11 மணிக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது" என்று காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரோகினி மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண்ணை மீட்டு மங்கள்புரியில் உள்ள எஸ்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தாகவும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை கூற்றுப்படி, விபத்து நேரிட்ட இடம் சுல்தான்புரி காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஸ்கூட்டி ஒன்று விபத்தில் சிக்கியதாக அந்த காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் காலை 3.53 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி காவல் உதவி ஆணையர் கூறியது என்ன?
"இது துரதிர்ஷ்டவசமானது. தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம்," என்று டெல்லி காவல் உதவி ஆணையர் ஹரேந்திரா சிங் கூறினார்.
- விபத்து நேரிட்டதும் கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவவில்லை. மாறாக, காரில் சிக்கிய பெண்ணை அப்படியே இழுத்துச் சென்றுள்ளார்.
- முதலில் வேண்டுமானால் காருக்கு கீழே பெண் சிக்கியிருப்பது குறித்து அவர்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், காருக்கு கீழே பெண் சிக்கியிருப்பது தெரியவந்த பிறகும் கூட அவர்கள் தவறை சரிசெய்ய முயற்சிக்கவில்லை. இதுகுறித்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- காருக்குள் அதிக சத்தத்துடன் இசை ஒலித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் குடி போதையில் இருந்தார்களா இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும்.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்று அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களைக் கொண்டு சரிபார்க்கப்படும்.
- இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியம் ஏதும் இல்லை. காருக்குப் பின்னே சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், பெண் ஒருவர் அந்த காருக்கு அடியில் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
- காரின் பதிவெண் கிடைத்தது. விபத்து நேரிட்ட போது, காரின் உரிமையாளர் இருக்கவில்லை. அவரது நண்பர்களே காரை எடுத்துச் சென்றுள்ளனர். அந்த 5 பேரின் வீட்டிற்கே சென்று அவர்களை கைது செய்தோம்.
- நீண்ட தூரம் சென்ற பிறகே, காரின் அடியில் பெண்ணின் உடல் இழுத்து வரப்படுவதை அறிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். உடனே காரை நிறுத்திய அவர்கள், பெண்ணின் உடலை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
- பெண்ணின் உடலில் ஆடைகள் இருந்தன. சமூக ஊடகங்களில் வெளியான படங்களில் காலில் இருந்த ஆடைகள் இழுக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.
- சமூக ஊடகங்களில் பரவிய படங்களும், வீடியோக்களும் பெண்ணுடலின் முன்புறத்தை காட்டுகின்றன. பெண்ணுடலின் பின்புறமும், தலையும் முற்றிலுமாக சிதைந்து போனதை காட்டும் பின்புற படங்கள் எங்களிடம் உள்ளன.
- இது ஒரு விபத்துதான். விசாரணைக்கு முன்பே, இதுகுறித்து தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் என்ன சொல்கிறார்?
டெல்லி சாலை விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துளள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
"டெல்லி வீதிகளில் போதையில் மூழ்கிய நபர்களால் பெண் ஒருவர் காருக்கு அடியில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் ஆடையில்லாமல் சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான ஒன்று. டெல்லி காவல்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளோம். புத்தாண்டு தினத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தனவா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் கூறுவது என்ன?
மகளின் உடலை இன்னும் பார்க்கவில்லை என்று அவரது தாயார் கூறியதாக நேற்று இரவு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
"எனக்கு எல்லாமே என் மகள்தான். பஞ்சாபி பாக்கிற்கு அவள் நேற்று(சனிக்கிழமை) வேலைக்குச் சென்றாள். வீட்டை விட்டு மாலை 5.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றாள். இரவு 10 மணிக்கு திரும்பி வந்து விடுவேன் என்று அவள் கூறினாள். அவள் விபத்தில் சிக்கியது குறித்து காலையில்தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்