'வாட் ப்ரோ, வெரி ராங் ப்ரோ' - தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியது என்ன? காணொளி
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குற்றம் சாட்டினார்.
விஜய் பேசுகையில், "புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பிவிடுகிறார்கள் – மும்மொழிக் கொள்கை. மும்மொழிக் கொள்கை செயல்படுத்தாவிட்டால் மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை கொடுக்க மட்டார்கள். எல் கே ஜி, யுகே ஜி பசங்க சண்டை போட்டுக் கொள்வது போல உள்ளது. கொடுக்க வேண்டியது அவர்களது கடமை, வாங்க வேண்டியது இவர்களது உரிமை. இரண்டு பேரும் –அதாவது பாசிசமும் பாயாசமும், அதாவது நமது அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசி வைத்துக் கொண்டு சமூக ஊடகத்தில் ஹேஷ் டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அடித்துக் கொள்வது மாதிரி நடிப்பார்களாம், அதை மக்கள் நம்ப வேண்டுமாம். வாட் ப்ரோ, வெரி ராங் ப்ரோ. இதற்கு இடையில் TVK for TN என்று சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வருகின்றனர், நீங்கள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள், ஸ்லீப்பர் செல்கள் மாதிரி.
நமது ஊர் சுயமரியாதை ஊர், எல்லாரையும் மதிப்போம். எல்லா மொழிகளையும் மதிப்போம், தனிப்பட்ட முறையில் எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் கல்விக் கொள்கையை மொழிக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ?" என்று கூறினார்.
அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



