'உயிருடன் புதைக்கப்பட்ட அலெக்சாண்டர்' - இந்தியா வந்த போது இந்த பேரரசருக்கு நடந்தது என்ன?

(2021- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

'அலெக்சாண்டர் தி கிரேட்' என உலக வரலாற்றாய்வாளர்களால் போற்றப்பட்டு வந்த பேரரசர், கி.மு 323இல் பாபிலோனில் இறந்ததை வரலாற்றுப் பாட நூல்களில் படித்திப்போம். அவர் மர்ம நோயால் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் அல்லது நோய்வாய்ப்பட்டு 32 வயதில் இறந்தார் என்றும் பல கதைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த பேரரசர், நோய் பாதிப்பால் சுயநினைவின்றி இருந்ததை மூச்சு நின்று விட்டதாக கணித்து அந்த காலத்திலேயே உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததாக வெளியான அதிர்ச்சி வரலாறு தெரியுமா?

உலகின் பல சாம்ராஜ்ஜியங்களை வென்ற அந்த பேரரசரின் கடைசி கால வாழ்க்கையை வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் விவரிக்கிறது இந்த கட்டுரை.

பழங்கால கிரேக்கர்கள், இளம் வயதில் போர் ஆற்றல் திறனுடன் விளங்கிய அலெக்சாண்டர் தங்களுடைய மாசிடோனிய கடவுள் என நம்பினர். அதற்கு காரணம், அவர் பால்கன்ஸ் முதல் நவீன பாகிஸ்தான் உள்ள பகுதிவரை தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியிருந்தார். அதுவும் 32 வயதில் இதை அவர் சாதித்திருந்தார்.

நவீன பாகிஸ்தான் நிலப்பரப்பில் இருந்து மற்றொரு ஆக்கிரமிப்புக்கு ஆயத்தமான வேளையில்தான் அவர் திடீரென தாக்கிய மர்ம நோயால் 12 நாட்களுக்கு கடுமையாக அவதிப்பட்டு காலமானார்.

அவரது மரணத்துக்கு மலேரியா, டைஃபாய்டு, மதுப்பழக்கம் போன்றவை காரணம் என சில வரலாற்றாய்வாளர்கள் கூறினார்கள். சிலர் அவரை எதிரிகள் கொலை செய்தார்கள் என்று குறிப்பெழுதினார்கள்.

ஆனால், அலெக்சாண்டரின் கடைசி கால வாழ்க்கையை மிக ஆழமாக ஆய்வு செய்த நியூசிலாந்தின் ஒட்டேகோ பல்கலைக்கழகத்தின் டுன்டின் மருத்துவக் கல்வி நிறுவன மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஏ. கேத்ரைன் ஹால், அலெக்சாண்டர் நரம்பு மண்டலங்களை பலவீனப்படுத்தும் குயில்லன் பார்ரே குறைபாட்டாலேயே (GBS) இறந்திருக்க வேண்டும் என்ற தமது கண்டுபிடிப்பை பதிவு செய்திருக்கிறார்.

அலெக்சாண்டரின் கடைசி கால வாழ்க்கை குறிப்புகளை பதிவு செய்துள்ள பல வரலாற்றாய்வாளர்களும் அவர் தனது மரணப்படுக்கையின் கடைசி நாட்களில் தீராத காய்ச்சல், நாள்பட்ட அடிவயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறியதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்ததில் இந்த முடிவுக்கு கேத்ரைன் ஹால் வந்திருக்கிறார். இவர் வெளியிட்ட ஆய்வறிக்கையை உலக வரலாற்றாய்வாளர்களில் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

குயில்லன் பார்ரே குறைபாடு என்றால் என்ன?

இது நரம்புக்கொழுப்பு இழக்கும் கடும் அழற்சிப் பன்னரம்பு நோய் (AIDP) என்றும் அழைக்கப்படும்.

GBS ஒரு சுயதடுப்பாற்றல் கோளாறு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது.

தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது. இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.

சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும். இந் நோய் சிக்கல்களால் 3%-5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், இரத்தத் தொற்று, நுரையீரலில் இரத்த உறைவு, இதயச் செயலிழப்பு ஆகியவை இச்சிக்கல்களில் அடங்கும்.

இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.

இந்த பாதிப்புகள் அனைத்தும் ஆலெக்சாண்டருக்கு இருந்தது, தமது ஆய்விலும் தெரிய வந்ததாகக் கூறுகிறார் டாக்டர் கேத்ரைன் ஹால்.

கேத்ரைனின் வாதமும் அதிர்ச்சித் தகவலும்

நரம்பு மண்டலத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பு தாக்கும் ஒரு அரிய ஆனால் தீவிரமான தன்னுடல் தாக்கக் கோளாறுதான் இந்த ஜிபிஎஸ்.

தமது கடைசி காலத்தில் ஒரு பொதுவான நுண்கிருமியான கேம்பிலோபாக்டர் பைலோரியின் தொற்றால் அலெக்சாண்டருக்கு இந்த கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

கேத்ரைனின் கூற்றுப்படி, அலெக்சாண்டரை தாக்கிய ஜிபிஎஸ் திரிபு, அவரை எவ்வித குழப்பமான நிலைமைக்கும் ஆளாக்காமலும் மயக்கநிலைக்கு கொண்டு செல்லாமலும் இயல்பாகவே ஒரு பக்கவாதத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆனால், "நாம் நினைத்தபடி அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார் என்று நாம் இதுநாள் வரை நம்பியிருந்தால் அது தவறு," என்று அதிர்ச்சிகரமான தகவலையும் கேத்ரைன் பதிவு செய்திருக்கிறார்.

அலெக்சாண்டர் தீவிர பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அந்த காலத்தில் தற்கால மருத்துவர்கள் நாடித்துடிப்பை கணக்கிட்டு ஒருவருடைய உடலில் உயிர் உள்ளதா என்பதை அனுமானிக்காமல், பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை வைத்தே அவர் இறந்தாரா வாழ்கிறாரா என்ற முடிவுக்கு வரும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தீவிர முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்சாண்டர், கண்கள் மூடிய நிலையிலேயே இருக்க அவருக்கு குறைவான பிராணவாயுவே தேவைப்பட்டது. அதனால், அவரது உடல் அசைவற்றும் இடைவிட்டு மூச்சு விடுவதும் தொடர்ந்தது.

ஆனால், அவரது மூச்சு நின்று போனதாகக் கருதி அவர் இறந்து விட்டதாக அந்த காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிவித்து அவர் உண்மையில் இறக்கும் முன்பாகவே புதைக்க காரணமாகியிருக்க வேண்டும் என தாம் நம்புவதாக கேத்ரைன் கூறுகிறார்.

அதாவது, அலெக்சாண்டரின் மரணம் முன்பு வரலாற்றாய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை விட ஆறு நாட்களுக்குப் பிறகே அவர் இறந்திருக்க வேண்டும் என்ற எனது இந்த ஆய்வு மீது புதிய விவாதம் தொடங்க வேண்டும். அநேகமாக வரலாற்றுப் புத்தகத்தில் அலெக்சாண்டரின் கடைசி கால நாட்கள் திருத்தி எழுதப்பட இந்த ஆய்வு வரலாற்றாய்வாளர்களைத் தூண்ட வேண்டும் என்கிறார் கேத்ரைன் ஹால்.

அவ்வாறு அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறு திருத்தி எழுதப்படுமானால், அதுவே, அந்தக்காலத்தில் நரம்பியல் மண்டல குறைபாட்டின் தாக்கம் ஏற்பட்ட ஒருவருக்கு தவறாக மரணம் கணிக்கப்பட்ட முதல் சம்பவமாக இருக்கும்.

அலெக்சாண்டரின் கடந்த காலம்

"அலெக்சாண்டரின் தந்தை இரண்டாம் ஃபிலிப்புக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் பேரழகி கிளியோபாட்ரா. அவர் அலெக்சாண்டருக்கும் அவரது தாய்க்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தினார்," என்று அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்ததை விவரித்த பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் செவ்வியல் இலக்கியப் பேராசிரியர் டயானா ஸ்பென்சர் கூறுகிறார்.

"தாய், மகன் இருவரும் தாங்கள் முழுமையான மாசிடோனிய ரத்தம் அல்ல என்று உணரத் தொடங்கினர். இந்த உண்மை அவர்களின் கெளரவத்தை குலைப்பதாகவும், அரசியல் ரீதியாக தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தது. சிம்மாசனத்திற்கான போராட்டத்தில் இது அலெக்சாண்டரின் பலவீனமாக இருந்தது.

இரண்டாம் ஃபிலிப்பின் புதிய மனைவியான கிளியோபாட்ரா புதிய ராணியாக மாறியிருக்கலாம். மேலும் ஃபிலிப்புக்குப் பின் அரசுரிமைக்கு வருவதற்கான போட்டியில் ஈடுபட்டவர்களுக்கு இது உதவியாக இருந்திருக்கலாம் . இதன் மூலம் அலெக்சாண்டர் மன்னராக மாறுவதற்கு கிளியோபாட்ரா ஒரு தடையாக இருந்திருக்கக்கூடும்," என்று டயானா ஸ்பென்சர் தெரிவிக்கிறார்.

அரசியல் உண்மைநிலை

முற்றிலும் மாசிடோனிய நாட்டைச் சேர்ந்த ஒரு புதிய ஆண் வாரிசு தோன்றினால், அலெக்சாண்டருக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்பது ஒரு அரசியல் உண்மை. பல வரலாற்றாசிரியர்களும் இந்த நிலையின் உளவியல் பின்னணியை முன்வைத்துள்ளனர்.

"அலெக்சாண்டர் ஆறு மாதங்கள் நாடு கடந்து வாழ்ந்தார். மேலும் அவரது தாயும் சில மாதங்கள் அரசவையிலிருந்து விலகியே இருந்தார். சிறிது காலம் கழிந்தவுடன் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்பு நீங்கி, அலெக்சாண்டர் நாடு திரும்பினார். ஆனால் உறவில் ஏற்பட்ட விரிசல், அலெக்சாண்டர் வாரிசாக உருவெடுக்கும் வழியில் ஒரு தடையாக மாறியது," என டயானா ஸ்பென்சர் விளக்குகிறார்.

"இந்த சூழ்நிலையில், ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அது அலெக்சாண்டரை அரியணையில் அமர்த்தியது. ஒரு தூய மாசிடோனிய ரத்தம் அவரது வாரிசுரிமைக்கு சவால் விடக்கூடிய சூழ்நிலை உருவாவதை அவர் தடுத்தார்."

தந்தையை கொன்றாரா?

அலெக்சாண்டரின் மாற்றாந்தாயான கிளியோபாட்ராவின் மகளின் திருமணத்தின்போது, மன்னர் இரண்டாம் ஃபிலிப் ஒரு பாதுகாவலரால் கொல்லப்பட்டார் என்று டயானா ஸ்பென்சர் கூறுகிறார்.

தப்பிக்க முயன்றபோது அந்தக் காவலரும் கொல்லப்பட்டார். எனவே இந்த கொலைக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த கொலையில் அலெக்சாண்டருக்கும் அவரது தாய்க்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த கொலையுடன் அலெக்சாண்டர் நிற்கவில்லை. அவர் தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைவரையும் ஒவ்வொருவராகக் கொன்றார்.

தன் மாற்றாந்தாய் மகன்களில் ஒருவரான ஃபிலிப் எரிடாய்ஸைத் தவிர்த்து தன்னுடைய எல்லா சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் தான் மன்னராவதற்கு இடையில் நிற்கக்கூடிய அனைவரையும் அலெக்சாண்டர் கொன்றார். அவர்களில் சிலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இறுதியில் அலெக்சாண்டர் அரியணையில் அமர்ந்தார். இப்போது அவரது பார்வை பாரசீக சாம்ராஜ்ஜியத்தின் மீது விழுந்தது. பாரசீக பேரரசு மத்திய தரைக்கடலுடன் இணைந்த பகுதிகளை 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது. இந்தப் பேரரசு வரலாற்றின் உண்மையான வல்லரசுகளில் ஒன்றாகும்.

பாரசீக வெற்றியும் அலெக்சாண்டரின் முடிவும்

பாரசீகப் பேரரசின் எல்லை இந்தியாவிலிருந்து எகிப்து மற்றும் வடக்கு கிரேக்கத்தின் எல்லை வரை நீண்டிருந்தது. ஆனால் இந்த மாபெரும் பேரரசின் முடிவு, அலெக்சாண்டர் மூலம் ஏற்பட்டது.

கிமு 324 இல், அலெக்சாண்டர் பாரசீகத்தின் சூசா நகரை அடைந்தார். பாரசீக மற்றும் மாசிடோனிய மக்களை ஒன்றிணைத்து, தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் ஒரு இனத்தை உருவாக்க அவர் விரும்பினார்.

அலெக்சாண்டர் தனது பல தளபதிகள் மற்றும் அதிகாரிகளை பாரசீக இளவரசிகளை திருமணம் செய்துகொள்ள உத்தரவிட்டார். இதற்கென ஒரே இடத்தில் பல திருமணங்கள் நடக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அலெக்சாண்டர் தனக்கென மேலும் இரண்டு மனைவிகளைத் தேர்ந்தெடுத்தார்.

அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்தது, வெற்றி பெற்றது, பின்னர் வீழ்ச்சியடைந்தது , இவை எல்லாமே மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்தன.

ரோமானிய வரலாற்றாசிரியர்கள்

பல ரோமானிய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அலெக்சாண்டர் சில சமயங்களில் குடிபோதையில் இருந்ததாக டயானா ஸ்பென்சர் கூறுகிறார். ஒருமுறை இரவு உணவின் போது அவர் தனது நெருங்கிய நண்பரை போதையில் கொலை செய்தார்.

குடிபோதை காரணமாக கோபமாகவும் விசித்திரமாகவும் அவர் நடந்து கொண்ட பல சம்பவங்களைப் பற்றி ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், அவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் கேள்விகள் உள்ளன.

"அலெக்சாண்டர் கொலை செய்த நண்பர் கிளெடியஸ், அலெக்சாண்டர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர். அவர் அடிக்கடி அலெக்சாண்டருக்கு நேர்மையுடன் அறிவுரை வழங்குவார். ஒவ்வொரு போரிலும் அவரது வலதுகை போல செயல்பட்டார்.

அலெக்சாண்டர் அன்று நிறைய குடித்துவிட்டார். உங்கள் ஆளுமை மாறுகிறது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் பாரசீக மக்களைப் போல மாறிவருகிறீர்கள். நீங்கள் இனி எங்களில் ஒருவரல்ல என்பது போலத்தெரிகிறது," என்று கிளெடியஸ் கூறினார்.

அதை சொல்வதற்கு கிளெடியஸ் தவறான நேரத்தை தேர்ந்தெடுத்தார். அந்த நேரத்தில் அலெக்சாண்டர் தனது இடத்திலிருந்து எழுந்து, கிளெடியஸின் மார்பில் ஒரு ஈட்டியை எறிந்தார்.

பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா வர வேண்டிய அவசியம் அலெக்சாண்டருக்கு ஏன் ஏற்பட்டது?

இதற்கு பல காரணங்கள் இருந்தன என்று கிரேக்க கலாசார பேராசிரியரான பால் கார்டிலேஸ் கூறுகிறார்.

தனது தந்தை இரண்டாம் பிலிப் எட்டமுடியாத அளவுக்கு தனது ராஜ்ஜியத்தின் எல்லைகள் விரிவடைந்து விட்டன என்பதைக் காட்ட அலெக்சாண்டர் விரும்பினார்.

"பேரரசுகளுக்கு எல்லைகள் அவசியம். தங்கள் எல்லைகளுக்கு அப்பால் என்ன உள்ளது என்பது குறித்து பேரரசுகள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளன. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ரோமானிய பேரரசு. சீசர்-ஏ-ரூம் (சீசர்) பிரிட்டன் மீது போர்தொடுத்தபோது, அலெக்சாண்டர் தனது எல்லைகளை விரிவுபடுத்திய பின்னர், நிரந்தர எல்லைகளை நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார்.

கிமு 323 இல், தனது 32 வது வயதில், பாபிலோன் (இன்றைய இராக்) பகுதியை அவர் அடைந்தபோது, ஒரு மர்மமான நோய் அவரது திடீர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.

பாரசீகத்தை கைப்பற்றிய பின்னர், அவரது ராணுவம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவை (நவீன பாகிஸ்தான் பகுதி) அடைந்தது. இதற்குப் பிறகு அலெக்சாண்டர் மாசிடோனியாவுக்குத் திரும்பத் தொடங்கினார். ஆனால் தாயகம் திரும்பும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு