பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது.

பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது.

மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி,

  • ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது.
  • ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது.

எஸ்டிடி என்றால் என்ன?

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது.

ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது.

வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது.

இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும்.

வருமான வரி தொடர்பான அறிவிப்பு

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

  • வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
  • இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு