You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹல்த்வானி வன்முறை: மதரஸா அகற்றப்பட்டபோது என்ன நடந்தது?
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரத்திலுள்ள பன்பூல்புராவில் வியாழக்கிழமை மாலை வன்முறை வெடித்தது. ஹல்த்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்பூல்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது, கல் வீச்சு தொடங்கியது என்று நைனிடால் காவல்துறை கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கல் வீச்சு மற்றும் தீ வைப்பில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது மக்களுக்கும், அரசு சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கலவரம் செய்வோரைக் கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பன்பூல்புராவில் உள்ள காவல்துறையினர் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டிருந்த மதரஸாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது, உள்ளூர் மக்கள் தீ வைத்து கற்களை வீசத் தொடங்கியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
மதரஸாவை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். நைனிடால் மாவட்ட தகவல் அதிகாரி ஜோதி சுந்த்ரியால், பிபிசி செய்தியாளர் ராஜேஷ் டோப்ரியாலிடம் பேசும்போது, நான்கு பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
வன்முறையில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை கும்பல் பல வாகனங்களை எரித்துள்ளது, பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள். சேத விவரங்கள் குறித்து தற்போது தெளிவாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பல பத்திரிகையாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளும் வன்முறையில் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்புப் படைகளின் நான்கு பட்டாலியன்கள் உட்பட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து காவல்துறை படைகள் வியாழக்கிழமை மாலை ஹல்த்வானிக்கு வரவழைக்கப்பட்டன.
அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மதரஸா கட்டப்பட்டுள்ளதாகவும், அதை இடிக்க ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி எஸ்.எஸ்.பி பிரஹலாத் மீனா தெரிவித்துள்ளார்.
ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)