உங்கள் நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீட்டை மட்டுமே நம்பியிருப்பதால் ஏற்படும் விளைவுகள்

    • எழுதியவர், நாகேந்திர சாய் குந்தவரம்
    • பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக

வாரங்கலை சேர்ந்த சஷிபூஷன், செகந்தராபாத்தில் கணக்கியல் மேலாளராக தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவருடைய வயது 38. நல்ல சம்பளத்துடன், அவருடைய நிறுவனம் அவருக்கு மருத்துவக் காப்பீட்டையும் வழங்கியுள்ளது.

தீவிர வயிற்று வலி காரணமாக ஒரு நாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பென்டிக்ஸ் என்ற குடல்வால் அழற்சி ஏற்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிசிக்கை செய்யப்பட்டது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

அவர் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட குழு காப்பீட்டுத் (Group Insurance) தொகையின் மதிப்பு ரூ.3 லட்சம் மட்டுமே. அவரது சிகிச்சைக்கு ஆன செலவு ரூ. 1.5 லட்சம். ஆனால் அறைகளுக்கான செலவில் சில வரம்புகள் இருப்பதால் அவர் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிட்டது.

இது அவருடைய நிலை மட்டும் அல்ல. தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் குழு காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மட்டும் போதும் என்று பலர் நினைக்கின்றனர். பல ஊழியர்கள் இதேபோன்ற சூழலை எதிர்கொள்கின்றனர்.

ஓர் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையானது எப்படி உதவியாக இருக்கும்? சஷிபூஷனுக்கு ஏற்பட்ட நிலை நாளை உங்களுக்கு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் மேற்கொள்ள வேண்டியது என்ன?

தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்

கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. வருடாந்திர அறிக்கையின்படி, இந்தியாவில் வெறும் 27% நபர்கள் மட்டுமே தனிநபர் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பாலிசி பஜார் எம்ப்ளாயி பெனஃபிட் (Policy Bazaar Employee Benefit) கணக்கெடுப்பின்படி, நகரத்தில் வாழும் 74% பணியாளர்கள் அவர்களின் நிறுவனம் வழங்கும் மருத்துவக் காப்பீட்டை மட்டுமே நம்பியுள்ளனர்.

ப்ளம் ஹெல்த்கேர் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, சராசரி குழு காப்பீட்டுத் தொகையானது இந்தியாவில் ரூ. 3 லட்சம். நகரங்களில் பணியாற்றும் 74% நபர்கள் முழுக்க முழுக்க அவர்கள் பணியாற்றும் நிறுவனம் வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை நம்பியுள்ளதாகக் கூறுகின்றனர்.

தொழில்நுட்பம் சார்ந்த காப்பீட்டு நிறுவனமான ப்ள்ம் ரிசர்ச்சின்படி, சராசரி காப்பீட்டு மதிப்பானது ரூ. 3 லட்சமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், 85% நிறுவனங்கள், அவர்களின் ஊழியர்கள் நாள்பட்ட நோயால் அவதிப்படும்போது கூடுதல் உதவிகளை வழங்கியதற்கான பதிவுகளைக்கூட கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் எவ்வளவு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது மற்றுமோர் உதாரணத்தைப் பார்ப்போம்.

பாவனா ஐ.டி. நிறுவனம் ஒன்றில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்க ஊழியர். புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பெரிய பதவி ஒன்றில் பணியாற்றுவதற்காக இந்த வேலையில் இருந்து வெளியேறினார். புதிய பணியில் சேர்வதற்கு இடையே அவரிடம் 15 நாட்கள் இடைவெளி இருந்தன. இந்தச் சூழலில் அவருக்கு டெங்கு நோய் ஏற்பட்டது.

முறையான காப்பீடு ஏதுமில்லை என்பதால் அவர் ரூ. 6 லட்சத்தை சிகிச்சைக்காகச் செலவிட்டார். அவரது பழைய பணியிடத்தில் நல்ல மருத்துவக் காப்பீட்டு வசதிகள் இருந்தன. ஆனால் அவர் பணியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு அதன் பலன்கள் ஏதும் கிடைக்காது என்பதால் அந்தக் காப்பீட்டை அவர் இழந்தார்.

அவருக்கென சொந்தமாகக் காப்பீடு இருந்திருந்தால் இப்படியான நெருக்கடியை அவர் சந்தித்திருக்க வேண்டியதில்லை.

குழு காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

குழு காப்பீட்டுத் திட்டம் மற்றும் கார்ப்பரேட் மெடிக்கிளைம் போன்றவை கார்ப்பரேட் பெருநிறுவனங்களால் அவர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

குறைவான மொத்த ப்ரீமியத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை உள்ளடக்குகின்றனர். அதிக அளவில் ப்ரீமியம் கிடைப்பதால் ஊழியர்களுக்குக் குறைவான விலையில் இதை வழங்க இயல்கிறது.

இதன் மூலம் நிறுவனம் பல வரிசார் பலன்களையும் பெறுகிறது. ப்ரீமியத்தை நிறுவனமே செலுத்துவதால் ஊழியர்களும் இதைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர், ஊழியரின் இணையர் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சில நேரங்களில் பெற்றவர்களுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

சில நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கிய ப்ரீமியத்தை ஊழியர்களின் சம்பளத்தில் கழித்துக் கொள்கின்றன. முந்தைய நோய் நிலைமைகள், தற்போதுள்ள நோய்களில் சிலவற்றுக்கு விலக்கு மற்றும் வயது அடைப்படையிலான ப்ரீமியம் போன்றவை குழு காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்பதால் பலரும் இதைத் தேர்வு செய்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள், அதிகபட்சமாக மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடுகளை வழங்கவே ஆர்வம் காட்டுகின்றன. எந்தவொரு காப்பீடுமே இல்லாமல் இருப்பதற்கு இது சிறிது நன்மை பயப்பதாகத் தோன்றலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் வளரும்போது, வயதாகும்போது, உடல்நலக் குறைவு ஏற்படும்போது, நிறுவனங்கள் வழங்கும் இந்தக் காப்பீட்டை மட்டும் சார்ந்திருப்பது அபாயகரமானது.

பேறுகாலம் மற்றும் புறநோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கு?

கார்ப்பரேட் மெடிக்கிளைம்கள் பேறுகாலத்திற்கு அதிக அளவில் உதவுவதில்லை. பெரும்பாலான திட்டங்களில் ஒருவர் ரூ. 25 முதல் 50 ஆயிரம் வரை மட்டுமே காப்பீட்டின் மூலம் திரும்பிப் பெற இயலும்.

ஐ.வி.எஃப் மற்றும் இதர மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் பெரிதும் உதவுவதில்லை.

சொந்தமாக வைத்திருக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் உள்ளது. அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை கவரேஜ் உள்ளது.

சிசேரியன், இதர சிகிச்சைகள், பிறந்த குழந்தைக்கான சிகிச்சை, தடுப்பூசிகள் போன்றவற்றுக்கும் இதில் காப்பீடு வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள், வழங்கப்படும் அதிக ப்ரீமியத்திற்கு ஏற்ற வகையில் ஐ.வி.எஃப் போன்ற சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்குகின்றன.

குழந்தைகளுக்கான காப்பீடு

குழு காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு குழந்தைகள் மற்றும் துணை ஒருவருக்கு மட்டுமே காப்பீட்டை வழங்குகிறது. பெற்றோர்களுக்கான காப்பீடு என்பது குறைவாகவே உள்ளது.

அதேபோன்று குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் காப்பீடு குறைவாகவே உள்ளது.

உங்களுக்கான சொந்த காப்பீட்டுத் திட்டத்தில் பெற்றோர்களுக்கும் சில நேரங்களில் உங்கள் மாமனார், மாமியாருக்கும் சேர்த்தே காப்பீட்டைப் பெற இயலும்.

மேலும் நோய் நிலை தீவிரமாக இருக்கும்போது, புறநோயாளியாக சிகிச்சை பெறும்போதும், மனநலம் சார்ந்த சிகிச்சைகள், பல் மருத்துவம் தொடர்பான சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் சில நிறுவனங்கள் காப்பீடுகளை வழங்குகின்றன.

முதல் நிலை தேவைக்கான ஒரு பாதுகாப்பாகவே கார்ப்பரேட் காப்பீட்டை கருதுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக ரூ. 10 முதல் 15 லட்சம் வரையிலான ஃப்ளோட்டர் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குங்கள்.

ரூ.20 லட்சம் வரையிலான காப்பீட்டிற்கான டாப்-அப்பை குறைவான விலையில் பெற இயலும். 35 வயதுக்கு முன்பாகவோ அல்லது அதற்கும் முன்னதாகவோ உங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குங்கள்.

குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் மகப்பேறு மற்றும் தீவிர சிகிச்சைக்கான 'ஆட்-ஆன்களை'யும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

சிறிய சிறிய மருத்துவ செலவுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற கார்ப்பரேட் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்குத் தேவை ஏற்பட்டால் மட்டுமே சொந்த காப்பீட்டு திட்டத்தைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், அதை அப்படியே வைத்திருந்து வருடாந்திர 'நோ-க்ளைம் போனஸை' தக்கவைத்துக் கொள்ளுங்கள். அவசரக் காலத்தின்போது அது உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

இறுதியாக உங்கள் பணியும் உங்களின் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வேலை செய்யாமல் இருக்கின்ற காலத்தில் உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வராது என்று அர்த்தமில்லை. அதனால்தான் உங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் என்பது மிகவும் முக்கியமானது.

*குறிப்பு: தகவல் தேவைகளுக்காகவே இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதிசார் முடிவுகளை மேற்கொள்ளும்போது நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுக்கவும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு