கற்பிட்டி கடலில் கொல்லப்படும் பெருமளவு டால்பின் மீன்கள்
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் உள்ள பல மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.
கற்பிட்டி கடற்பகுதியலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி தொடரும் தொழில் நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் இன்று நடந்துள்ளது.

இன்று காலை பாலாவி பிரதான வீதியில் குறிஞ்சம்பிட்டி சந்தியில் வீதியை மறித்த மீனவர்கள் ஒன்றரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டைனமைட் வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்படுவதால் பெருமளவிலான கடல் வளங்கள் தொடர்ந்து அப்பகுதியில் அழிந்துவருவதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய மீனவர்கள் கூறினர்.
குறிப்பாக, விற்பனைக்கான மீன்களை பிடிக்கும்போது, அகப்படும் பெருமளவிலான டால்பின் மீன்கள் நாளாந்தம் கொல்லப்பட்டு கடலில் எறியப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் வெளியூர் மீனவர்களைத் தடுக்க முயன்றபோது, நேற்று தாங்கள் தாக்கப்பட்டதாக கண்டக்குளி மீனவர்கள் கூறுகின்றனர்.
லைலா வலை, சுருக்குவலை போன்ற கடல் வளங்களை அழிக்கக்கூடிய வலைகளில் சிக்கி உயிரிழந்த சுமார் 100 டால்பின் மீன்கள் கடந்த வாரத்தில் மட்டும் கடலில் எறியப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் டைனமைட் வெடிவைத்து மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.