
ஜெமினிட்ஸ்
இலங்கையில் பெருமளவில் விண்கற்கள் வானில் தென்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து, அடையாளம் தெரியா பொருட்கள் ஏதாவது வானில் இருந்து விழுந்தால் அவை குறித்து தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இலங்கையின் பல பாகங்களில் வானில் எரிகற்கள் (விண்கற்கள்) அதிகமாக காணப்பட்டதாக பல இடங்களிலும் இருந்தும் தகவல்கள் வந்ததாகவும், அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அனில் சமரநாயக்க தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.
ஜெமினிட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு விண்கற்கள் தொகுதி தற்போது உலகுக்கு அருகாக பயணிப்பதால், அவற்றை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்று நாசா நிறுவனம் கூட அறிவித்துள்ளதாகவும், அத்துடன் அப்படியான எரிகற்களில் முழுமையாக எரியாதவை எவையேனும் நிலத்தில் வீழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
அப்படியாக நிலத்தில் விழக்கூடிய பொருட்களில் கதிர்வீச்சு இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், அவற்றை பொதுமக்கள் தொடக்கூடாது என்றும், அவை குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.







