You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கப் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்
உலகின் மிகவும் வேகமான மனிதர் என்று அறியப்படும் உசைன் போல்ட் தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை இழக்கிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் தொடரோட்டத்தில்(4 X 100) தங்கம் வென்ற அணியில், அவருடன் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதால் அந்த அணியின் பதக்கம் பறிக்கப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்-ஐஓசி, 454 விளையாட்டு வீரர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளை கடந்த ஆண்டு பரிசோதித்தது.
அப்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெத்தைல்ஹெக்ஸாநியமைனை அவர் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்தத் தகவல் கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரே நெஸ்டா கார்ட்டருக்கு தெரிவிக்கப்பட்டது.
போல்ட்டுக்கு பாதகமில்லை ஆனால் சங்கடம்
அணியில் இருந்த ஒருவர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்தாலும், ஒட்டுமொத்த அணியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பங்கேற்ற நால்வரிடமிருந்தும் பதக்கம் பறிக்கப்படும் என ஐஓசியின் சட்டங்கள் கூறுகின்றன.
இதன் மூலம் உசைன் போல்ட்டுக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்றாலும், இது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
இச்சூழல் காரணமாக இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்றுள்ள ஒன்பது தங்கப் பதக்கங்களில் ஒன்றை திருப்பியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008ல் பீஜிங், 2012ல் லண்டன் மற்றும் 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 100, 200 மீட்டர் ஓட்டத்திலும், 100 மீட்டர் தொடரோட்டத்திலும் அவர் மொத்தமாக ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100மீட்டர் தொடரோட்டத்தில் ஜமைக்கா அணியின் சார்பில் முதலாவதாக நெஸ்டா கார்ட்டரும் பின்னர் தொடர்ச்சியாக மைக்கேல் ஃப்ரேட்டர், உசைன் போல்ட் ஆகியோரும் கடைசியாக அசாஃபா பவலும் ஓடினர்.
அந்த நால்வரும் சேர்ந்து 37.10 நொடிகளில் ஓடி உலக சாதனைப் படைத்திருந்தனர். அதுவும் இப்போது ரத்தாகிறது.
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்த அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த ட்ரினிடாட் மற்றும் டொபேகோ அணி முதலிடத்துக்கு உயர்த்தப்படுகிறது. வெண்கலப் பதக்கம் வென்ற ஜப்பான் அணிக்கு வெள்ளிப் பதக்கமும், நான்காவது இடத்தைப் பெற்ற பிரேசில் அணிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும்.
குளறுபடி
பீஜிங் போட்டியில் வென்ற அந்த நாலவர் அணியிடமிருந்து சோதனைகளுக்காக சிறுநீர் மாதிரிகள் பெறப்பட்டு, அவை சோதிக்கப்பட்டு ஊக்கமருந்துகளுக்கான அறிகுறிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பின்னர் கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரியில் சில குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்ட பிறகு ஐஓசி சேமித்து வைத்திருந்த இன்னொரு மாதிரியை மீண்டும் ஐஓசி பரிசோதனைக்கு உட்படுத்தியது.
ஊக்கமருந்து பயன்பாடு விளையாட்டுத் துறைக்கு ஒரு சாபக்கேடு என்றும், அதில் ஈடுபடுபவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது என்றும் முன்னர் பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் உசைன் போல்ட் கூறியிருந்தார்.
எனினும் இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்திடம் நெஸ்டா கார்ட்டர் மேல்முறையீடு செய்ய முடியும்.