தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 12:58 ஜிஎம்டி

முறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.

]]>