காது கேளாதோரின் மூளை செயல்பாடுகள் குறையலாம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2013 - 15:13 ஜிஎம்டி
காது கேளா சிறார்கள்

காது கேளா சிறார்கள்

கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் மூளையின் திறன்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு கூறுகிறது.

ஒருவருடை கேட்கும் திறன் குறையக் குறைய மூளையின் இணைப்புகளில் மாற்றங்கள் நிகழ்வதும், மற்றவர்களுடன் உரையாட முடியாமல் போவதால் சமூக ரீதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் மூளைத் திறனின் வீழ்ச்சிக்குக் காரணம் கருதப்படுகிறது.

ஆகவே கேட்கும் கோளாறுகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும், கேட்பதில் உதவக்கூடிய கருவிகளை அணிந்துகொள்வதன் மூலமாகவும் மூளைத் திறன் பாதிப்பு ஏற்படுவதை ஒத்திப்போட முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எழுபது வயதைத் தாண்டியவர்கள் சுமார் இரண்டாயிரம் பேரிடம் ஆறு ஆண்டுகாலம் கேட்கும் திறன் மற்றும் மூளைத் திறன் பரிசோதனைகளை நடத்தி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களின் மூளைத் திறன் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது என்றாலும், கேட்புத் திறனில் பாதிப்பு உள்ளவர்களிடம் இந்தப் பாதிப்பு மற்றவர்களை விட மிக வேகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூளைத் திறனில் பாதிப்பு ஏற்படுவது டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகள் நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வில் பங்கேற்றிருந்தவர்களின் ஒருவரான டாக்டர் பிராங்க் ளின் கூறுகிறார்.

ஆய்வு

அமெரிக்காவிலேயே கூட காது கேட்பதில் பிரச்சினை உள்ளவர்களில் 15 சதவீதம் பேர்தான் காது கேட்பதில் உதவக்கூடிய ஹியரிங் எய்ட் கருவிகளைப் பொறுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறாமலேயே இருந்துவிடுகின்றனர் என்று டாக்டர் லின் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

கேட்புத் திறன் பாதிப்புக்கும் மூளைத் திறன் பாதிப்புக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என்று பிரிட்டனில் அல்செய்மர்ஸ் நோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் எரிக் கர்ரன் கூறுகிறார்.

ஆனாலும் மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படும் முக்கியமான ஒரு விஷயம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

அப்படி தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்படுமானால், முன்கூட்டியே கேட்புத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களுக்கு மூளை அழுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.

]]>