வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இந்திய அணி. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய வங்கதேசம் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியா v வங்கதேசம் என்ன நடந்தது?

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

    இவ்விருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தனர்.

    ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார். 92 பந்துகளில் ஏழு பௌண்டரி ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார் ரோகித் ஷர்மா.

    கே.எல்.ராகுல் 92 பந்துகளில் ஆறு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்திய அணித் தலைவர் 26 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமலும் முஸ்தாபிசுர் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ரிஷப் பந்த் அதிரடியாக ஆடினார்.ஆனால் அரை சதமடிப்பதற்குள் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் எட்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.

    வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்கதேச அணி சேஸிங் செய்யும்போது ஷகிப் மற்றும் சைஃபுத்தீன் மட்டும் அரை சதமடித்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆட வில்லை.

    குறிப்பாக ஏழாவது விக்கெட்டுக்கு சபீர் - சைஃபுத்தீன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்தியா v வங்கதேசம்

    பட மூலாதாரம், Getty Images

  2. அடுத்தடுத்த பந்துகளில் பும்ராவுக்கு விக்கெட்

    கடைசி மூன்று ஓவர்களில் வங்கதேசத்துக்கு வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆனால் ருபேல் ஹுசேன், முஸ்தாபிசுர் ரஹ்மான் இருவரையும் போல்டாக்கி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் பும்ரா.

    சைஃபுத்தீன் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

  3. சிக்சருக்கு பின் அவுட்

    வங்கதேச அணித்தலைவர் மோர்தாசா, புவனேஷ்வர் குமாரின் 45-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். ஆனால் அதற்கடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாமலிருந்த நிலையில் குல்தீப் யாதவும் பதிலாக இன்று அணியில் சேர்க்கப்பட்டார்.

    மோர்தசாவின் விக்கெட்தான் இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாரின் முதல் விக்கெட்டாக அமைந்தது.

  4. சபீரை ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா

    கோலி தனது துருப்புசீட்டு பும்ரா மூலம் வங்கதேசத்தின் ஏழாவது விக்கெட்டை வீழ்த்தினார்.

    சபீர் ரஹ்மான் 36 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த வேளையில் பும்ராவின் பந்தில் போல்டானார்.

    சபீர் - சைஃபுத்தீன் இணை ஏழாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.

    தற்போது வங்கதேச அணித்தலைவர் மோர்தாசா களமிறங்கியுள்ளார்.

  5. ஏழாவது விக்கெட்டுக்கு சபீர் - சைஃபுத்தீன் சிறப்பான ஆட்டம்

    வங்கதேச அணி 42 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 75 ரன்கள் தேவை.

    ஷகிப் ஆட்டமிழந்த பிறகு சபீர் ரஹ்மான் - மொஹம்மத் சைஃபுத்தீன் இணை 49 பந்துகளில் 61 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

  6. ஷகிப் வீழ்ந்தார்

    ஹர்திக் பாண்ட்யாவின் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஷகிப்.

    315 ரன்களை துரத்தும் வங்கதேசம் தற்போது சிக்கலில் இருக்கிறது.

    வங்கதேசத்தின் துருப்புச்சீட்டான ஷகிப் அல் ஹசன் 74 பந்துகளில் ஆறு பௌண்டரிகள் உதவியுடன் 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    34-வது ஓவரில் ஷகிப் ஆட்டமிழந்த நிலையில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 96 பந்துகளில் 136 ரன்கள் தேவைப்படுகிறது.

    வங்கதேசத்தின் கடைசி நம்பிக்கை பேட்ஸ்மேன் அவுட்டானதால் இந்திய அணி உற்சாகமடைந்துள்ளது

    ஷகிப் அல் ஹசன்

    பட மூலாதாரம், Getty Images

  7. வங்கதேசத்தின் பாதி விக்கெட்டுகள் காலி

    பும்ராவின் பந்தில் மொசாதக் ஹொசைன் போல்டானார்.

    33-வது ஓவரின் இரண்டாவது பந்தில் தமது ஐந்தாவது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்.

    ஏழு பந்துகளை சந்தித்து மூன்று ரன்கள் மட்டும் எடுத்தார் ஹொசைன்.

    வங்கதேசத்தின் வெற்றிக்கு 17 ஓவர்களில் 138 ரன்கள் தேவை.

  8. பாண்ட்யாவுக்கு இரண்டாவது விக்கெட்

    லித்தன் தாஸை ஆட்டமிழக்கச் செய்தார் ஹர்திக் பாண்ட்யா.

    24 பந்துகளில் ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்திருந்த லித்தன், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷகிப் நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    வங்கதேசம் வெற்றி பெற 19 ஓவர்களில் 146 ரன்கள் எடுக்க வேண்டும்.

    பும்ராவுக்கு ஐந்து ஓவர்கள், ஷமிக்கு நான்கு ஓவர்கள், புவனேஷ்வர் குமாருக்கு மூன்று ஓவர்கள் மீதமிருக்கின்றன.

  9. ரன் அவுட்டிலிருந்து தப்பினார் லித்தன் தாஸ்.

    28-வது ஓவரின் மூன்றாவது பந்தை ஷகிப் எதிர்கொண்டார்.

    இரண்டாவது ரன்னுக்கு லித்தன் தாஸ் முயன்றபோது சாஹல் - தோனி இணைக்கு ரன் அவுட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    ஆனால் லித்தன் தாஸ் துரிதமாக செயல்பட்டு கிரீசுக்குள் சென்று ரன் அவுட்டாகும் சூழலில் இருந்து தப்பித்தார்.

    வங்கதேச அணி 28-வது ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

    ஷகிப் அல் ஹசன் 58 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

  10. முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார் முஷ்பிகுர் ரஹீம்

    மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கி சிறப்பாக விளையாடிவந்த ஷகிப் - ரஹீம் இணையை பிரித்தார் சாஹல்.

    24-வது ஓவரின் கடைசி பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹீம்.

    23 பந்துகளில் மூன்று பௌண்டரிகள் உதவியோடு 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரஹீம்.

    இதையடுத்து ஷகிப் அல் ஹசனுடன் ஜோடி சேர்ந்து விளையாடிவருகிறார் லித்தன் தாஸ்.

    முஷ்பிகுர் ரஹீம்

    பட மூலாதாரம், Getty Images

  11. நூறு ரன்களை கடந்தது வங்கதேசம்

    20-வது ஓவரில் நூறு ரன்களை கடந்தது வங்கதேசம். இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னதாக சவுமியா சர்கார் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இணை தற்போது விளையாடிவருகிறது.

    வங்கதேசம் அடுத்த 30 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி பெற முடியும்.

    இந்திய அணித் தரப்பில் யுவேந்திர சாஹல் இதுவரை 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

  12. ரிவ்யூவை இழந்தது இந்தியா

    12-வது ஓவரை ஷமி வீசினார். இரண்டாவது பந்தை சவுமியா சர்க்கார் சந்தித்தார். எல்.பி அப்பீல் செய்தார் ஷமி. கள நடுவர் அவுட் கொடுக்க வில்லை.

    இதையடுத்து மூன்றாவது நடுவரிடம் 'ரிவ்யூ' கேட்டது இந்திய அணி.

    மூன்றாவது நடுவர் பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாக கால்காப்பில் பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால் கள நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்றார்.

    இதனால் இந்திய அணி ரிவ்யூவை இழந்தது. சவுமியா சர்க்கார் 22 ரன்களுடன் விளையாடி வருகிறார். வங்கதேசம் 50 ரன்களை கடந்து விளையாடிவருகிறது.

  13. முதல் விக்கெட்டை இழந்தது வங்கதேசம்

    315 ரன்கள் எனும் இலக்கை துரத்தி விளையாடிவரும் வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது.

    பத்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நாற்பது ரன்கள் எடுத்துள்ளது.

    ஷமி வீசிய ஒன்பதாவது ஓவரில் தமீம் இக்பால் போல்டானார். அவர் 31 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    புவனேஷ்வர் குமார் 5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்தார்.

    பும்ரா தனது மூன்று ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்தார்.

    தமீம் ஆட்டமிழந்தையடுத்து ஷகிப் அல் ஹசன் சவுமியா சர்காருடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    தமீம் இக்பால்

    பட மூலாதாரம், Getty Images

  14. இந்தியா - 314/9

    கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது இந்தியா. மேலும் ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி ஓவரில் அவர் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு முறை 300-க்கும் மேற்பட்ட இலக்கை சேசிங் செய்துள்ளது வங்கதேசம்.

    இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா சதமடித்தார்.

    கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். ரிஷப் பந்த் இரு ரன்களில் அரை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    தொடக்க சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியின் நடு வரிசை அதிரடியான ஆட்டத்தை வெளிபப்டுத்தவில்லை.

    தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை.

    கடந்த போட்டியில் விமர்சனத்துக்குள்ளான தோனி 33 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணித் தலைவர் விராட் கோலி 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி கடைசி 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

    INDIA v BANGLADESH

    பட மூலாதாரம், Getty Images

  15. கடைசி ஓவரில் என்ன நடந்தது?

    முஸ்தாபிசூர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தோனி மறுத்துவிட்டார்.

    இரண்டாவது பந்தை மிட் ஆன் திசையில் அடித்தார் ரன்கள் இல்லை.

    மூன்றாவது பந்து டாப் எட்ஜ் ஆனது. ஷகிப் அல் ஹசன் கேட்ச் மூலம் தோனி அவுட்டானார்.

    நான்காவது பந்தில் புவனேஷ்வர் குமார் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் ஷமி ஒரு ரன் எடுத்தார்.

    கடைசி பந்து வைடாக அமைந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் ரன் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் பந்துவீச்சாளர் முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கி சரியாக வீச புவனேஷ்வர் குமார் பெவிலியன் திரும்பினார்.

    கடைசி பந்தில் ஷமி அவுட் ஆனார்.

    கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஆனால் மூன்று ரன்கள் மட்டுமே கிடைத்தது.

    50 ஓவர்கள் முடிவில் இந்தியா 314 ரன்கள் குவித்தது.

    கடைசி மூன்று ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

    முஸ்தாபிசூர்

    பட மூலாதாரம், Getty Images

  16. 49-வது ஓவரில் 11 ரன்கள்

    சைஃபுத்தீன் வீசிய 49-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தார் தோனி.

  17. தினேஷ் கார்த்திக் அவுட்

    கேதர் ஜாதவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்தியா 298/6 - 47.2 ஓவர்களில்

  18. ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்

    ஷகிப் அல் ஹசனின் பத்தாவது ஓவரில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.

    பந்த் அடித்த பந்து மொசாதக் ஹொசைன் கையில் தஞ்சமடைந்தது.

    ரிஷப் பந்த் ஆறு பௌண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் உதவியுடன் 41 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட்.ஆனார்.

    இந்தியா 45 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. பத்து ஓவர்கள் வீசிய ஷகிப் 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    தினேஷ் கார்த்திக் - தோனி இணை தற்போது விளையாடிவருகிறது.

    ரிஷப் பந்த்

    பட மூலாதாரம், Getty Images

  19. மூன்று பந்தில் இரண்டு விக்கெட்டுகள்

    39-வது ஓவரை மெய்டனாக வீசினார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான். விராட் கோலி, ஹர்டிக் பாண்ட்யா என இரு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார் முஸ்தாஃபிசுர்.

    இதையடுத்து ரிஷப் பந்த் - தோனி இணைந்து விளையாடி வருகின்றனர்.

  20. கே.எல்.ராகுல் அவுட்

    ருபெல் ஹுசைன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரஹீமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

    92 பந்துகளில் ஆறு பௌண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் விளாசி 77 ரன்கள் எடுத்தநிலையில் ராகுல் ஆட்டமிழந்தார்.

    ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு அடுத்த 20 பந்துகளில் இந்தியாவின் மற்றொரு விக்கெட்டையும் இழந்துள்ளது.

    32.4 ஓவர்கள் முடிவில் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.