மும்பைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தோனி சிக்சர் மழை - சிஎஸ்கே அசத்தல், மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசி அசத்தல்

பட மூலாதாரம், SPORTZPICS
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே என இருவரும் அரை சதம் அடித்தனர். கடைசி ஓவரில் பேட் செய்ய வந்த தோனி, ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே களம் கண்டனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் உள்ளே வந்தார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்செல் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் தோனி களமிறங்கினார். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் தோனி. தோனி அத்துடன் நிற்கவில்லை, ஹர்திக் வீசிய அடுத்த இரு பந்துகளையுமே எல்லைக்கோட்டிற்கு வெளியே பறந்து போகச் செய்தார். தோனி ஹாட்ரிக் சிக்சர்களை விளாசியதும் ரசிகர்களின் ஆரவாரம் எல்லை கடந்து போனது. கடைசிப் பந்திலும் தோனி சிக்சர் விளாசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, எதிர்பாராத வகையில் அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்றது. அதில் தோனி 2 ரன்களை எடுத்தார். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களுடன் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறு முனையில் ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை நோக்கி மும்பை அணி ஆடி வருகிறது.
தோனி நடப்பு ஐ.பி.எல். தொடரில் 25 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களை குவித்துள்ளார். ஒரு முறை கூட அவுட்டாகவில்லை. 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து இதுவரை அவர் 82 பந்துகளை எதிர்கொண்டு 16 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 163 ரன்களை அவர் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.78.

பட மூலாதாரம், SPORTZPICS






