ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "கல்வியில் மிகவும் பின் தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாணவர்களின் நலன் கருதி கடந்த கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநரின் ஒப்புதல் பெற்று,பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாணை பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அன்று மாலையே சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த காரணத்தால் அரசு எந்த பணியும் செய்ய முடியாமல் போனது. இதுதான் உண்மை நிலை. ஆனால் இதை திசை திருப்பி இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு எந்த பணியும் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது போன்ற மாயையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து தொகுதிகளிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என திமுிக கூறியுள்ளது. ஆனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தை திறன் இல்லாதது போல காட்ட முயன்றால் அளித்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்கள்?," என்று சண்முகம் கேள்வி எழுப்பினார்.
"ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி செலவழிக்க நிதி இல்லை என்று சொல்லும் திமுக அரசு, மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு மட்டும் ரூ.200 கோடியை எப்படி ஒதுக்கியது? யார் துவங்கினாலும் நூலகம் வரவேற்கப்பட வேண்டியது, வரவேற்கிறோம். நிதி இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தை மூடுகிறோம் என்றும்.அதை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறோம் என்றும் ஆளும் அரசு கூறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் தன்னால் பல்கலைக்கழகம் கொண்டு வர முடியாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாததால்தான் தமிழக அமைச்சர் பொன்முடி, அந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்.
உண்மையில் அவருக்கு ஜெயலலிதா பெயரில் இந்த பல்கலைக்கழகம் இருப்பதுதான் பிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் பெயர்தான் உறுத்துகிறது என்றால், கஷ்டமாக இருக்கிறது என்றால், யார் பெயரை வேண்டுமானாலும் பல்கலைக்கழகத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பொதுவானவரான அம்பேத்கரின் பெயரை கூட வைத்து விடுங்கள். எங்களது தேவை விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே. இதில் அரசியல் இருக்க வேண்டாம்.
எந்த சூழலிலும் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு பாதிக்கப்படக் கூடாது. எனவே. ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார் சிவி.சண்முகம்.