தேர்தல் முடிவுகள் - நாளை வாக்கு எண்ணிக்கை

17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) வெளியாக இருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. “அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது. விழிப்புடன் இருங்கள். அச்சம் கொள்ளாதீர்கள். தேர்தலுக்கு பிந்தைய போலி கருத்துக் கணிப்புகளால் துவண்டுவிடாதீர்கள்.” என்று காங்கிரஸ் கட்சியினரிடம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், Getty Images

  2. "வாக்காளர் தீர்ப்பை சேதப்படுத்துவது" - பிரணாப் முகர்ஜி

    இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) மோசடிகள் நடைபெறுவதாக வெளியாகும் செய்திகளால் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    "இது வாக்காளர்களின் தீர்ப்பை சேதப்படுத்துகின்ற நடவடிக்கை" என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, "அமைப்பின் நேர்மையை உறுதி செய்கின்ற பொறுப்பு தேர்தல் ஆணையத்தை சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.

    மேலும், "தேர்தல் ஆணையத்தின் பொறுப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிரணாப் முகர்ஜி

    பட மூலாதாரம், Getty Images

  3. VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

    1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் டிரேல் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.

    2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.

    3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

    4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.

    5."VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது

    6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.

    7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.

    8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

    9."இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

    10.இது முதன்முறையாக கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.

    VVPAT

    பட மூலாதாரம், Getty Images

  4. வாக்குப் பதிவு இயந்திரமும் ஒப்புகைச் சீட்டுகளும்

    இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தேர்வுசெய்ய, கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19ஆம் தேதி வரை, இந்திய மக்கள் வாக்களித்தனர். வாக்களிக்கும் தகுதியுள்ள 90 கோடி மக்கள் வாக்களிக்க வசதியாக இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது.

    மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது இந்திய தேசிய காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்குமா என தெரியவரும்.

    சில மாநிலங்களில் இந்த தேர்தல் போட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இல்லாமல், மாநில கட்சிகளுக்கு இடையே உள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி ஆகியவை உள்ளன.

    இந்தத் தேர்தலில், ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 30 வாக்குச் சாவடிகள் வீதம், வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை தெரிவிப்பதற்கான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன. அதனால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் சற்று தாதமதம் ஏற்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வாக்குப்பதிவு இயந்திரம்

    பட மூலாதாரம், Getty Images