மேரியோபோல் அரங்க தாக்குதல்: சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் – யுக்ரேன்

மேரியோபோல் அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • மேரியோபோல் அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் யுக்ரேன் படைகளால் மீட்க முடிந்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று யுக்ரேன் -போலாந்து எல்லைக்கு செல்லவிருப்பதாகவும் அங்கு அவர் யுக்ரேன் அகதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
    • திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது
    • கார்கீவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில், ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும், உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
    • மேரியோபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகளாகும் என மேரியோபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யா யுக்ரேனில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ “எதிர்வினையாற்றும்” என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எவ்வாறு அதற்கு எதிர்வினையாற்றும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
    • ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகள் தாமதமாக எதிர்வினையாற்றியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசிதமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இலங்கை சிறையில் இருந்து 48 நாட்களுக்கு பின் சொந்த ஊர் திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள்

    fishermen

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களையும், பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மீன் பிடி விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

    பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி 12 மீனவர்கள், மார்ச் மாதம் 7ஆம் தேதி 11 மீனவர்கள் என மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள மெரிஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் 48 நாட்களுக்கு பிறகு இன்று காலை சென்னை விமான நிலையம் வந்து அதன் பின்னர் சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.சிறையில் இருந்த வந்த மீனவர்களை அவர்களது குடும்பத்தினர் கண்ணீருடன் கட்டி தழுவி வரவேற்றனர்.

    இலங்கை சிறையில் இருந்து வந்த மீனவர் ராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், 'கடந்த 7ஆம் தேதி இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக எங்கள் மீது தாக்குதல் நடத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்'.

    'நீதிமன்றத்திற்குள் தமிழக மீனவர்கள் அனைவரையும் நிர்வாணப்படுத்தி விசாரணை செய்தனர். அது எங்களை மனதளவில் அதிகம் பாதித்தது. சிறையில் முறையாக உணவு வழங்கவில்லை, உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக கிடைத்ததை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம். ஒரு மாதத்திற்கு பின் விடுதலை செய்து கொழும்பில் உள்ள மெரிஹானா முகாமில் தங்க வைத்து இன்று சொந்த ஊர் அனுப்பி வைத்தனர்.” என மீனவர் ராஜா தெரிவித்துள்ளார்.

  3. யுக்ரேனில் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: உறுதிப்படுத்திய ஐநா

    யுக்ரேன் - ரஷ்யா போர்

    பட மூலாதாரம், Serhiy Orlov

    படக்குறிப்பு, மேரியோபோல் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதல்: கோப்புப்படம்

    யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து குறைந்தது 1,081 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

    தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் டொனியட்ஸ்க் பிரதேசம் உள்ளிட்ட தீவிர சண்டை நடைபெறும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா கூறியுள்ளது.

    போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து தகவல்களை பெறுவது கடினமாக இருப்பதால், இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட, போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.

  4. நீட் தேர்வை மறுபரிசீலனை செய்யும் யோசனை உள்ளதா? - மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்விக்கு சுகாதாரத்துறை பதில்

    மாணிக்கம் தாகூர்

    பட மூலாதாரம், MANICKAM TAGORE TWITTER

    படக்குறிப்பு, மாணிக்கம் தாகூர்: கோப்புப்படம்

    நீட் தேர்வு தொடர்பாக மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், எழுத்துப்பூர்வமாக கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    அதில்,“யுக்ரேனில் இந்திய மருத்துவ மாணவர் இறப்புக்கு பின், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததா?

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமூக வலைதளங்களில் ஏதேனும் பிரசாரம் நடைபெறுகிறதா?

    தகுதிவாய்ந்த கிராமப்புற மாணவர்களின் இறப்புகள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு அழிப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளதா?

    யுக்ரேனில் சுமார் 20,000 இந்திய மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய அரசு யோசித்துள்ளதா?” ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    இக்கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ள பதிலில், “இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019, பிரிவு 14-ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவக் கல்வி நிலையங்களில் தகுதிவாய்ந்த மாணவர்கள் சேருவதற்கு இடமளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தமாக நீட் தேர்வு உள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் இதன் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளில் மாணவர்கள் பங்கெடுப்பது இதன்மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் மாணவர்கள் நன்கு பயிற்சி பெற தேசிய தேர்வு முகமை, 'National Test Abhyas' எனும் செயலியை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இணைய மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. நீட் தேர்வுக்கான (இளநிலை மருத்துவப் படிப்பு) பாடத்திட்டம் மாநில மற்றும் தேசிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள்கள் நிபுணர்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்துகொள்ளும் விதமாக, 2021-ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது" என பதிலளித்துள்ளார்.

  5. துபாய் எக்ஸ்போ: தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் - துபாய் எக்ஸ்போ

    பட மூலாதாரம், TN DIPR/Youtube

    துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியான ‘துபாய் எக்ஸ்போ’வில் தமிழ்நாடு அரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், அந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் 31-ம் தேதி வரை தமிழக அரங்குக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரங்கில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலாச்சாரம், கைத்தறி , கைவினைப்பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் தமிழக சிறப்பினை எடுத்துக்காட்டும் வகையிலான படங்கள் இடம்பெற்றுள்ளன.

    4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ளதொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார்.

  6. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    யுக்ரேன் - ரஷ்யா

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • மேரியோபோல் அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதனை தன்னிச்சையாக சரிபார்ப்பது கடினமானதாக உள்ளது.
    • யுக்ரேன் – ரஷ்யா போர் குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய உளவுப்பிரிவு மதிப்பீடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யுக்ரேன் தலைநகர் கீயவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் யுக்ரேன் படைகளால் மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கார்கீவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில், ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும், உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று யுக்ரேன் -போலாந்து எல்லைக்கு செல்லவிருப்பதாகவும் அங்கு அவர் யுக்ரேன் அகதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஐரோப்பிய பயணத்தின் இறுதிக்கட்டமாக இங்கு செல்லவிருக்கிறார்.
    • ரஷ்யா யுக்ரேனில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ “எதிர்வினையாற்றும்” என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எவ்வாறு அதற்கு எதிர்வினையாற்றும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
    • இதற்கிடையில், ஐரோப்பா சமீப ஆண்டுகளில் நம்பியிருந்த ரஷ்ய எரிபொருள் விநியோகத்தை கைவிட முயற்சிப்பதால், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது.
    • ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 135 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. இதனிடையே, தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மேரியோபோலில் சுமார் 200 சடலங்கள் வரை புதைக்கும் அளவிலான பெரிய இடுகாடுகள் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
    • தினசரி வெடிகுண்டு தாக்குதலுக்கு மத்தியில் மேரியோபோலில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். இந்த அழிக்கப்பட்ட நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகளாகும் என மேரியோபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
  7. ஜெருசலேம் மாரத்தானில் வெற்றி பெற்ற யுக்ரேன் அகதி

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் 11 வயது மகளுடன் இஸ்ரேலில் அகதியாக தஞ்சம் புகுந்த பெண் ஒருவர், ஜெருசலேமில் நடைபெற்ற மாரத்தானில் வெற்றி பெற்றார்.

    தடகள வீராங்கணையான வேலண்டினா வெரேட்ஸ்கா, 2 மணிநேரங்கள் 45 நிமிடங்கள் 54 நொடிகள் ஓடி, மாரத்தானில் வெற்றி பெற்றார்.

    31 வயதான இவர், ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் போலாந்து சென்று, பின்னர் இஸ்ரேலில் தஞ்சம் புகுந்தார். ஆனால், அவருடைய கணவர் இன்னும் யுக்ரேன் ராணுவத்தில் பணிபுரிந்துவருவதாக, மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    ஜெருசலேமில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற 40 யுக்ரேனியர்களில் இவரும் ஒருவர். பருவத்திற்கு மாறான மழை மற்றும் குளிருக்கு இடையில் இவர் மாரத்தானில் ஓடியுள்ளார்.

    யுக்ரேனுக்கு இஸ்ரேல் மனிதநேய உதவிகளை அனுப்பியுள்ளது. ஆனால், ராணுவ உதவி வழங்குவதற்கோ அல்லது ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கோ இஸ்ரேல் மறுத்துவருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. கார்கீவ் மருத்துவ மையத்தில் ரஷ்ய தாக்குதல்: 4 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

    யுக்ரேன் - ரஷ்யா போர்

    பட மூலாதாரம், EPA

    கார்கீவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில், ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும், உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரம் கார்கீவ். இது ரஷ்ய எல்லையில் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

    “ராணுவம் அல்லாத பொதுமக்கள் கட்டடங்களில் இன்று காலை ரஷ்யப்படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைந்தனர், நான்கு பேர் உயிரிழந்தனர்,” என காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஓஸ்னோவியன்ஸ்கி எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவ மையத்தை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் தாக்கியதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

    இத்தகவலை பிபிசியால் தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

    கார்கீவை சுற்றி வளைப்பதில் ரஷ்யப்படைகளால் வெற்றியடைய முடியவில்லை எனவும், ரஷ்யப்படைகளுக்கு வெடிமருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பிபிசியின் குவெண்டின் சோமர்வில் கூறுகையில், கார்கீவில் யுக்ரேனிய படைகளின் எதிர்ப்பு ரஷ்யப்படைகளுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் ரஷ்யப்படைகள் பீரங்கி தாக்குதலுக்கு திரும்பி, அண்டை நகரங்களை அழிப்பதாக தெரிவித்தனர்.

  9. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் யார் யார்?

    யோகி ஆதித்யநாத்தின் முந்தைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த பெரிய தலைவர்கள் பலர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த இடத்தில் பிரஜேஷ் பதக் அமர்த்தப்பட்டுள்ளார்.

    இதுதவிர முந்தைய அரசில் எரிசக்தித்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீகாந்த் சர்மா இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முன்னாள் அமைச்சர் சித்தார்த் நாத் சிங்கும் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் அமைச்சரான மோசின் ரஸாவுக்கும் இம்முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. சதீஷ் மஹானா மற்றும் ஸ்வாதி சிங் உள்ளிட்ட பிரபலமான அமைச்சர்கள் கூட இந்தாரசில் இடம்பெறவில்லை. ஸ்வாதி சிங்கின் கணவர் தயாஷங்கர் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

  10. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர்?

    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், AFP

    யோகி ஆதித்யநாத் அமைச்சராக பதவியேற்ற பின் துணை முதல்வராக கேஷவ் பிரசாத் மௌரியா பதவியேற்றார். ஆனால், அவர் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தவர். எனினும், அவர்மீது நம்பிக்கை வைத்து பாஜக அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளது.

    அவருக்குப் பிறகு பிரஜேஷ் பதக் உ.பி. துணை முதல்வராக பதவியேற்றார். முந்தைய அரசாங்கத்தில் தினேஷ் சர்மா துணை முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், இந்த முறை பிரஜேஷ் பதக் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

    இரு துணை முதல்வர்கள் தவிர்த்து, யோகி அரசாங்கத்தில் 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டார்.

    இவர்களுள் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அர்விந்த் குமார் ஷர்மா, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாத் ஆகியோரும் அடங்குவர்.

    இணை அமைச்சர்களாக (தனி பொறுப்பு) பதவியேற்றவர்கள்:

    நிதின் அகர்வால்

    கபில் தேவ் அகர்வால்

    ரவீந்திர ஜெய்ஸ்வால்

    சந்தீப் சிங்

    குலாப் தேவி

    கிரீஷ் சந்திர யாதவ்

    தரம்வீர் பிரஜாபதி

    ஆசீம் அருண்

    ஜேபிஎஸ் ரத்தோர்

    நரேந்திர கஷ்யப்

    தினேஷ் பிரதாப் சிங்

    அருண் குமார் சக்சேனா

    தயாசங்கர் மிஸ்ரா

    இணை அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்:

    மயங்கேஷ்வர்சிங்

    தினேஷ் காதிக்

    சஞ்சீவ் கோண்ட்

    பல்தேவ் சிங் ஓலாக்

    அஜித் பால்

    ஜஸ்வந்த் சாய்னி

    ராம்க்ஷ் நிஷாத்

    மனோஹர் லால் மன்னு கோரி

    சஞ்சய் கங்வார்

    பிரிஜேஷ் சிங்

    கேபி மாலிக்

    சுரேஷ் ராஹி

    சுமேந்திர தோமர்

    அனூப் பிரதான் வால்மீகி

    அனூப் பிரதீபா சுக்லா

    ராகேஷ் ரத்தோர் குரு

    ராஜ்னி திவாரி

    சதீஷ் ஷர்மா

    தானிஷ் ஆசாத் அன்சாரி

    விஜய் லஷ்மி கௌதம்

  11. யோகி ஆதித்யநாத்: மக்களவையில் அழுதது முதல் மதமாற்ற தடைச் சட்டம் வரை – 10 புகைப்படங்கள்

    யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றார். அவருடைய அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள் இந்த காணொலியில் விவரிக்கப்பட்டுள்ளன.

    காணொளிக் குறிப்பு, யோகி ஆதித்யநாத்: மக்களவையில் அழுதது முதல் மதமாற்ற தடைச் சட்டம் வரை – 10 புகைப்படங்கள்
  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, உ.பி துணை முதல்வர்களாக இருவர் பதவியேற்பு

    உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.இதைத்தொடர்ந்து கேஷவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகிய இருவரும் உ.பி. மாநில துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, சுரேஷ் குமார் கண்ணா, சூரிய பிரதாப் ஷாஹி, ஸவதந்திரா தேவ் சிங், பேபி ராணி மௌரியா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    உத்தர பிரதேச அமைச்சர்களாக அர்விந்த் குமார் ஷர்மா, யோகேந்திர உபாத்யாயா, ஆஷிஷ் படேல், சஞ்சய் நிஷத், பூபேந்திர சிங் சௌத்ரி, அனில் ராஜ்பர், ஜிதின் பிரசாதா, ராகேஷ் சச்சன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, யோகி ஆதித்யநாத்: உ.பி மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார்

    உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    லக்னெளவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பேயி ஏகானா கிரிக்கெட் அரங்கில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

    எஸ்.வி.சேகர்

    பட மூலாதாரம், FACEBOOK/SVE SHEKHER VENKATARAMAN

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

    இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்தது நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

  15. இழந்த நகரங்களை மீட்க ரஷ்ய படைகளுடன் யுக்ரேன் தொடர்ந்து சண்டை – பிரிட்டன்

    யுக்ரேன் – ரஷ்யா போர் குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய உளவுப்பிரிவு மதிப்பீடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யுக்ரேன் தலைநகர் கீயவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் யுக்ரேன் படைகளால் மீட்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கீயவின் வட-மேற்கு பகுதியில் ரஷ்யப்படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அப்படைகளை திருப்பி அனுப்புவதிலும் வெற்றிகண்டு வருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், ரஷ்யாவின் விநியோக சங்கிலியும் தீர்ந்துவருவதாக அந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. மேரியோபோல் அரங்க தாக்குதல்: சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் – யுக்ரேன்

    யுக்ரேன் - ரஷ்யா போர்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனின் மேரியோபோல் நகரத்தில்நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கம் ஒன்றில் ரஷ்யப்படைகள் கடந்த வாரம் ஷெல் தாக்குதலை நிகழ்த்தின. இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    தாக்குதலுக்குள்ளான கட்டடத்தின் இடிபாடுகள் மற்றும் தொடர் ஷெல் தாக்குதல் காரணமாக, இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்ப்பது கடினமாக இருப்பதால், இதுவரை அந்த எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், மேரியோபோல் அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த அரங்கத்தில் ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதனை ரஷ்யா மறுத்துவருகிறது. மேலும், யுக்ரேன் முழுவதும் எண்ணிலடங்காத குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் ராணுவம் அல்லாத பகுதிகளில் ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதல்கள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

    “மேரியோபோலில் உள்ள நாடக அரங்கத்தில் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, நேரடி சாட்சியங்களிடமிருந்து தகவல்கள் வருகின்றன,” என அந்த அரங்க நிர்வாகம் டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

  17. திருமண உறவில் கட்டாய பாலியல் உறவுக்கு உரிமை இல்லை - நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?,

    பாலியல் வன்கொடுமை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    சமீபத்தில் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பெண்களுக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது. கணவரின் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மனைவி, அவர் மீது புகார் அளித்து, அதற்கு நீதி பெற முடியும் என்பதை கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காட்டுகிறது.

    இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள பாலியல் வன்கொடுமை பிரிவை குறிப்பிட்டு நீதிபதி எம். நாகபிரசன்னா இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார். அதில், சமத்துவத்திற்கான உரிமையை கணவர் மீறுவது குறிப்பிடப்பட்டுள்ளது (14 ஆம் சட்டப்பிரிவு). மேலும், இது (சட்டப்பிரிவு 15-1 குறிப்பிட்ட) பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்ட இடமளிக்கிறது.

    பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் ஆர்வலர்களும், சட்ட வல்லுநர்களும், இந்த தீர்ப்பை சுவாரஸ்யமானது என்றும், முற்போக்காக இருப்பதாகவும் விவரித்திருக்கின்றனர். ஆயினும், கணவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்படுவதில் இருந்து விலக்கு அளித்திருப்பதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.

  18. கண்டம்விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை: வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவிப்பு

    வடகொரியா ஏவுகணை சோதனை

    பட மூலாதாரம், NORTH KOREA STATE MEDIA

    கண்டம்விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்ததாக, வடகொரியா அறிவித்துள்ளது.

    2017-ம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா இத்தகையை கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை முதல்முறையாக வியாழக்கிழமை சோதனை செய்துள்ளது.

    அதிக தொலைவுக்கு செல்லக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணைகள், அமெரிக்கா வரை செல்லக்கூடிய அளவு திறன்படைத்தது. இந்த ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு வடகொரியா தடை விதித்திருந்தது. அதற்கு முன்பு இந்த சோதனைகளை செய்ததற்காக, அதிக தடைகளை அந்நாடு சந்தித்திருந்தது.

    இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜோங்-உன் நேரடியாக வழிநடத்தினார் என, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்தி சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்டது.

  19. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 135 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்: யுக்ரேன்

    யுக்ரேன் - ரஷ்யா போர்

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 135 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 184 சிறார்கள் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இறப்புகள் குறித்து அந்த அலுவலகம் அளித்த தகவலின்படி, லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ரூபினேவில் நடந்த மோசமான தாக்குதலில் சிறார்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

    மேளும், நேற்று வியாழக்கிழமை 6 மற்றும் 13 வயதுடைய இரு சிறார்கள் டொனியட்ஸ்க் பிராந்தியத்தின் நொவோமிக்கைலிவ்கா பகுதியில் ரஷ்யப்படைகள் நடத்திய ஷெல் தாக்குதல்களில் காயமடைந்தனர்.

    மேலும், ஸாப்போரீஷியாவில் 13, 14, 15 வயதுடைய சிறார்கள் தாக்குதலில் காயமடைந்ததாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அவர்கள் இருவரும் மெலிடோபோலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இரு சிறார்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    யுக்ரேனின் இந்த எண்ணிக்கை குறித்த தகவலை பிபிசி தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

  20. அதிகமாக தோல்வியைத் தழுவும் ரஷ்ய ஏவுகணைகள்

    வெடிக்காமல் கார்ஹிவில் இருக்கும் ராக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய ஏவுகணைகளின் தோல்வி விகிதம், 60% ஆக இருக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் பலரும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

    இந்தத் தரவுகளை நேரடியாக எங்கும் உறுதிசெய்ய முடியாதபோதும், ஒருமாத காலமாக நீடிக்கும் யுக்ரேன் மீதான தாக்குதலில், இது ரஷ்யாவுக்கு எவ்வளவு சிரமமானது என்பதைக் காட்டுகிறது.

    அமெரிக்க அறிக்கையின்படி, போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இதுவரை குறைந்தது 1100 ஏவுகணைகளையாவது யுக்ரேனுக்குள் ஏவியிருக்கும். அவற்றில் எத்தனை இலக்கை அடைந்தன என்பதை வெளியில் சொல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரஷ்யாவிடம் கேட்டதற்கு இதுவரையில் எந்த பதிலும் இல்லை.