தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,280
தமிழ்நாட்டில் அதிபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நகரங்களில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அங்கு புதிதாக 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆறு பேர் இறந்துள்ளனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜனவரி 31ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இன்று இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
இலங்கை: 56 தமிழக மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
பட மூலாதாரம், ㅤ
இலங்கையில் சட்டவிரோதமாக கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடிக்க வந்ததாகக் கூறி கைதாகி பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 56 மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 மீனவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 9 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 6 விசைப்படகுகளையும் அதிலிருந்த 43 மீனவர்களையும், அதே போல் 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகளையும் அதிலிருந்த 13 மீனவர்கள் என மொத்தம் 56 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிறகு அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு கடந்த ஒரு மாதமாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாபட்டிணம் மீனவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு விசாரணை ஏதுமின்றி சிறுவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அந்த சிறார் உட்பட 56 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்களையும் உடனடியாக தாயகம் அனுப்ப தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக மீனவர்களை விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கும் முன்பு அனைவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 43 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 4 மீனவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யுமாறும் எஞ்சியுள்ள 9 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் முடிவுகள் வந்துள்ளன.
இதையடுத்து தொற்று உறுதி செய்யப்படாத 9 மீனவர்களை கொழும்பில் உள்ள மெருஹானா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 மீனவர்கள் கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி கொரோனா சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மறு பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்ட 4 மீனவர்கள் யாழ்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் மாதிரிகளை இன்று இலங்கை சுகாதாரத்துறையினர் சேகரித்துச் சென்றுள்ளனர்.
கொரோனா பரிசோதனை முடிவின் அடிப்படையில் மீனவர்களுக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என உறுதியானால், அவர்களும் கொழும்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிறகு மீனவர்கள் ஒரே குழுவாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,280 ஆக பதிவு
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக பதிவாகியிருக்கிறது.
இதில் இலங்கை மற்றும் செளதி அரேபியாவில் இருந்து வந்த நான்கு பயணிகளும் அடங்குவர். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 98 ஆயிரத்து 130 ஆக உள்ளது.
இன்றை நாளில் மட்டும் கொரோனா பாதிப்புடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 056 பேர் வீடு திரும்பியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்துடன் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் அதிபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நகரங்களில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அங்கு புதிதாக 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆறு பேர் இறந்துள்ளனர்.
கொரோனா பரவல்: வருகை பதிவை 50% ஆக தொடர மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால், உதவிச்செயலாளர் அந்தஸ்துக்கு கீழுள்ள ஊழியர்களின் வருகை பதிவை அதிகபட்சமாக 50 சதவீதமாக வைத்திருக்க இந்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உதவிச்செயலாளர் மற்றும் அவர்களுக்கு மேல் நிலையில் உள்ள அதிகாரிகள் தினமும் வழக்கமான நேரப்படி பணிக்கு வர வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் வேலைக்கு நேரில் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவும் அவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த தஉத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி விடுதி உரிமம் நவம்பரிலேயே காலாவதி – என்சிபிசிஆர் தலைவர்
பட மூலாதாரம், Priyank Kanoongo
படக்குறிப்பு, ப்ரியங்க் கனூங்கோ, தலைவர் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
அரியலூர்
மாணவி தங்கிப் படித்த பள்ளி விடுதியின் உரிமம் நவம்பரில் காலாவதி விட்டது என்று விசாரணை
நடத்தி வரும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில்
படித்த மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த,
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியங்க் கனூங்கோ தலைமையிலான
4 பேர் கொண்ட குழு இன்று தஞ்சாவூர் சென்றனர்.
மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக எழுந்த
குற்றச்சாட்டு குறித்து, குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட
கல்வி அலுவலர் குழந்தைவேலுவிடம் முதலில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர்
குழு தலைவர் ப்ரியங்க் கனூங்கோ, மருத்துவர் கட்லி
ஆனந்த், மதுலிகா சர்மா அடங்கிய குழுவினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவியின் பெற்றோரிடம்
விசாரணை நடத்தினர். மாணவியின் சகோதரர்களிடமும் சுமார் 45
நிமிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர்
செய்தியாளர்களிடம் குழு தலைவர் ப்ரியங்க் கனூங்கோ கூறுகையில், ''பள்ளியின்
விடுதி உரிமம் கடந்த நவம்பர் மாதம் காலாவதியாகி விட்டது. உரிமத்தை புதுப்பிக்காமல்,
விடுதியை நடத்துவது, சட்டப்பட குற்றம். மாணவி
இறந்த சம்பவம் குறித்து பள்ளி மற்றும் விசாரணை அதிகாரிகள், பெற்றோர்கள்
என அனைவரிடம் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பிப்போம்'' என்றார்.
மாணவியின்
பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எங்களது மகளை இலவசமாக படிக்க வைத்து இருப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியதாக, தற்போது வந்த
அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நாங்கள் பணம் கட்டி தான் படிக்க வைத்தோம் என்பதற்கான ரசீதைக்
காண்பித்தோம்.
சிபிஐ
விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம்'' என்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சித்தி கொடுமை ஏற்பட்டதாக குழந்தைகள் நல அதிகாரிகள்
விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''அது தவறானது. அது போன்று யாரும் அதிகாரிகள் விசாரிக்க வரவில்லை.'' என்றனர்.
பட மூலாதாரம், Kalai
வட கொரியாவில் கிம் அரசு பரிசோதித்த ஏவகணை படங்கள் வெளியீடு
பட மூலாதாரம், Reuters
கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தது என வடகொரியா கூறிவரும் ஏவுகணை சோதனையின் புகைப்படங்களை அந்நாடு வெளியிட்டுள்ளது.
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட இந்த அசாதாரண புகைப்படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன.
ஐ.ஆர்.பி.எம் எனப்படும் இடைநிலை தூர பாலிஸ்டிக் வகை, ஹ்வாசோங்-12 (Hwasong-12 ) என பெயரிடப்பட்டுள்ள ஏவுகணையை சோதனை செய்ததாக திங்கள்கிழமை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
இலங்கையின் வெளிநாட்டு கடன்களால் எதிர்காலத்தில் தாக்கம்: நிபுணர்கள் கவலை
பட மூலாதாரம், Reuters
இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது என்றும் வங்கதேசத்திடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
காணொளிக் குறிப்பு, கும்பகோணம் ஸ்பெஷல் நெய் ரசம் செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் வட்டார உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணித்து வருகிறது பிபிசி தமிழ்.
அந்த வரிசையில், கும்பகோணம் ஸ்பெஷல் நெய் ரசம் செய்வது குறித்த வீடியோவைக் காணலாம்
திருச்சியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் : காவல் துறை தடுத்ததால் மறியல்
பட மூலாதாரம், AYYAKKANNU
இந்திய
அரசு அறிவித்தபடி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி டிராக்டரில்
பேரணியாக சென்ற விவசாயிகள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கோதாவரி
– காவிரி இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். தனி நபர் பயிர்காப்பீடு,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டைத் தடுக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய,
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து டிராக்டர்களில் சென்னையில் ஆளுநரைச்
சந்தித்து மனு அளிக்க புறப்பட்டனர்.
பட மூலாதாரம், AYYAKKANNU
திருச்சி – சென்னை நான்கு வழிச்சாலையில் கூத்தூரில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளை திருப்பி அனுப்பினர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: தஞ்சாவூரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
பட மூலாதாரம், kalai
தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர்
மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில்
படித்த மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த,
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ப்ரியங்க் கனுங்கோ தலைமையிலான 4 பேர் கொண்ட குழு இன்று தஞ்சாவூர்
சென்றுள்ளனர். மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக
எழுந்த குற்றச்சாட்டு குறித்து, குழு விசாரணை மேற்கொண்டு
வருகிறது.
இது
குறித்து மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைவேலு முதலில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை
நடத்துகின்றனர்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
விருதுநகர் அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் கடந்த 29ஆம் தேதி செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உற்பத்தி நிறைவடைந்து கழிவு பட்டாசுகளை கொளுத்தும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார்.
அந்த சம்பவத்தில் குபேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குபேந்திரன் நேற்று காலை உயிரிழந்தார். 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த தெய்வேந்திரன் என்பவர் இன்று உயிரிழந்தார்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மேலும் லேசான காயத்துடன் கணேச பாண்டி என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அரியலூர் மாணவி தற்கொலை: டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முற்றுகை - தடையை மீறி பாஜக, ஏபிவிபியினர் ஆர்ப்பாட்டம்
பட மூலாதாரம், Suchithra
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி வழங்கக் கோரி டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான தகவலறிந்த டெல்லி காவல்துறையினர், தமிழக அரசு விருந்தினர் இல்லம் இருந்த சாலையில் போராட்டக்குழுவினர் முன்னேறாத வகையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். . இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாஜக மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு அதனுள்ளே போராடாட்டம் செய்வோம் என்று தெரிவித்தனர்.
அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்த மத்திய துணை ராணுவத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இருப்பினும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினரில் சிலர் தடுப்புகள் மீது ஏறி தமிழ்நாடு இல்லத்துக்கு உள்ளே செல்ல முற்பட்டனர்.
இதையடுத்து, அங்கு தயார்நிலையில் இருந்த துணை ராணுவத்தினர் மற்றும் டெல்லி காவல்துறையினர், தடுப்புகளை கடந்து வந்தவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லி தமிழ்நாடு இல்லம் அமைந்த சாலை சில மணி நேரம் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது.
பட மூலாதாரம், Suchithra
மதுரையில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தை நிறுத்தி வாக்குவாதம்: பாஜகவினர் உள்ளிட்ட 6 பேர் கைது
பட மூலாதாரம், Vetri
மதுரை
தெற்கு வாசல் பகுதியில் கிறிஸ்தவ சபை கூட்ட அரங்கில் ஜெப கூட்டம் நடத்தியவர்களிடம்
வாக்குவாதம் செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பைத் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை
மாநகரம் தெற்கு வாசல் பகுதியில் தெற்கு பெருமாள் மாஸ்டர் தெருவில் நல் வாசனை ஏ.ஜி கிறிஸ்தவ
சபை உள்ளது. இதன் கூட்ட அரங்கில், நேற்று ஜெப கூட்டம்
நடைபெற்றது.
அப்போது அங்கு சென்ற பாஜக மற்றும்
இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர், கூட்டத்தை நிறுத்தி அதன் ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அங்கிருந்த நாற்காலிகளை வீசியும் தகாத வார்த்தைகளால்
திட்டியும் கூட்டத்துக்கு வந்தவர்களை வெளியேற்ற முயற்சித்ததாக சபையைச் சேர்ந்த
பிரவீன்ராஜ்குமார் என்பவர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து,
வழக்குப் பதிவு செய்த போலீசார் பா.ஜ.க ஓபிசி
அணி மாநில செயலாளர் ராஜாகண்ணன், மண்டல் தலைவர் பாலமுருகன்,
ஆதிஷேசன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அரசப்பாண்டி உள்ளிட்ட 6
பேரை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஜெப கூட்டம் என்கிற பெயரில் மதமாற்றம் நடைபெறுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
புதுக்கோட்டையில் மதமாற்ற புகார் தெரிவித்த ஆர். எஸ். எஸ் பிரமுகர் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஹெச். ராஜா மீது வழக்கு
பட மூலாதாரம், Karikalan
படக்குறிப்பு, புதுக்கோட்டை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கணேஷ் பாபு
புதுக்கோட்டை
மாவட்டம் இலுப்பூர் அருகே கிறிஸ்தவ சபை பெண்கள் இருவரை மதமாற்றம் செய்ய வந்ததாக
கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை
மாவட்டம் இலுப்பூர் அருகே திம்மயம்பட்டியை சேர்ந்தவர் பிரேமா. கர்ப்பிணியான இவரது வீட்டிற்கு
கடந்த 21ம் தேதி சமாதானபுரத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ சபை உறுப்பினர்களான ராணி, தேவ சாந்தி ஆகிய
இருவரும் ஜெபம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் சம்பந்தப்பட்ட வீட்டினரின் அனுமதியின்றி மதமாற்றம் செய்ய
வந்ததாக குற்றம்சாட்டி, அதே கிராமத்தைச் சேர்ந்தவரும்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலருமான கணேஷ் பாபு உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் தங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்களின் செல்போன்களையும் பறித்ததாக கணேஷ்பாபு மீது ராணி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இலுப்பூர் காவல் நிலைய
போலீசார், ஆர்எஸ்எஸ் பிரமுகர் கணேஷ் பாபு மீது, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிப்பு, பெண்
வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட கணேஷ் பாபு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கணேஷ்
பாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து, இலுப்பூர்
காவல் நிலையம் முன்பு அவரது உறவினர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து,
கணேஷ்பாபுவும் இலுப்பூர் காவல் நிலையம், புதுக்கோட்டை
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
ஆனால் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பொய்வழக்கில் கணேஷ் பாபுவை யேகைது செய்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் பாஜகவினர் 300க்கும்
மேற்பட்டோர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அனுமதியின்றி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது
உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஹெச். ராஜா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கோட்டை
திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பாஜக தனித்துப் போட்டி
பட மூலாதாரம், K Annamalai
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பா.ஜ.கவினர் இடையே
இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவிற்கு வராத நிலையில், அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்
இன்று கூறுகையில், ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினர் அதிக இடங்களில் போட்டியிடும் வகையில் தனித்து போட்டியிடுகிறது. அனைத்து
பகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதேநேரத்தில், தேசிய அளவில் அதிமுகவுடன்
கூட்டணி 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை தொடரும். அதிமுகவுடன் கூட்டணி முறிவு என்பதல்ல. பெரிய
கட்சியான அதிமுக, அதிமுக தலைவர்களை பாஜக மரியாதையுடன் பார்க்கிறது.'' என்றார்.
பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் - காங்கிரஸ் முடிவு
இந்திய நாடாளுமன்றத்தில், பெகாசஸ் விவகாரம் குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக காங்கிரஸ்
கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த
கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ்
கட்சியின் மக்களவைக் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருப்பதாவது, ''இந்த அரசு, மக்களவை, உச்ச
நீதிமன்றம், மக்களை தவறாக வழிநடத்துகிறது. எதிர்க்கட்சியாக, இந்தப்
பிரச்னையை எழுப்புவது எமது பொறுப்பு. இது
குறித்து பொய்களை பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆகையால் உரிமை மீறல் தீர்மானம்
கொண்டு வரவுள்ளோம்.'' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்
கே.சி வேணுகோபால், ''பெகாசஸ் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில்லை எனக் கூறி தகவல் தொழில்நுட்பத்துறை
அமைச்சர் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார். பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணத்தின்
போது பெகாசஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, இப்போது நம்பகமான செய்தித்தாள்
கூறுகிறது. அதனால்தான் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறோம்.'' என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை: மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்
பட மூலாதாரம், SansadTV
இந்தியாவின்
நடப்பு நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத்
தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியுள்ளது. குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதில், நடப்பு நிதியாண்டில்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார நிலை, வளர்சிக்கான கணிப்பு உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில்
பிற்பகலில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் பட்ஜெட்டை நாளைய தினம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பிப்ரவரி 11-ம் தேதி வரையும் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் என இரண்டு
கட்டங்களாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர் தனியார்பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி , படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை, செய்து கொண்டார். மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி, போராட்டம் நடத்தின.
மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பு இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : மநீம 6வது பட்டியலை வெளியிட்டார் கமல் ஹாசன்
பட மூலாதாரம், Kamal Haasan
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் 6வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை கடந்த 13ம் தேதி முதலில் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளிட்டார். தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது 6வது பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை.'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பேச்சுவார்த்தை முடியாமல் முதல் பட்டியலை வெளியிட்ட அதிமுக
பட மூலாதாரம், BJP4Tamilnadu-Twitter
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியாத நிலையில், முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து அதிமுக -பாஜகவினர் இடையில் நேற்று முன் தினம் 4 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடப்பங்கீடு குறித்த விவகாரத்தில் இரு கட்சியினர் இடையே இன்னும் முடிவு எட்டப்படவில்லை,
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலூர், விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வெளியிட்டனர்.
அதில், கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகள், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள், விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 29 வார்டுகள், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகள், விருதாசலம் நகராட்சியில் 33 வார்டுகள், தருமபுரி நகராட்சியில் 31 வார்டுகள், திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகள் என இவற்றில் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக - பா.ஜ.க இடையில் பேச்சுவார்த்தை தொடரும் என்று இரு கட்சித் தலைவர்களும் அறிவித்த நிலையில், அதிமுக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது