You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"எனக்கு அமைச்சர் பதவியில் ஆசை இல்லை" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

காங்கோ ஜனநாயக குடியரசில் கிறிஸ்துமஸ் நேரத்தில் கூட்டமாக இருந்த உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. மணியம்மை சிலைக்கு சேலை போர்த்திய நபர்

    சென்னையில் மணியம்மை சிலைக்கு சேலை போர்த்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணியம்மை சிலை உள்ளது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சேலையை போர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திராவிடர் கழக நிர்வாகிகள், எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், எழும்பூர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

    மணியம்மை சிலைக்கு சேலை அணிவித்ததாகக் கூறி கறுப்பு வேட்டி அணிந்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்தனர். அவர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதாகவும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்காத திராவிடர் கழக நிர்வாகிகள், ''அந்த நபரைக் கைது செய்யாமலேயே முடிவுக்கு வருவது எந்தவகையிலும் சரியல்ல, அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனப் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் கழக வழக்கறிஞர் குமாரதேவன், `` ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனச் சொல்கின்றனர். இதுபோன்ற செயல்களில் சிக்குகிறவர்கள் எல்லாம் எவ்வாறு மனநல நோயாளிகள் ஆகிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்களாக எப்படி முடிவு செய்கிறார்கள் எனவும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.

  3. மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்

    பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

    இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  4. இலங்கையரை வெளிநாட்டவர் திருமணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

    வெளிநாட்டவர்களை இலங்கையர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாயின், அதற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியினைப் பெற்றுக்கொள்தல் வேண்டும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.பதிவாளர் நாயகம் டப்ளியு.எம்.பி. வீரசேகர வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் ஒன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு நபர் மற்றும் இலங்கை நபருக்கிடையிலான விவாகத்தினைப் பதிவு செய்வதனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதனைத் தடுத்தல் மற்றும் சமூக சிக்கல்கள் ஏற்படுவதனைக் குறைத்தல் சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்பிரகாரம் வெளிநாட்டவர் சம்பந்தமான 'பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை'யினை இலங்கையில் பெற்றுக் கொண்டு, மேலதிக மாவட்டப் பதிவாளரினால் மாத்திரம் அந்த விவாகம் பதிவு செய்யப்படுதல் வேண்டும் எனவும் பதிவாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

    எனவே, திருமணம் செய்யவுள்ள வெளிநாட்டுப் பிரஜை, தமது நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரியினால் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட 'குற்றவாளி அல்ல' எனும் சான்றிதழை, இலங்கையின் பதிவாளர் திணைக்களத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

    இதனைக் கொண்டு 'பாதுகாப்பு தடை நீக்கல் அறிக்கை'யினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அந்த அறிக்கைக்கு இணங்கவே, திருமணத்துக்கான அனுமதி வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் பதிவாளர் நாயம் தெரிவித்துள்ளார்.

    இதற்கு மேலதிகமாக, திருமணம் செய்யவுள்ள வெளிநாட்டவரின் சுகாதார நிலைமை தொடர்பான பிரகடனமும் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறையானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.

  5. சன்னி லியோனுக்கு 3 நாட்கள் கெடு விதித்த ம.பி பாஜக அமைச்சர்

    சன்னி லியோன் நடனத்தில் 'சரிகமா மியூசிக்' நிறுவனம் வெளியிட்டுள்ள ''மதுபன் மே ராதிகா'' எனும் பாடல் காணொளியை மூன்று நாட்களுக்குள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கெடு விதித்துள்ளார்.

    இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அந்தப் பாடலில் நடனம் ஆடிய சன்னி லியோன் மற்றும் இசை அமைத்த சாகிப் டோஷி ஆகியோருக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இவ்வாறு கெடு விதித்துள்ளார்.

    1960ஆம் ஆண்டு வெளியான ''கோகினுர்'' எனும் இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் ரீமேக் சரிகமா நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இந்துக் கடவுள்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை இடையேயான காதலை விவரிக்கும் வகையில் இந்தப் பாடல் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். பாடகர்கள் கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்கரவர்த்தி ஆகியோர் புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

    இந்தப் பாடலின் காட்சிகளில் சன்னி லியோன் ''ஆபாசமாக நடனமாடி உள்ளதாக'' ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். சமூக ஊடகங்களிலும் இதற்கு எதிரான பல பதிவுகள் வெளியாகி வருகின்றன.

  6. 'நாங்கள் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள்' - சீமான்

    20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யவும், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

    திமுகவினர் தங்களை எதிர்ப்பதை வரவேற்பதாகவும், வடசென்னை படத்தில் வருவதுபோல, இது என் நாடு, என் நிலம் என்று அதை பாதுகாப்பதற்காக நாங்கள் சண்டை செய்யணும் இல்லையா என்றார் சீமான்.

    ''பிரபாகரன் பிள்ளைகளான நாங்கள் கொடி பிடிப்பதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பயந்தால் என்ன ஆவது? அவர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதியை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். எனவே எனக்கு அவர்களை விட கூடுதல் திமிர் இருக்கிறது'' என்றார்.

    நான் செருப்பு காட்டியதை, சாதாரணமாக விட்டு விட கூடாது என்று திருமாவளவன் பேசியிருக்கிறார். நான் அவருக்கு எதிராக காட்டவில்லையே. அவர் எனக்கு எதிராக பேசலாம். நான் அவருக்கு எதிராக பேசுவதில்லை. இனியும் பேச போவதில்லை என்றார்.

    குஜராத்தில் மீனவர்கள் மீது காட்டும் அக்கறையை தமிழக மீனவர்கள் மீதும் மத்திய அரசு காட்ட வேண்டும் என்றார் சீமான்.

  7. ஏமன் நாட்டிற்குச் சென்று வந்த பொறியாளர் மதுரையில் கைது

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் உதய குமார் (வயது 29).

    பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்குச் சென்று துபாயிலிருந்து ஜோர்டான் நாட்டிற்குச் சென்றார்.

    அங்கிருந்து டூரிஸ்ட் விசா மூலம் ஏமன் நாட்டிற்குச் சென்று பிளான்ட் ஆபரேட்டர் ஆக பணி புரிந்துள்ளார்.

    மத்திய அரசு விதிமுறைகளின்படி, தடைசெய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டிற்கு இந்தியர்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அங்கு சென்று வருபவர்களைக் கைது செய்து கண்காணிக்கும் பணி நடைமுறையில் உள்ளது.

    தடையை மீறி உதயகுமார் சென்று அங்கு 3 ஆண்டுகள் பணி புரிந்தவர் என்பதைத் தொடர்ந்து, குடியேற்றத் துறை அதிகாரிகள் மற்றும் அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து தடை செய்யப்பட்ட நாட்டிற்குச் சென்றது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஏமன் பயங்கரவாதிகளால் கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் 2016-ம் ஆண்டில் இருந்து ஏமன் நாட்டிற்குச் செல்ல தடை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

  8. "எனக்கு அமைச்சர் பதவியில் ஆசை இல்லை" - கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் முகாமில் இன்று திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல முக்கிய திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கோவை மக்கள் குசும்பு மட்டுமல்லாமல் ஏமாற்றமும் அளிப்பவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு கோவையில் இரண்டு நாட்கள் தங்கி பிரச்சாரம் செய்தேன். ஐந்து தொகுதிகளிலாவது வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தேன்.

    ஆனால் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லவில்லை. இனி வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை மக்கள் திரும்பவும் திமுகவை ஏமாற்ற மாட்டார்கள் என நம்புகிறேன்.

    எனக்கு தொகுதிக்கு 10,000 பேரை திமுகவில் சேர்க்கவேண்டும் என இலக்கு தரப்பட்டு, 24 லட்சம் பேரை இணைத்துள்ளோம். திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சேர்ந்து 2 கோடி பேரை திமுகவில் சேர்க்கவேண்டும் என்ற இலக்கு தரப்பட்டுள்ளது.

    என்னை அமைச்சர் ஆக்கவேண்டும், துணை முதல்வர் கூட ஆக்கவேண்டும் எனப் பலர் சொல்கிறார்கள். எனக்கு பொறுப்புகளின் மீது ஆசை இல்லை. மக்கள் பணியில் ஈடுபடவே விரும்புகிறேன். மக்களுக்கும் முதல்வருக்கும் துணையாக ஒரு பாலமாகவே செயல்பட விரும்புகிறேன்" என்றார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கவேண்டும் என அமைச்சர்கள் பலரும் சமீப காலங்களாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

  9. “நீட் தேர்வு மரணங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!” - தி.மு.க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

    `நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்' என முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினோம். உள் ஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு மாணவியின் தந்தை பேசியபோது, `இனி தனது குடும்பத்தினரை தான் வசிக்கும் பகுதி மக்கள் டாக்டர் குடும்பம்' எனப் பெருமையுடன் அழைப்பார்கள் எனப் பேசியதை நினைவு கூர்கிறேன்.

    தேர்தலின்போதும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோதும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தி.மு.க தெரிவிக்காமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியலாக்கியதே மாணவர்களின் மன உளைச்சலுக்குக் காரணம். இனியாவது உண்மைநிலையைக் கூறி நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரையில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சியினை உடனடியாகத் தொடங்க அரசை வலியுறுத்துகிறேன்.

    மேலும் தஞ்சாவூர் மாணவி துளசியின் பள்ளிச் சான்றிதழை திரும்ப வழங்காத தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். தி.மு.க அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்துகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

  10. "தேனிலவு காலம் முடிந்த பிறகே தாக்குதல்" - தி.மு.கவை விமர்சித்த எல்.முருகன்

    மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து சொல்லும்போது அவர்களைத் தாக்குவது, கைது செய்வது என தி.மு.கவினர் செயல்படுவதை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகத்தான் பார்க்கிறேன்' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், ``நாம் தமிழர் கட்சியின் மேடையில் எதிர்க்கருத்து பேசியதற்காக தி.மு.கவினர் மேடையேறிச் சென்று தாக்குதல் நடத்தியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்குப் பதில் அளித்த எல்.முருகன், ``தி.மு.கவினருக்கு இது வாடிக்கை. இதை அவர்கள் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். இது தி.மு.கவின் ரத்தத்தில் ஊறிப் போன ஒன்றுதான். கருத்து சுதந்திரத்தை அவமதிப்பது, ஒருவர் கருத்து சொல்கிறார் என்றால் அவரைக் கைது செய்வது எனத் தொடர்ந்து செய்கின்றனர்.

    அதேநேரம், தி.மு.க மற்றும் அதன் சார்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எதாவது கருத்தைச் சொன்னால் ஆட்சியில் உள்ளவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து சொல்லும்போது அவர்களைத் தாக்குவது, கைது செய்வது ஆகியவற்றை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகத்தான் பார்க்கிறேன்" என்றார்.

    ``ஆனால், நீதியிலும் பெண்கள் பாதுகாப்பிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிராக பா.ஜ.கவினர் விமர்சனம் செய்கிறார்களே?" எனக் கேட்டபோது, `` தி.மு.க ஆட்சியில் தேனிலவு காலம் முடிந்த பிறகுதான் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. இன்னும் பல்வேறு தாக்குதல்களைத் தொடங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்," என்றார்.

    முரசொலி அலுவலகத்தின் இடம் தொடர்பான மூலப்பத்திரம் சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, `` முரசொலி நிலம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அந்தப் பத்திரத்தைக் காட்டுங்கள் எனக் கேட்டதற்காக என் மீது வழக்குப் போடுகிறார்கள் என்றால் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய சொந்தங்களுக்கு உரிமை பெற்றுத் தர வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.

  11. சென்னை: 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள்

    கடந்த காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்கிய 144 பகுதிகளில் 120 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் 120 கோடி ரூபாயில் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையைத் தொடர்ந்து, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும், அதுகுறித்த டிவிட்டர் பதிவில், “கடந்த ஆண்டுகளில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்களைக் கண்டறியப்பட்டுள்ளது.

    அந்த இடங்களில் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களின் ஆலோசனைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும்.

    அவர்களுடைய ஆலோசனைகளின்படி, விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும் பழுதடைந்த வடிகால்களைப் புணரமைக்கவும் தேவையான இடங்களில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்யப்பட்டு, விரிவான திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன,” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  12. சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி

    சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ''39 பேரும் தொற்றுக்கான அறிகுறிகள் அற்றவர்களாக உள்ளனர். தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாதிப்பு உள்ளது'' என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன். என்ன நடந்தது?

    சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அந்த நோயாளிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, அந்த நோயாளிக்கான அறுவை சிகிச்சையில் பங்கெடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு `எஸ் ஜீன்' எனப்படும் ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  13. நாகாலாந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை மறு ஆய்வு செய்ய இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

    நாகாலாந்து அரசு வெளியிட்டுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

    கடிதத்தில் நாகாலாந்து முதல்வர் நிபு ரியோ, துணை முதல்வர் ஒய் பட்டன் மற்றும் நாகா மக்கள் முன்னணி சட்டமன்றக் கட்சி தலைவர் டி.ஆர். செலியாங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

    இதுகுறித்து, “நாகாலாந்தின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 23-ம் தேதியன்று ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் நாகாலாந்து மற்றும் அசாம் முதல்வர்கள் உட்பட மற்றவர்களும் பங்கேற்றார்கள். அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அங்கிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

    மேலும், அதுகுறித்து நாகாலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “45 நாட்களில் அந்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின்படி, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்த முடிவு எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

  14. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் மூன்று மோசடி புகார்கள் அவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    விருதுநகர் மாவட்ட காவல்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மோசடிப் புகார்கள் குறித்து தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், “கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சிவகாசி சித்துராஜபுரம் பகுதியச் சேர்ந்த ஒருவருக்கு ஏ.பி.ஆர்.ஒ வேலை வாங்கித் தருவதாக 7 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

    மேலும் மதுரை வில்லாபுரம் பகுஹியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக 7 லட்சம் ரூபாயும் கடலூர் மாவட்டத்தில் தரணிதரன் என்பவருக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.

    இதுதொடர்பாக விருந்துநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், புகார் குறித்துவிசாரணை நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

  15. கிருமி ஆயுதம்: 1933ல் இந்தியாவில் நடந்த ஜமீன்தார் கொலை - உலகமே கவனித்த வழக்கு

    1933 நவம்பர் 26ஆம் தேதி மதியம், உருவத்தில் சிறிய மனிதர் ஒருவர், ஓர் இளம் ஜமீன்தாரை கொல்கத்தா (அன்று கல்கத்தா) ரயில் நிலையத்தில் சட்டென உரசிச் சென்றார்.

    20 வயதான அமரேந்திர சந்திர பாண்டேவின் வலது கையில் ஊசி குத்தியது போல ஒருவித வலி ஏற்பட்டது. காதி ஆடை அணிந்திருந்த அந்த மனிதர் ஹவுரா ரயில் நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கரைந்து போனார்.

    மூன்று நாட்கள் கழித்து, காய்ச்சலோடு கொல்கத்தா திரும்பினார் அமரேந்திரா. அவரை பரிசோதித்த மருத்துவர், அவரை குத்தியதாக கருதப்படும் இடத்தில் ஹைபோடெர்மிக் ஊசி குத்தப்பட்டது போன்ற தடத்தைக் கண்டார்.

    அடுத்த சில நாட்களில் அவரது காய்ச்சல் அதிகரித்தது. டிசம்பர் 3ஆம் தேதி அமரேந்திரா கோமாவுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை அவர் உயிர் பிரிந்தது.

    அவர் மரணத்துக்குப் பின் வந்த ஆய்வறிக்கை, அவர் ரத்தத்தில் யெர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) என்கிற அபாயகரமான பாக்டீரியா இருந்ததாக கூறியது. இந்த பாக்டீரியா தான் பிளேக் நோய்க்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் கட்டுரையை முழுவதுமாக வாசிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

  16. பாம்புக் கடிக்கு உள்ளான சல்மான் கான்

    இன்று காலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், பான்வெல்லில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இருந்தபோது அவரைப் பாம்பு கடித்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

    சல்மான் கானை கடித்தது நஞ்சில்லாத பாம்பு என்பதால் ஆபத்து எதுவுமில்லை. சம்பவம் நடந்த உடனே கமோத்தியில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட சில மணிநேரங்களில் திருப்பி அனுப்பப்பட்டார்.

    அவர், தற்போது பாம்புக் கடியிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்னமும் சல்மான் கான் அல்லது அவரது குழுவினர் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

    சல்மான் கான், திங்கள் கிழமை தன்னுடைய 56-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். அதற்கான கொண்டாட்டத்திற்காக தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்தபோதுதான் இது நடந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி தெரிவித்துள்ளது.

  17. கொரோனா: இமாச்சலப் பிரதேசத்தில் முதல் ஒமிக்ரான் பாசிட்டிவ்

    டிசம்பர் 18-ம் தேதியறு கனடாவில் இருந்து திரும்பி வந்த நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

    அவரோடு நெருக்கமான தொடர்பில் இருந்த மூவரிடம் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், பி.டி.ஐ செய்தியின்படி மத்தியப் பிரதேசத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதுவரை 422 ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி கூறுகிறது.

  18. இலங்கை: ஜனவரி முதல் வீட்டுத் தோட்டங்களில் விவசாயம் செய்யுமாறு அரசு கோரிக்கை

    எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் உடனடியாக விவசாய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    அனைத்து வீட்டுத் தோட்டங்களிலும் மிளகாய், கத்தரிக்காய், கீரை வகைகள் போன்ற குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்தாவது செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது, இவ்வாறான பாரிய சிக்கல்கள் இல்லாத போதிலும், பாரிய உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

    இலங்கையில் எதிர்வரும் ஆண்டு பாரிய உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

    எனினும், எதிர்வரும் ஆண்டு எந்தவிதத்திலும் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தான் உறுதியாகக் கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

  19. கோவிட் தடுப்பூசி: 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி

    இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு சனிக்கிழமை அன்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரக்கால அடிப்படையில் 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அளித்துள்ள கடிதத்தில், “18 வயதுக்கு உட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் இந்த வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடைய உடல்நிலை தொடர்பான தரவுகள், தடுப்பூசி குறித்த முழுமையான அறிக்கை, இடர் மேலாண்மை போன்ற தகவல்களைப் பகிரவேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவசரக்கால அடிப்படையில் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்குச் செலுத்தலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.

  20. திருநங்கை நட்சத்திரம்: ரயில் பயணிகளுக்காக நடனமாடிய பூஜா ஷர்மா பிரபலமான கதை

    தயாரிப்பு: மது பால் & ருபாயத் பிஸ்வாஸ்.

    ரயிலில் பயணிகளுக்காக திருநங்கை பூஜா ஷர்மா ரேகா நடனமாடிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் அவருடைய நடனத்தை வீடியோ எடுத்தார். அவருடைய நடனம் மக்களுக்குப் பிடித்துப் போகவே உடனே வைரலானார். மக்களிடம் அதற்காக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கும் பூஜா, தனக்குத் தேவை பணம் இல்லை, அன்பும் மரியாதையும் மட்டுமே என்கிறார்.

    “நான் ரேகாவை நினைவுபடுத்துவதாக வயதான பெண்கள் கூறுவார்கள். தற்போது என்னை அனைவரும் பூஜா ஷர்மா ரேகா என்று அழைக்கின்றனர். பூஜா ஷர்மா பெயருடன் ரேகா என்ற பெயர் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பயணிப்பவர்களிடமிருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், எனக்குத் தேவை அன்பும் மரியாதையும் தான். என்னை மக்கள் மனப்பூர்வமாக விரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.”